கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும்!

கட்டுரைகள்

? பகவதானுபவத்தை அனுபவிக்க, கர்மமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி இரண்டு… சரி! சேவை என்ற பரோபகார மார்க்கமும் உண்டு என்கிறார்களே… இது பற்றிய பண்டைய வழக்கம் ஏதும் உண்டோ ?

– அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூக சேவை, ஸோஷியல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் “பூர்த்த தர்மம்’ என்று ஒரு பெயர்.

ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்னதானம், ஆத்ம க்ஷேமத்துக்காகக் கோயில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் “பூர்த்த தர்மத்தில்’ சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சுவழக்கில்கூட “அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். “வெட்டுவது அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகக் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம். ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் & பணக்காரர், ஏழை என்கிற வித்யாசமில்லாமல் & ஒன்றுசேர்ந்து மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபடவேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்குசுத்தமாக சுலோகம் & இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும். உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும்.

குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய், அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் – அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்மலாபமும் ஆகும்.

? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த அளவுக்கு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற வேண்டியிருக்கிறதே.

– மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை, உடல் சிரமத்தை எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக அதிலேயே ஒரு நிறைவை சந்துஷ்டியை நமக்குள் ஏதோ ஒன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

நமக்கு எத்தனையோ கஷ்டங்கள். உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை & இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூகசேவை வேறா என்று எண்ணக் கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட “அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்’ என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான்…

ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும், அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒருபக்கம் இருக்கட்டும்; நமக்கே ஒரு சித்த சுத்தியும் ஆத்ம திருப்தியும் சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம்.

Leave a Reply