பாவை பாடிய பாவை

கட்டுரைகள்

ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையைத் தொல்பாவை என்று உய்யக் கொண்டார் அருளிச் செய்கிறார். உச்சரிக்கப்படும் மந்திர சப்தங்கள் என்றும் உயிருள்ளவை. அவை உண்டாக்கப்படுவதில்லை. அவை மறைந்தது போல் தோன்றினாலும் மீண்டும் தாமே தோன்றக் கூடியவை. வேதம் நிகர்த்தவை.

அது மறைந்தபோது ஆண்டவன் உள்ளத்திலேயே இருந்தது. மீண்டும் அதனை ஆண்டாளின் திருவாக்கின் மூலம் இறைவன் வெளிப்படுத்தினான். பாவை நோன்பும், திருப்பாவை பிரபந்தமும் ஆக்கப்படவில்லை. ஆண்டவனாலேயே அளிக்கப்பட்டது. ஆண்டாள் கண்ணனிடம் கொண்டிருந்த காதல் வெறும் மானுடக் காதல் அல்ல. வேதாந்தங்களில் போற்றப்படும் மேன்மையான பக்தியின் பூரணத் தெளிவு.

ஆண்டவனை அடைய எவ்வளவு துடித்தும் ஆலிலைத் துயின்றோன் அசைய வில்லை. நினைத்துப் பார்க்கிறாள் கோதை. நிழலாகச் சென்ற அவதாரத்தின் நினைவுகளெல்லாம் அவள் எண்ணத்தில் படர்கிறது. பிருந்தாவனமும், யமுனையும் கோவர்த்தன மலையும் அவள் எளிதில் சென்றடையக் கூடிய தொலைவில் இல்லை.

ராசக்கிரீடையின் போது கண்ணன் மறைந்து போகிறான். உடனே அங்கிருந்த ஆயர்குலப் பெண்கள் தங்களையே கண்ணனாகப் பாவித்து அவன் செயல்களையே தாங்களும் செய்ய முயல்கிறார்கள்.

ஆண்டாள் கோபிகைகளைப் போன்றே நோன்பு நோற்க ஆசைப்பட்டு பாவை நோன்பு நோற்றாள். அவர்களைப் போன்று, செயலாக இந்த நோன்பை வடிக்காமல் மனதில் மட்டுமே பாவனையாகக் கோதை நோன்பை நோற்றாள்.

நீலமேக வண்ணனின் நினைவில் நெகிழ்ந்தாள். அந்த நிறைவில் கோதை மகிழ்ந்தாள். அவன் பெருமையைப் பலவாறு புகழ்ந்தாள். அவனிடம் ஊறிய பக்தியில் தனது பாசத்தை அகழ்ந்தாள். பாதகங்கள் தீர்த்துப் பரமனடி காட்டி வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ் ஐயைந்துமைந்தாகத் திருப்பாவையாக அவள் திருவாய் மலர்ந்தருளினாள்.

இப்போது, “திருப்பாவை ஜீயர்” என்றே சிறப்புப் பெயர் பெற்ற இராமாநுஜர் மிகவும் உகந்து போற்றிய திருப்பாவைப் பாசுரத்தின் பதினெட்டாம் பாடலைச் சற்று சிந்திப்போம்.

ஒரு செயலில் வெற்றி பெற வேண்டுமானால் நம் பிரார்த்தனை பெருமாளை மட்டுமே சார்ந்ததாக இருக்கக் கூடாது. பிராட்டியையும் சேர்த்தே மனம் துதிக்க வேண்டும். மனமெல்லாம் கண்ணனேயானாலும் அவன் வாழ்ந்து கொண்டிருப்பது நந்தகோபன் இல்லத்தில். அவன் மகிழ்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருப்பது நப்பின்னையின் அணைப்பில்.

நப்பின்னையை அழைத்த பின்பல்லவோ கண்ணனை எழுப்பியிருக்க வேண்டும்! கண்ணனது புஜபல பராக்கிரமத்தைக் கூறினால் அந்த ஆனந்தத்தில் நப்பின்னை கண் விழிப்பாளோ என்ற ஆசையில், மதயானைகளையும் உந்தித் தள்ளுகின்ற தோள்வலி பெற்றவன் கண்ணன் என்கிறாள். அவனுடைய தோள் வலிமை எந்த எதிர்ப்பையும் கண்டு ஓடாது என்று கூறுகிறாள்.

கண்ணனது பிறப்பே கம்சனது எதிர்ப்பை எதிர்நோக்கியே நிகழ்ந்ததாகையால் ஆழ்வார்களுக்கு எப்போதுமே அப்படியொரு அச்சம் மனதுக்குள். ஆகையால் அவர்களது குடி “அஞ்சுகுடி” என்றே அழைக்கப்படுகிறது.

அந்தக்குடியில் பிறந்த ஆண்டாள், தந்தையார் நந்தகோபர் அணைப்பிலே கண்ணன் இருப்பதால் அவனுக்கு எந்தத் தீங்கும் நிகழ்ந்துவிடாது என்று தங்களுக்குள்ளேயே சமாதானம் செய்து கொள்வதற்காகவும் கண்ணனது தோள் வலிமையைப் புகழ்கிறாள்.

யசோதையின் சகோதரர் கும்பர் மகள் நீளாதேவி எனப்படும் நப்பின்னை. பெண்ணுக்குப் பிறந்த இடத்துப் பெருமையெல்லாம் புகுந்த இடத்தில் பெயர் சொல்ல வேண்டும். அதற்கு அவளே எடுத்துக் கொண்ட எளிய வழி – தன்னை இன்னார் மகள் என்று குறிப்பிடுவதைவிட, இன்னார் மருமகள் என்று குறிப்பிடுவதிலேயே பெருமை கொள்வது.

சீதையும் தன்னை “ஜனகன் மகள்” என்று அறிமுகப்படுத்திக் கொள்வதை விட, “தசரதன் மருமகள்” என்று தெரிவித்துக் கொள்வதிலேயே மனம் பூரித்தாள். ஆகையால் கோதை நப்பின்னையை அழைக்கும்போது “நந்த கோபாலன் மருமகளே” என்றழைக்கிறாள்.

ஆயர்பாடியில் கண்ணனுக்குப் பின் பிறந்த எத்தனையோ பெண்கள் மானசீகமாக கண்ணனையே கணவனாக எண்ணியதால் எந்த மருமகளை கோதை அழைக்கிறாளோ என்று நப்பின்னை அலட்சியமாக இருந்துவிடப் போகிறாள் என்ற பயத்தில் “நப்பின்னாய்” என்று குறிப்பிட்டே அழைக்கிறாள்.

பின்னர் நப்பின்னையின் கருங் கூந்தலை கந்தம் கமழும் குழலாக வருணிக்கிறாள். ஆம் அவளது கூந்தலில் நிறைந்திருப்பது செயற்கை மணமன்று, பரமனையே பரிந்தணைந்து மாமாயனுக்கும் மணம் ஊட்டிய, நறுமணத்தின் ஊற்றாகவே அந்தக் குழலைப் புகழ்கிறாள்.

“கொள்ளை மணத்தில் கூடுகட்டிக் கொண்டு நீங்கள் இருவர் மட்டும் குதூகலித்துக் கொண்டிருக்கும் இன்பத்தை, நீ இந்தக் கதவைத் திறந்தால் நாங்களும் அனுபவிக்கலாமே” என்று கோதை வேண்டுகிறாள்.

Leave a Reply