திருமழிசையாழ்வார் சரிதம்

திருமழிசையாழ்வார்

 

யோகியான திருமழிசையாழ்வார்…

திருமழிசையார் முன்போலவே யோகத்தில் இருந்தார். அப்போது மாய மந்திர வித்தைகளில் வல்லவரான சுத்திகாரன் என்னும் சித்தன் ஒருவன் ஒரு புலியின் மீது அமர்ந்து வான் வழியில் சென்று கொண்டிருந்தான். அந்தப் புலி திருமழிசையாழ்வார் யோகம் புரியும் இடத்துக்கு வந்ததும் மேலே செல்லாமல் தயங்கி நின்றது. அதைக் கண்டதும் மந்திர சித்தன் வியப்புற்று விண்வெளியிலே நான்கு பக்கங்களிலும் பார்த்தான். பிறகு பூமியையும் நோக்கினான். திருமழிசையார் யோகத்தில் இருப்பதைக் கண்டு அவருடைய சக்தியால்தான் தன் புலி அவரைத் தாண்டிப் போகவில்லை என்பதை உணர்ந்தான்.

உடனே கீழே இறங்கி அவர் முன் வந்து நின்றான். அவர் சிதைந்த ஆடை உடுத்தியிருப்பதைப் பார்த்ததும் சுத்திகாரன் தன்னுடைய மந்திர வித்தையின் வலிமையால் நல்லாடை ஒன்றைத் தோற்றுவித்து அருந்தவச் செல்வரே! இவ்வாறு கந்தல் ஆடையைத் தாங்கள் உடுத்தியிருக்கலாமோ? நான் தரும் அருமையான ஆடையை வாங்கி உடுத்திக் கொள்ளுங்கள் என்றான்.

திருமழிசைப்பிரான் அதை வாங்காமல் புன்சிரிப்பு பூத்து தம் யோக வலிமையினால் மாணிக்க மயமாக மின்னும் பொன்னாடை ஒன்று உருவாக்கிக் காட்டினார். சுத்திகாரன் வியந்தான். அவன் தன் கழுத்திலிருந்த ரத்தின மாலையைக் கழற்றி, ஓஇதை உங்கள் ஜப மாலையோடு சேர்த்து வைத்துக் கொள்ளும்ஔ என்றான். திருமழிசையாரோ மறுபடியும் புன்முறுவலோடு தன் கையிலிருந்த துளசி மாலையையே அந்த சித்தனின் ரத்தினமாலையை விடப் பன்மடங்கு பேரொளி வீசும் மணிமாலையாக மாற்றிக் காண்பித்தார். அதைக் கண்டதும் சுத்திகாரன் மிகவும் வெட்கமடைந்தான். பின்னர் அவருடைய பெருந்தவச் சிறப்பைக் கண்டு, அவரைப் போற்றி வணங்கிவிட்டு அம்மாலையைப் பெற்றுக்கொண்டு விடைபெற்றான்.

முன்போலவே திருமழிசைப்பிரான் பரந்தாமனைத் தியானித்தபடி யோகத்தில் அமர்ந்திருந்தார். கொங்கண சித்தன் என்னும் ரசவாதி ஒருவன் அவருடைய பெருமைகளைக் கேள்விப்பட்டு அவரிடம் வந்து வணங்கினான்.  ஞான யோகியாரே! கோடி இரும்பையும் பொன்னாக்கவல்ல ஒரு குளிகை தங்களுக்குத் தருகிறேன். இதை என் பரிசாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஒரு ரசவாத குளிகையை நீட்டினான்.

அதைக்கேட்ட திருமழிசையார், தம் உடம்பில் படிந்துள்ள புழுதியையும் காதின் குறும்பியையும் திரட்டியெடுத்து, ஒரு சிறு உருண்டையாக உருட்டி, ஓஇந்தக் குளிகை கோடானுகோடி கருங்கற்களையும் செம்பொன்னாக்கும்ஓ என்று கூறி அவனிடம் கொடுத்தார்.

