10ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

10ஆம் பத்து 8ஆம் திருமொழி

கலிவிருத்தம்

1922

காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து,

தாதுநல் லதண்ணந் துழாய்கொ டணிந்து,

போது மறுத்துப் புறமேவந் துநின்றீர்,

ஏதுக்கிது என்னிது என்னிது என்னோ. (2) 10.8.1

1923

துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,

கவராக முடித்துக் கலிக்கச்சுக் கட்டி,

சுவரார் கதவின் புறமேவந்து நின்றீர்,

இவரா ரிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.2

1924

கருளக் கொடியொன் றுடையீர். தனிப்பாகீர்,

உருளச் சகடம துறக்கில் நிமிர்த்தீர்,

மருளைக் கொடுபாடி வந்தில்லம் புகுந்தீர்,

இருளத் திதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.3

1925

நாமம் பலவு முடைநா ரணநம்பீ,

தாமத் துளவம் மிகநா றிடுகின்றீர்,

காம னெனப்பாடி வெந்தில்லம் புகுந்தீர்,

ஏமத் திது வென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.4

1926

சுற்றும் குழல்தாழச் சுரிகை யணைத்து,

மற்றும் பலமாமணி பொன்கொ டணிந்து,

முற்றம் புகுந்து முறுவல்செய்து நின்றீர்,

எற்றுக் கிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.5

1927

ஆனா யரும்ஆ னிரையுமங் கொழியக்,

கூனாய தோர்கொற்ற வில்லொன்று கையேந்திப்,

போனா ரிருந்தா ரையும்பார்த்துப் புகுதீர்,

ஏனோர்கள் முன்னென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.6

1928

மல்லே பொருத திரள்தோல் மணவாளீர்,

அல்லே யறிந்தோம்_ம் மனத்தின் கருத்தை,

சொல்லா தொழியீர் சொன்னபோ தினால்வாரீர்

எல்லே யிதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.7

1929

புக்கா டரவம் பிடித்தாட்டும் புனிதீர்,

இக்காலங்கள் யாமுமக் கேதொன்று மல்லோம்,

தக்கார் பலர்த்தேவி மார்சால வுடையீர்,

எக்கே. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.8

1930

ஆடி யசைந்தாய் மடவா ரொடுநீபோய்க்

கூடிக் குரவை பிணைகோ மளப்பிள்ளாய்,

தேடித் திருமா மகள்மண் மகள்நிற்ப,

ஏடி. இதுவென் னிதுவென் னிதுவென்னோ. 10.8.9

1931

அல்லிக் கமலக் கண்ணனை அங்கொராய்ச்சி

எல்லிப் பொழுதூ டியவூடல் திறத்தை,

கல்லின் மலிதோள் கலியன் சொன்ன மாலை,

சொல்லித் துதிப்பா ரவர்துக்க மிலரே (2) 10.8.10

Leave a Reply