காற்றைத் தூதனுப்பிய ராதை

கட்டுரைகள்

காற்றின் இந்தத் தகுதியை உணர்ந்ததாலேயே, அன்றே மஹாகவி காளிதாஸன் “மேகஸந்தேஸம்’ காவியத்தைப் படைத்தான்.

குபேரனால் தண்டிக்கப்பட்ட யட்சன் ஓராண்டுக் காலம் மனைவியைப் பிரிந்து ராமகிரி மலைச்சாரலில் தங்கியிருக்கையில், ஆடித் தொடக்கத்தில் நீருண்ட மேகங்கள் வடக்கு நோக்கி நகர்வதைக் கண்ணுற்று, தன் தனிமைத் துன்பத்தை மனையாளுக்குத் தெரியப்படுத்த மேகங்களைத் தேர்ந்தெடுத்தான். மேகங்கள் வானில் உலாவ காற்றின் உதவி தேவை.

வடமொழி, தென்தமிழ் இரண்டிலும் காணப்படும் பண்டைய இலக்கியங்களில் தலைவி தன் விரகதாபத்தை வெளிப்படுத்த நாரை, காகம், கிளி, குயில், அறுகால் வண்டு ஆகிய உயிரினங்களைத் தூதாக அனுப்புவது மரபு. ஆனால் காற்றோ ஜடப்பொருள். அதற்கும் தூது செல்லும் தகுதியுண்டு என்பதைத் தன் கற்பனையின் மூலம் காட்டியுள்ளார் ஹரி ஔத் என்ற ஹிந்திக் கவிஞர்.

இவரது முழுப்பெயர் அயோத்யா ஸின்ஹ உபாத்யாய் ஹரிஔத் என்பது. காலம் 1865- 1941. பிறந்த இடம் உத்திரப்பிரதேச மாநிலம், நிஜாம்பாத். தந்தை வெகுவாகப் படித்தவரல்லர். சிறிய தந்தை சிறந்த அறிவாளி. அவரது மேற்பார்வையில் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று பார்ஸி, ஆங்கிலம், ஸமஸ்கிருதம், உருது ஆகிய நான்கு மொழிகளிலும் கவிதை இயற்றும் வல்லமை படைத்தவர். சிறந்த பேச்சாளர். ஆசிரியப் பணியிலும் நன்மதிப்பைப் பெற்றவர். உரைநடை (இயல்) எழுதுவதிலும் திறமை உள்ளவர்.

ஆரம்பத்தில் உர்தூ நடையை லாகவமாகக் கையாண்ட இவர், கால மாறுதலால், பாரதேந்து ஹரிசந்திரர், பண்டித் மஹாவீர் ப்ரஸாத் துவேதி ஆகியோர் காட்டிய பாதையைப் பின்பற்றி மனத்தை ஈர்க்கும் வடமொழிச் சொற்கள் கலந்த ஹிந்தி மொழியில், மொழிப்பொலிவைக் காட்டும் இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

இவர் இயற்றிய “ப்ரிய ப்ரவாஸ்’, “வைதேஹி வன்வாஸ்’ இரண்டுமே கற்பனைவளம் கொண்டவை. இவர், பாரதப் பரம்பரைப் பண்பாட்டை விட்டு விலகாமல், இதிஹாஸ, புராண கதை, கதாபாத்திரங்கள் மூலமாக இலக்கிய உலகத்திற்கு புதுப்பொலிவையும், புது சக்திகளையும் அறிமுகப்படுத்தினார்.

1857-இல் முதல் இந்திய விடுதலைப் போராட்டம் நடந்தது. அப்போது ஹிந்தி இலக்கியம் புதுக் கருத்துகளை ஏற்றுக் கொண்ட காலம். 1857 – க்கு முற்பட்ட காலத்தில் முகலாய ஆட்சியின் வீழ்ச்சி, ஆங்கிலேயரின் மேலாண்மை காரணமாக சமூக நிலைமை தடுமாறிய நேரம்…  இலக்கியத்தில் புதுயுகம் (நவீன காலம்) தோன்றிய நேரம். அதற்கு சற்றே 150 ஆண்டுகள் முந்திய காலத்தை “ரீதி காலம்’ என அழைத்தார்கள். ரீதி காலத்தில் இலக்கியத்தை தனிமனித வழிபாட்டிற்கும், சிற்றின்ப, சிருங்கார சுவையை வெளிப்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தினார்கள்.

