பாவை பாடிய பாவை

கட்டுரைகள்

 

ஆத்மா அவனுடனேயே ஐக்கியமாவதில் பெருநாட்டம் கொண்டுள்ளபோது அவனையொட்டிய எந்த நிகழ்ச்சியும் கோதைக்கு மகிழ்ச்சியையே அளிக்கிறது. வேறு மனத்தாங்கலின் வேதனை  அங்குப் படமாகவில்லை.

விடிந்தும் விடியாத அந்தப் பொழுதைப் பார்த்துவிட்டு “விடியட்டும்” என்று மீண்டும் துயில் கொள்ளப் போகிறாள் நப்பின்னை. “கோழி கூவிற்று” என்று சொன்னால் ஒரு கோழியின் கூவல் மட்டும் அடையாளமன்று என்று சொல்லி விடப் போகிறாளே என்று, “வந்தெங்கும் கோழி அழைத்தன” என்று சொல்கிறாள்.

அப்போதும் கோதைக்கு ஒரு சந்தேகம். கோழி விழிக்கும். ஜாமந்தோறும் கூவும். மீண்டும் உறங்கிவிடும். ஆகையால், அதெப்படி பொழுது விடிந்ததன் அடையாளம் என்று நப்பின்னை கேட்டு விட்டால்?! குயிலின் அழைப்பை நினைவு கூர்கிறாள். அதுவும் ஒரு குயில் அல்ல. பல குயில்கள். அவை ஒரு முறையல்ல. பலமுறை கூவியதாகக் கோதை கூறுகிறாள். இன்னமும் நப்பின்னை எழுந்து வரவில்லை.

ஆண்டாளின் மனக்கண்முன் மற் றொரு காட்சி தோன்றுகிறது. கண்ண னும், நப்பின்னையும் பந்தாடிக் கொண்டி ருக்கிறார்கள். கண்ணன் தோற்றுப் போகிறான். தான் வெற்றி பெறக் காரண மாகிய பந்தை ஒரு கையிலும், தான் வெற்றி கொண்ட கண்ணனை மற்றொரு கையிலுமாக அணைத்துக் கொண்டு கிடக்கிறாள் நப்பின்னை.

எல்லோருக்கும் பேரானந்தம் அளிக்கும் பெருநிலையே இறைவனின் இதயக் கருணை. இந்த உலகமே அவன் விளையாட்டிற்குகந்த இடம். நப்பின்னை கண்ணனின் பேரானந்தத் தத்துவம், பந்து இவ்வுலக மக்களாகிய நாம் இரண்டையும் சேர்த்து வைத்த பேருண்மைத் தத்து வத்தை இங்கே ஆண்டாள் காண்கிறாள். இதையும் கோதை எடுத்துச் சொன்ன பின்பே, அவர்கள் அங்கு வந்ததன் காரணம் என்னவென்று, இப்பொழுது தான் நப்பின்னை கேட்கிறாள்.

பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒருவரையொருவர் கேலி செய்வது பிடிப்பதாயிருந்தாலும், பெண்கள் ஆண்களை அநாகரீகமாகக் கேலி செய்ய மாட்டார்கள். அதுவும் தம் மனம் விரும்பிய ஆணை ஒரு பெண் விளையாட்டாக மைத்துனன் முறை வைத்துக் கொண்டு கேலி செய்யும் போது அவளது நெருங் கிய தோழிகளும் கேலி செய்வதைக் கேட்டு மகிழ்வார்கள்.

தோற்றுப் போன கண்ணனைப் பற்றி வேண்டாத குறைகளைக் கூறுகிறாள் நப்பின்னை. “அவன் வெண்ணெய் திருடியது, பெண்களிடம் விஷமம் செய்தது எல்லாவற்றையும் நாங்கள் உனக்கு எடுத்துச் சொல்வோம்” என்று எண்ணிக் கொள்கிறாள் கோதை. இது போதுமே மனம் பூரிக்க.

