காற்றைத் தூதனுப்பிய ராதை

கட்டுரைகள்

“ப்ரவாஸ்’ என்றால் வெளியேறுதல். ப்ரிய கிருஷ்ணனின் பிரிவு கோபிகைகளை வாட்டுகிறது. கண்ணனின் தனிப்பட்ட அன்பிற்குப் பாத்திரமான ராதை தன் துயரத்தை அடக்கிக் கொண்டு எதைச் செய்தால் கோபிகைகள் மனம் சற்றே அமைதி பெறும் என்று சிந்தித்து, மொத்த துயரத்தையும் கண்ணனிடம் எடுத்துக் கூற காற்றை உதவிக்கு அழைக்கிறாள். யமுனைக் கரை காற்றுக்கு, தூது செல்லும் தகுதியுண்டு என்பது ராதையின் கணிப்பு.

“”காற்றே! யமுனையின் நீர்மையும், குளிர்ச்சியும் உனக்குச் சொந்தமானவை. கிருஷ்ணன் ஸ்பர்சத்தை நீ நன்கு உணர்ந்துள்ளாய். பிரிவு என்னும் சூட்டைத் தணிப்பதற்கு நீதான் சரியான கருவி. நீ யமுனைக் கரையோரமாகச் செல். குளிச்சி உன்னை விட்டகலாது. கோகுலத்தைக் கடந்ததும் மரம் செடிகொடிகள் நிறைந்த இடம் தென்படும்.

அங்கே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள். மேலே தொடர்ந்து சென்றால் வயல்வெளிகள் தென்படும். கதிரவனின் வெப்பம் மிகுதியாக இருக்கும்.

வயல்களில் குடியானவர்கள் உழவுத்தொழிலை மேற்கொண்டிருப்பார்கள். சமூக நலனுக்காகப் பாடுபடும் அவர்கள் துயர் போக்குவதும் உன் கடமையாகும். அவர்களின் துன்பம் தீரும் பொருட்டு பெரிய கார் மேகங்கள் எங்கிருந்தாலும் அவைகளை ஒன்றாகத் திரட்டி, வியர்வை சிந்த உழைக்கும் அவர்களுக்கு நிழல், குளிர்ச்சி இரண்டையும் அளி. அவர்கள் துயரம் எங்கள் துயரமேயாகும். அவர்களின் மகிழ்ச்சி எங்களது மகிழ்ச்சியேயாகும். சிறுவர், சிறுமியர் வெய்யிலில் நடப்பதை நீ காணலாம். அவர்களுக்கும் உன் உதவி தேவைப்படும். சாமான்ய மக்களின் துயரம் தணித்து நீ மேலே செல். மதுரா நகரம் உன் கண்ணுக்குப் புலப்படும். உயர்ந்த மாளிகைகள், கோபுரங்கள், அரண்மனைகள், அகன்ற வீதிகள், தோரண வாயில்கள் முதலியவை அந்த நகரத்தின் சிறப்பம்சங்களாகும். அங்குள்ள மக்கள் நாகரீகம் அறிந்தவர்கள். நாங்களே இடக்கை வலக்கை வாசியறியாதவர்கள்.

எங்கள் தூதனாகிய நீ, நகரத்து அழகிலும் அவர்களின் பேச்சிலும் மயங்கி விடாமல் கிருஷ்ணன் எந்த மாளிகையில் தங்கியுள்ளான் என்று கண்டறிய முயற்சி செய். கண்ணன் தங்கியிருக்கும் அரண்மனை மற்ற இல்லங்களைக் காட்டிலும் பொலிவுடன் விளங்கும். கண்ணன் வருகையினால் அதிக அழகு பெற்றுள்ள அந்த மாளிகையை நீ விரைவாக அடைவாய்.

அங்கு நிலா முற்றங்கள், வாவிகள் (குளங்கள்) இருக்கும். கிருஷ்ணன் மாளிகைக்கு வெளியே இருந்தால், தூது போன காரியம் சற்றே எளிதாக அமையும். அவன் நிற்கும் பக்கம் சென்று, மெதுவாக வீசி, அவன் பீதாம்பரங்களையும், மேலாடைகளையும் அசைந்தாடச்செய். அவன் கவனத்தை ஈர்க்க மாளிகையையொட்டி வளர்க்கப் பட்டிருக்கும் அலங்கார வளைவுகள், கொடிகள், பூங்கொத்துகள் தொங்கும் கிளைகள் ஆகியவற்றை அசைந்தாடும்படி வீசு.