ராமகிருஷ்ண அவதாரங்களில் கண்ணனின் பால லீலைகள் ஸூர்தாஸ் போன்ற கவிகளைக் கவர்ந்தன. ஆனால் காலத்தின் மாறுபாட்டால் ரீதிகாலக் கவிகள் ராதாகிருஷ்ண சேர்த்தியையே தற்காலப் படைப்பிற்கு ஆதாரமாக அமைத்து சிருங்கார இலக்கியத்திற்கு ராதாகிருஷ்ண ஜோடியை மையமாகக் கொண்டார்கள். மகளிரின் அங்க சௌந்தர்ய வர்ணனை அதிகமாகக் காணப்பட்டது. பெண்களை இன்பச் சுவைப் பொருளாக்கி (“நாயிகா பேதம்’) தலைவியின் பலநிலைகளை அப்பட்டமாக எழுதினார்கள். ஸ்வீகியா, பரகியா, அபிஸாரிகா என்று தலைவியர் பாகுபாட்டை வர்ணிக்கத் தொடங்கினார்கள். ராதாகிருஷ்ணன் சேர்த்தி மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது.

இழிந்த நிலையிலிருந்த ராதாகிருஷ்ணன் சேர்த்தியை மீட்டு, மிக உன்னத, பவித்ரமான, போற்றி வணங்குதற்குரிய நிலைக்கு உயர்த்திய பெருமை ஹரி ஔதையே சாரும்.

“”ப்ரிய ப்ரவாஸ்’ காவியத்தின் கதையமைப்பு பாகவதத்தை மையமாகக் கொண்டது. அழகான எளிய இசையோடு இழையும் மொழி. மாடுகன்று மேய்த்து மாலை கோகுலம் திரும்பும் கண்ணனைப் பார்ப்பதற்கு கோகுலவாசிகள் தங்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே துடிப்புடன் காத்திருக்கிறார்கள். மாலைப்பொழுதின் வர்ணனை மனதை மயக்கவல்லது.

திவஸ் கா அவஸான் ஸமீப தா

ககன் தா குச் லோஹித் ஹோசலா

அப் பீ விராதி தீ குஞ்ச தக்பா

கமலினி குல் வல்லப கி ப்ரபா

(நாட்போது முடியும் தறுவாய். சிவப்பு வண்ணமான வானம். தாமரையை மலரச் செய்யும் கதிரவனின் ஒளிக்கற்றைகள். தடாகங்களின் நீர்ப்பரப்பின் மேற்படிந்து கொண்டிருக்கின்றன.)

காவியத்தின் முக்கியப் பகுதிக்கு வருவோம். கம்ஸனின் ஆணையின் பேரில் கிருஷ்ணன், பலராமர் இருவரையும் மதுராவுக்கு அழைத்துச் செல்ல அக்ரூரர் கோகுலத்திற்கு விரைகிறார். கோகுல வாசிகள் கண்ணன் பிரிவைத் தாங்க மாட்டார்கள். கோபிகைகளின் துயரத்திற்கோ எல்லையேயில்லை.

கொடூரமான செயலைச் செய்யும் இவருக்கு அக்ரூரர் என்று யார் பெயரிட்டார்கள்? எனினும் கண்ணன் புறப்பட்டு விட்டான். அவன் ப்ரேமையில் மூழ்கிய கோபிகைகள் யமுனைக்கரையிலேயே அவன் திரும்புவான் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

மனிதநேயம், சமூகசேவை, தியாக மனப்பான்மை ஆகிய நற்பண்புகளை கவிதை மூலம் பரப்ப முடியும் என்பதை எடுத்துக் காட்டுகிறார் கவி. ஜனரஞ்சகமாய்த் திகழந்த ராதாகிருஷ்ணர்களையே ஜனநாயகத் தலைவர்களாகச் சித்திரித்துக் காட்டிய பெருமை கவியின் சிறப்பு அம்சமாகும்.

Leave a Reply