திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

 

திருமழிசையில் ஞானியராக வயதான தம்பதி ஒருவர் இருந்தனர். தாழ்குலத்தில் பிறந்திருந்தாலும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அந்தப் பெரியவர்கள், திருமகள் நாதனான ஸ்ரீமந் நாராயணன் மீது நீங்காத பக்தி செலுத்தி வந்தனர். அவர்களுக்கும் பிள்ளையில்லாக் குறை இருந்தது. பால் உண்ணாத அதிசயக் குழந்தையைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்ட அவர்கள், உடனே பசுவின் பாலை இனிய சுவை கொள்ளும்படியாகக் காய்ச்சி ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையைப் பார்க்க வந்தனர். குழந்தையைப் பார்க்கப் போகும்போது வெறுங்கையுடன் செல்லக்கூடாது என்பதால், கையில் பால்கிண்ணத்தோடு வந்தனர். அந்தக் குழந்தையை நோக்கி, செல்வமே! இந்தப் பாலைக் குடித்து என் குறையைக் போக்கியருள வேண்டும் என்று விண்ணப்பித்தனர். அதற்குத் தாம் கொண்டு வந்திருந்த பாலையும் புகட்டினார். குழந்தையும் புன்சிரிப்பு பூத்து அந்தப் பாலை விரும்பி அருந்தியது.

இதைக் கண்ட பங்கயச் செல்வி வியப்புற்றாள். தன் மார்பிலே சுரந்த பாலைக் குடிக்காமல் இவர்கள் கொண்டுவந்த பாலைக் குடிக்கிறதே. சரி, எப்படியாவது இந்தக் குழந்தை ஏதாவது உண்டால் சரிதான் என்று எண்ணிய அவள், தன் கணவரிடம், இனி தினமும் அந்தப் பெரியவரை நம் குழந்தைக்கு பால் கொண்டுவந்து ஊட்டும்படி சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டாள். திருவாளனும் அவரிடம், ஓபெரியவரே நீங்களே நாள்தோறும் எங்கள் குழந்தைக்கு பால்கொண்டுவந்து கொடுத்து எங்கள் மனவருத்தத்தைப் போக்க வேண்டும்ஔ என்று வேண்டிக்கொண்டான். அவரும் அதற்கு இணங்கி அன்று முதல் நாள்தோறும் தன் வயதான மனைவியுடன் குழந்தைக்கு காய்ச்சிய பால் கொண்டு வந்து கொடுத்தார். குழந்தையும் புன்சிரிப்போடு பருகி மகிழ்ந்தது.

இப்படியிருக்கையில் ஒருநாள் அம்முதியவர் கொண்டுவந்த பாலில் ஒரு பகுதியை மட்டும் குடித்துவிட்டு சிறிது மீதி வைத்தது. அப்படி எஞ்சிய பாலை அம்முதியவரும் அவருடைய மனைவியும் அருந்தினால் பிள்ளையில்லாக் குறை தீரும் என்று தன் கடைக்கண் குறிப்பினால் அந்தப் பெரியவருக்கு உணர்த்தியது. அவரும் அதுபோலவே தம் மனைவியோடு சேர்ந்து மிச்சமிருந்த பாலை அருந்தினார். ஆச்சரியப்படும் விதத்தில், வயது முதிர்ந்த அந்தத் தம்பதிக்கு மீண்டும் புத்திளமை மலர்ந்து உடலெங்கும் இளமையுணர்வும் உற்சாகக் குறுகுறுப்பும் பரவின. அதன் விளைவாக தம்பதி கூடி மகிழ்ந்ததும், மனைவி கர்ப்பம் தரித்தாள். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். பெற்றோர் அக்குழந்தைக்கு கணிகண்ணன் என்று பெயரிட்டனர். அக்குழந்தை கணிகண்ணனே திருமழிசைப்பிரானுக்குத் தோழனாகி, பிற்காலத்தில் அவருக்கு சீடனாகவும் விளங்கினார்.

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் வேறு ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்த கண்ணனைப் போல், பார்க்கவ முனிவரின் மனைவிக்கு மகனாகப் பிறந்து, வேடர் குலத்து பங்கயச் செல்விக்கு வளர்ப்பு மகனாகவே வளர்ந்தார் திருமழிசையாழ்வார்.

 

Leave a Reply