உள்ளே வரும்படி அழைக்கிறாள் நப்பின்னை. ஆனால் நப்பின்னையை கண்ணனின் கனிவுகந்த காதலியாகக் கோதை கருதியதால் அவள் கையாலேயே கதவைத் திறக்க வேண்டுமென வேண்டுகிறாள். நப்பின்னை தானே வந்து கதவைத் திறக்கிறாள். ஆனால் அவளது கை வளையொலி கேட்க வில்லை.

“நாங்கள்தான் கண்ணனை எண்ணி எண்ணியே இளைத்துக் கிடக்கிறோம். ஆனால் உனது செந்தாமரைக் கை அந்தச் சீராளனின் தெய்வத் திருமேனியில் பதிந்து வளைகள் நன்கு இறுக்கமாக உள்ளன. ஆகையால் அந்த வளையல்கள் ஒலியெழுப்ப நீ வாயிற்கதவைத் திறந்து வர வேண்டும். அந்த ஒலியின்பம் எங்களைக் கண்ணனிடமே அழைத்துச் செல்லும்” என்கிறாள் கோதை.

உந்து மதகளிற்ற னோடாத தோள்வலியன்

நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்

கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலீ! உன்மைத்துனன் பேர்பாடச்

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

எம்பெருமானார் இராமானுஜர் இந்தப் பாசுரத்தை மிகவும் விரும்பிப் போற்றியதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தச் சுவையான நிகழ்ச்சி இதோ:

திருப்பாவை ஜீயர்’ என்றே சிறப்புப் பெற்ற அவர் அன்று பிக்ஷைக்குப் போகிறார். நம்பியின் மாளிகைக் கதவை நெருங்கி வந்துவிட்டார். கதவு தாளிடப்பட்டிருந்தது.

எம்பெருமானாரின் வாய் இந்தப் பாசுரத்தின் கடைசி அடியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.”

உள்ளிருந்து பாசுர ஒலிகேட்ட நம்பியின் மகள் தேவகி தன் கைவளை ஓசையுடன் கதவைத் திறந்தாள். எம்பெருமானார் மனஅளவில் ஆண்டாளாகவே மாறியிருந்தார். ஆகையால் தன்னை எதிர்கொள்ள வந்தது நப்பின்னை நங்கை என்றே நம்பி விட்டார்.

அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அந்தப் பெண்ணின் திருவடியில் விழுந்து வணங்கினார். ஒரு துறவி தன்னை வணங்கியதை எண்ணித் துடித்துப் போனாள் தேவகி. தந்தையிடம் ஓடிச் சென்று நடந்ததை நடுங்கும் குரலில் முறையிட்டாள். நம்பிக்கு மனக்கண்ணில் நடந்தவை விளங்கிவிட்டது. மகளுக்குத் தைரியம் கூறி அனுப்பிவிட்டார்.

பின்னர் எம்பெருமானார் உள்ளே வந்து அவரைச் சேவித்த போது, “உங்கள் வணக்கத்தை ஏற்றது உந்து மதகளிற்றனோ?” என்று கேட்டார். “ஆம்!” என்று பணிவுடன் பதிலளித்தார் அந்த பக்தர்.

வடபத்ரசாயி கண்ணனாக மாறினான். ஸ்ரீவில்லிபுத்தூர் திருவாய்ப்பாடியாக மாறியது. கண்ணன் குடி கொண்ட கோயில் நந்தகோபரின் அரண்மனையாகியது. எண்ணப்படி எதனையும் மாற்ற முடியும். கற்பனையாயிருந்தாலும் அதில் கனிந்துருகி வாழ முடியும் என்பதை கோதை பாவை நோன்பில் கொண்டாடி மகிழ்ந்தாள்.

நிற்பதும், நடப்பதும், கற்பதும், கேட்பதும், சொற்பதம் ஊறச் சுவைப்பதும் அந்தப் பொற்பதத்தான் புனிதத் திரு மலரடியே என்பதைப் புரிந்து கொள்பவர்களுக்கு, புரிந்து கொண்டவர்களுக்கு, போனதுமில்லை, வருவதுமில்லை நாணெதுமில்லை, நாட்டமுமில்லை.

போதுமென்ற மனமே அந்தச் சோதி தரும் சேதி!

– பூஜ்யஸ்ரீ ‘மதிஒளி’ சரஸ்வதி

Leave a Reply