அதை வாங்கிய அவன் ஒரு கருங்கல்லை எடுத்துப் பரிசோதித்தான். அது அப்படியே செம்பொன்னாக மாறியது. அதைக் கண்டதும் அந்த ரசவாதி வியப்படைந்து தன் தவறை உணர்ந்தான். நான் கற்ற வித்தை அனைத்தும் உங்கள் ஆற்றலின் முன் தூசிக்கு சமனாகும். நான் அகம்பாவத்தால் அறியாமல் செய்த பிழையைப் பொருத்தருளுவீராக! என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

இப்படி யோக நிலையைச் சோதிக்கும் நிகழ்வுகளால் திருமழிசையார் அவ்விடத்தை விட்டு அகன்று, ஒரு மலையின் குகைக்குச் சென்று தியான யோகத்தில் அமர்ந்தார். அப்போது முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் தலயாத்திரை செய்து கொண்டிருந்தார்கள். திருமழிசையார் யோகத்தில் அமர்ந்திருந்த குகைக்கு அருகில் உள்ள ஊரை அவர்கள் வந்தடைந்தபோது, ஒரு பேரோளி அவர்களைக் கவர்ந்திழுத்தது. அதைக் கண்டு அவர்கள் மூவரும் வியப்பெய்தினார்கள். பேரொளி எங்கிருந்து வருகிறது? தொடர்ந்து சென்று பார்ப்போம் என்று எண்ணியவாறே, அந்தக் குகையை அடைந்தார்கள். அந்தக் குகையினுள்ளே திருமழிசையார் யோகத்தில் அமர்ந்திருப்பதை தங்கள் மனக் கண்ணில் கண்டார்கள். இவர் யார் என்பதையும் அறிந்து கொண்டார்கள். திருமழிசையாரும் அவர்களின் வருகையை அறிந்து கொண்டார். உடனே முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒருமித்த குரலில் ஓபார்க்கவ முனிவரின் அருந்தவச் செல்வரே நலம்தானா? என்று கேட்டார்கள்.

திருமழிசையாரும் ஆஹா! தாமரை, குருக்கத்தி, செவ்வல்லி, என்னும் முப்பூக்களும் பூவுலகில் புகழ்பெறும்படி, அப்பூக்களிலே அவதரித்த மெய்ஞானச் செல்வர்களே… நீங்களும் நலந்தானே? என்றார். பிறகு நால்வரும் பக்திப் பரவசத்தில் லயித்தார்கள்; மனம் ஒன்றிக் கலந்து பகவத் அனுபவத்தில் திளைத்தார்கள்.  அந்நால்வரும் அரங்கப்பெருமானை மனத்தில் கொண்டு யோகத்தில் அமர்ந்தார்கள்.

பிறகு மயிலைக்குச் சென்று பேயாழ்வார் தோன்றிய கைரவ தீர்த்தத்தின் அருகில் பக்தியோகம் புரிந்தார்கள். கடைசியாக முதலாழ்வார்கள் மூவரும் மறுபடியும் தலயாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். திருமழிசையார் வருத்தம் மிகக் கொண்டு, மெய்யன்பர்களான அவர்களைப் பிரிந்தது எனக்கு வாட்டத்தைத் தருகிறது. மீண்டும் அவர்களைக் கண்டு பழகும் வாய்ப்பை எனக்குத் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு திருமழிசைக்குச் சென்றார்.

திருமழிசையை அடைந்ததும், அவர் திருமண் இட்டுக் கொள்வதற்காக மண்ணில் ஓரிடத்தில் தோண்டினார். ஆனால் அங்கே திருமண் கிடைக்கவில்லை. அதனால் வருத்தம் எழ அங்கேயே அமர்ந்துவிட்டார். இரவுப் பொழுதும் வந்தது. வருத்தத்தோடு அங்கேயே உறங்கிவிட்டார். அன்றிரவு கனவிலே திருமால் தோன்றி திருமண் இருக்கும் இடத்தைச் சொல்லிவிட்டு மறைந்தார். கண்விழித்த திருமழிசையார், முன் இரவில் தன் கனவில் தனக்கு ஏழுமலையான் கூறிய இடத்துக்குச் சென்று தோண்டினார். அங்கே திருமண் இருந்தது. அதை எடுத்து பன்னிரு திருமண் தரித்து அவன் அருங்கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார்.

அதன் பிறகு, காஞ்சிபுரத்திலிருந்த திருவெஃகா திருத்தலத்துக்குச் சென்றார் திருமழிசையாழ்வார். அங்கே திருக்கோயிலில் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கும் பெருமானை வணங்கினார். அத்திருக்கோயிலினுள்ளே சிறிது காலம் யோகத்தில் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவ்வூரிலேயே அவர் தங்கியிருக்கலானார்.

 

Leave a Reply