இவைகளின் ஊடே ஊடுருவி, இனிய நாதத்தை எழுப்ப முயற்சியை மேற்கோள். அவன் இடுப்பைவிட்டு அவன் குழல் என்றும் பிரியாது. சற்றே முயற்சி செய்து குழலின் துவாரங்களின் மூலமாக வெளிவந்து மதுரமான பிருந்தாவனத்தில் அவன் அடிக்கடி இசைக்கும் ஒலியை ஒலிக்கச் செய். இது சற்றே கடினம்தான். வேகமாக வீசி, வாடி வதங்கிக் கீழே கிடக்கும் கொடிகளை அவன் கால்களுக்கருகில் கொண்டு சேர்த்தாயானால், கண்ணனுக்கு கோகுலத்து கோபிகைகளின் வாடி வதங்கும் முகங்கள் ஞாபகத்திற்கு வரும்.

கிருஷ்ணன் மாளிகையின் உட்புறத்தில் அமர்ந்திருந்தால் நான் சொல்லும் வழியைப் பின்பற்று. ஜன்னல் கதவுகளையும், திரைச்சீலைகளையும் அசைந்து ஆடும்படி வீசு. பக்கத்தில் சென்று அவன் காதோரமாக சுருண்டு வளைந்திருக்கும் மயிற்கற்றையை இங்குமங்குமாக அசையச் செய். மாளிகையின் உட்புறச்சுவர்களில் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தால் அவற்றை நன்கு நோக்கு. துன்பத்தால் வாடும் விலங்கினுடையதோ, அல்லது பெண்களின் சித்திரமோ இருந்தால் அதைமட்டும் கண்ணன் பார்க்கும்படி அசை.

சாளரத்தின் பக்கங்களில் வாடின இலைகள் சிதறிக் கிடந்தால் அவற்றை அவன் கவனத்திற்குக் கொண்டு வா. அவற்றை நோக்கியதும் அவனுக்கு பசலையால் துன்புறும் எங்கள் நினைவு வரும். செயற்கைக் குளங்கள், நீரூற்றுகள் அங்கு உண்டு. சற்றே பெரிய வாடிய தாமரை இதழை நீரில் நன்றாக நனைத்து, கண்ணன் கண்முன்னாடி காட்டினால், இலையில் படிந்துள்ள நீர் ஒன்றாகச் சேர்ந்து முத்து முத்தாக நுனி வழியாக சொட்டத் தொடங்கும். கிருஷ்ணா! இம்மாதிரி இதழ் வடிவம் போல கண்கள் படைத்த ராதையும் கோபிமார்களும் உன் பிரிவைத் தாங்காமல் அல்லும் பகலும் அழுத வண்ணமாக இருக்கிறார்கள்.

எங்கள் கிருஷ்ணன் நல்லிதயம் கொண்டவன். துயர் துடைக்கும் உன் ஸ்பர்சத்தை உடனே உணர்வான். கருணையும் தயையும் உருவமாகக் கொண்டவன். எனக்காக நான் இதைச் சொல்லவில்லை. கோபிமார்கள், மாடு கன்று, யசோதை, நந்தகோபன் சார்பாக முறையிடுகின்றேன்.

உன்னால் ஒன்றும் முடியாவிட்டாலும், கிருஷ்ணனின் உடல் சம்பந்தம் பெற்ற நீ, போன வழியே திரும்பி கோகுலத்திற்கு வந்துவிடு. உன் ஸ்பர்சம் பெற்று கண்ணனை நேரில் கண்ட மனமகிழ்ச்சி பெற்று ஆறுதல் அடைவோம்” என ராதை முடிக்கிறாள்.

இது சாத்தியமா என்ற ஐயம் வேண்டாம். நாயகி விடும் தூதுக்குப் பலன் உண்டு. தலைவி ராதை துயரப்படும் மக்களுக்காகத் தலைமைப் பொறுப்பை ஏற்று பாகவதத் தொண்டு புரிகிறாள். இதை ராதையின் சமூகப்பணி என்றும் கூறலாம்.

– தி.ப. வானமாமலை

கட்டுரையாளர் முன்னாள் ஹிந்திப் பேராசிரியர்,

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி

Leave a Reply