திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

 

திருமழிசையாழ்வார் அவதாரம்…

பிரம்மதேவன் மூலம் இந்தத் தலத்தின் சிறப்பைக் கேட்டறிந்த பார்க்கவர் முதலிய சில முனிவர்கள் அந்தத் தலத்தில் வந்து தவம் செய்யலாயினர். பார்க்கவ முனிவர் திருமாலை நோக்கி தீர்க்கசத்திரயாகம் புரிந்தார். அந்த நேரத்தில்தான், கந்தர்வப் பெண்ணான அவருடைய மனைவியார் கருவுற்று தைத் திங்களில் மகம் நாளில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு இடைப் பகுதியில்) ஒரு பிள்ளையைப் பெற்றார். கைகால்கள் இல்லாது பிண்ட உருவில் அந்தப் பிள்ளை பிறந்தது. அதனைக் கண்ட முனிவரும் அவரது மனைவியாரும் மிகுந்த வருத்தமுற்றார்கள். வேறு வழியின்றி அப்பிள்ளையைப் பிரம்புப் புதர் ஒன்றின் கீழ் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

பகவானின் அருளால், அந்தப் பிண்ட உருவத்தில் இருந்து, சுயமாக ஓர் அழகிய குழந்தை உருப்பெற்று வெளிவந்தது. அந்தக் குழந்தைக்கு உணவு தரவேணுமே! அதற்கும் நாராயணனே வழி செய்தான். ஞான சம்பந்தருக்கு அன்னை உமையாளே அமுதூட்டியதுபோல், இந்தக் குழந்தைக்கு நேரே ஒரு தேன்கூட்டை வைத்து, அந்தக் குழந்தையின் பசியைப் போக்கினார் லட்சுமி சமேதராக அங்கு வந்த நாராயணன். அந்தத் தெய்வீகத் தேனருந்தி வளர்ந்த காரணத்தால்தான் பின்னாளில் தேனினும் இனிய சந்தப் பாக்களை அவர் இயற்றித் தந்திருக்கிறார் போலும்!

இப்படித் தேனுண்டு பசி தீர்ந்த அந்தப் பிள்ளையை, பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் என்பவன் பிரம்பு அறுத்துப் போவதற்காக அங்கே வந்தபோது கண்டான். தன்னந்தனியாக அழகான குழந்தை ஒன்று அந்தப் பிரம்புப் புதரில் அழுவதைக் கண்டதும் பரிவோடு அள்ளியெடுத்தான். அந்தக் குழந்தையின் பெற்றோர் பக்கத்தில் எங்கேனும் இருக்கின்றனரா என்று சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். யாரும் கண்ணில் தட்டுப்படாததால், பிள்ளையில்லாத தன்னுடைய குறையைத் தீர்ப்பதற்காகவே இறைவன் இக் குழந்தையைக் கொடுத்தருளியிருக்கிறான் என்று எண்ணி, பெருமகிழ்வோடு வீட்டுக்கு எடுத்துச் சென்றான். தன் மனைவியான பங்கயச் செல்வியிடம் குழந்தையைக் கொடுத்து, அந்தக் குழந்தை கிடைத்த விவரத்தையும் கூறினான்.

நம்முடைய குறை இன்றே தீர்ந்தது. இந்தக் குழந்தைதான் எத்தனை அழகுடன் இருக்கிறது. இனி நாம் பிறந்ததின் பயனை அடைந்தவர்களானோம் என்று குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தான். ஆனால் குழந்தை எதுவும் உண்ண மறுத்தது. பங்கயச் செல்வித் தாய் உள்ளத் தவிப்போடு பால் புகட்ட முயன்றும் குழந்தை அப்பாலைக் குடிக்க மறுத்தது. அந்த அறியாப் பருவத்திலேயே உணவின் மீதான பற்றைத் துறந்தது. பங்கயச் செல்விக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. அந்தக் குழந்தையோ வெகுநாள் வரை பால் உண்ணாமலும் சிறுநீர் கழிக்காமலும் அப்படியே இருந்து வந்தது. திருவாளனும் அவன் மனைவியும் மனம் வருந்தினர்.

அந்தக் குழந்தை பால் உண்ணவில்லையே தவிர, அதன் மேனி சிறிதும் வாட்டமடையவில்லை! பூரண வளர்ச்சியோடு மேன்மேலும் பொலிவுற்றது. அதைக் கண்டு அவர்களிருவரும் பெரும் வியப்படைந்தார்கள். இந்தச் செய்தி ஊர் மக்களுக்குப் பரவியது. அவர்கள் ஒவ்வொருவரும் வந்து அந்தக் குழந்தையைப் பர்த்துவிட்டு இது தெய்வக்குழந்தை என்று போற்றிச் சென்றார்கள். திருமழிசை இறைவன் அருளால் தோன்றிய அந்தக் குழந்தையைத் திருமழிசைப்பிரான் என்ற பெயராலாயே கூப்பிட்டுக் கொண்டாடினார்கள்.

 

Leave a Reply