பகவானிடம் இல்லாதது எது?

கட்டுரைகள்

ஏன் அந்தக் காலத்திலும் இப்படி ஒரு எண்ணத்தை நாசூக்காக வெளிப்படுத்தி யிருக்கிறார் ஒரு கவி. ஆனால் வெளிப்படுத்திய விதமும், இட வகையும் நம்மை நெளிய வைக்காமல், ஆனந்தத்தைத் தருகிறது.

நாம் இறைவனிடம் என்னவெல்லாமோ பிரார்த்திக்கிறோம். எல்லாம் நடந்து விடுகிறதா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக்கஷ்டங்கள். இந்தக் கஷ்டங்களுக்கான மூல காரணம் அதீத ஆசை என்று நமக்கே தெரியும். இருந்தாலும் தெய்வம் எதற்கு இருக்கிறது? நாம் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றி வைக்கத்தானே… இது நம் சாதாரண மன இயல்பு.

நாம் நினைத்தது நடக்கவில்லை என்றால், உடனே நம் கோபம் திரும்புவது, உன்னைத்தானே மலை போல நம்பியிருந்தேன்… நீ இப்படி காலை வாரிவிட்டுட்டியே! என்று குறை சொல்லிப் புலம்பும் இறைவனிடம்தான்! அடுத்து நம் கோப வார்த்தைகள் அவனைப் பார்த்துத் திரும்பும்… சே! நீ என்ன கல்லா? உனக்கு இதயமே கிடையாதா?

இப்படித்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை… வேறுவிதமாகவும் சொல்லலாம். எப்படி? அதற்குத்தான் ஒரு சம்ஸ்க்ருதக் கவி நமக்கு ஒரு வழியைச் சொல்லியிருக் கிறார்… இதையே இப்படியும் சொல்லலாமென்று!

ஒரு பக்தர். வழக்கமாக திருவீதியில் எழுந்தருளும் பகவானுக்கு எதையாவது சமர்ப்பிப்பது அவர் வழக்கம். அன்று பெருமாள் வாசலில் எழுந்தருளிவிட்டார். இவரோ ஒன்றும் தயார் செய்து வைக்கவில்லை. வெறுங்கையோடு பெருமாள் முன் போய் நின்றார். இந்தக் கவியைப் பாடினார்…

ரத்நாகரஸ் தவ க்ருஹம் க்ருஹிணீ ச லக்ஷ்மி:

கிம் தேய மஸ்தி பவதே புருஷோத்தமாய

ஆபீரவாம நயநா ஹ்ருதமாநஸாய

துப்யம் ப்ரதத்தமிதமஸ்து மநோ மதீயம்

பெருமாளே! மாகடல் நீருள்ளான் என்றபடி, உன் வாசஸ்தலம் ரத்நாகரம். உன் மனைவியோ மகாலட்சுமித்தாய். நீயோ புருஷோத்தமன் என்று பெயர் பெற்றிருக்கிறாய். இப்படிப்பட்ட உனக்கு நீசனான நான் என்ன சமர்ப்பிக்கப் போகிறேன்.எதையாவது கொடுக்க வேணும் என்றாலும், உன்னிடம் இல்லாத ஒன்றைத்தானே நான் சமர்ப்பிக்க வேணும்? உன்னிடமோ எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் யோசித்துப் பார்த்ததில் உன்னிடம் ஒன்று மட்டும் இல்லாமலிருக்கிறது. அது எதுவென்றால், உன் நெஞ்சு. அதை திரு ஆய்ப்பாடி மங்கைகள் கொள்ளை கொண்டு போய்விட்டார்கள். அதனால் இப்போது உன்னிடம் இல்லாமல் நெஞ்சை இதோ அடியேன் இப்போது சமர்ப்பிக்கிறேன். இதனைப் பெற்றுக் கொண்டு, நீ நிறை பெற்றவனாய்த் திகழ்வாய்…

Leave a Reply