திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

thirupugazhkathaikal 1
திருப்புகழ் கதைகள்

திருப்புகழில் காணப்படும் கதைகள் (பகுதி 4)
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முத்தமிழ் அடை வினை முற்பட எழுதியவன்

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே என்பதற்கு ‘எல்லா மொழிகளுக்கும் முற்படுமாறு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் நூல் முறைமையை மலைகளுக்குள் முதன்மையுடைய மகா மேரு மலையில் எழுதி அருளிய முதன்மையானவரே’ என்பது பொருள். இது தொடர்பாக மூன்று கதைகள் உண்டு.

முதல் கதை – அகத்தியர் தமிழின் முதல் இலக்கண நூலான அகத்தியம் என்ற நூலை எழுதியவர் என்று சொல்லப் படுகிறது. இந்த நூலை அகத்தியர் சொல்லச் சொல்ல விநாயகர் மேரு மலையில் எழுதினார்.

இரண்டாவதுகதை அதிரா அடிகள் என்பவர் தரும் கதை. அவர் எழுதிய மூத்த பிள்ளையார் திரு மும்மணிக்கோவையில் அவர்…

மின்னெடுங் கொண்டல் அந்நெடு முழக்கத்து
ஓவற விளங்கிய துளைக்கைக் கடவுளை
யாம்மிக வழுத்துவது எவனோ, அவனேல்
பிறந்ததிவ் வுலகின் பெருமூ தாதை
உரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்தது
மேருச் சிமையத்து மீமிசை
வாரிச் செல்வன் மகள்மகன் மொழியே    (7ஆம் பாடல்)

இந்தப் பாடலில் அதிரா அடிகள் மூத்த பிள்ளையாரான விநாயகப் பெருமானை வணங்குவதோடு தான் ஏன் விநாயகப் பெருமானை வணங்குகிறேன், என்று ஒரு காரணம் கூறுகிறார்.

விநாயகப் பெருமானைப் பற்றிய செவிவழிச் செய்தி ஒன்றைக் கூறி அதனால் தான் விநாயகரை வணங்குகிறேன் என்று விளக்குகிறார்.

அச் செய்தி தாங்கிய வரிகள் – பிறந்ததிவ் வுலகின் பெருமூதாதைஉரந்தரு சிரமரிந் தவற்கே வரைந்ததுமேருச் சிமையத்து மீமிசைவாரிச் செல்வன் மகள்மகன் மொழியே.”எனபனவாகும். இதற்கு உரை எழுதியவர்கள்

vinayakar bharatham
vinayakar bharatham

“அவர் இல்லையேல் பாரததக்கதை தோன்றியிராது. நான்முகனின் தலையைக் கொய்த சிவனாருக்காக மேருமலையின் மீது பரதவன் மகளான பரிமளகந்தியின் மகனான வியாசர் கூறிக்கொண்டே வர விநாயகப் பெருமான் எழுதினார் என்க” – பி.ரா.நடராசன் (உமா பதிப்பகம்)எனஎழுதியுள்ளனர்.

இது சற்றே விநோதமாக உள்ளது. ஒரு நூலை எழுதியதற்காக ஒரு கடவுளை வணங்குகிறேன் என்பது எப்படி பொருத்தமான காரணமாகும்? அந்த நூலை அவரே  இயற்றினாரா என்றால் அதுவும் இல்லை. வியாசர் இயற்றினார். இது ஒரு ‘கர்ண பரம்பரைக் கதை’ ஆகும்.

“வியாச முனிவர் விநாயகப் பெருமானை வேண்டித் துதி செய்தார். கணபதி அவருக்குக் காட்சியளித்தார். வியாசர் அப்பெருமானைப் வணங்கி, ‘ஐயனே!! அடியேன் உலக நன்மைக்காக மகாபாரதத்தைப் பாடுகிறேன். நீர் மேரு மலையிலே அதனை எழுத வேண்டும்” என்றார்.விநாயகர், ‘என் எழுதுகோல் ஒரு கணப்பொழுதாயினும் நில்லா வண்ணம் பாடுவாயானால் யான் எழுதுதற்கு இசைகிறேன்’ என்றருளினார்.

வியாசர் “பெருமானே! அப்படியே தங்கள் எழுதுகோல் தாமதிக்கா வண்ணம் பாடுவேன். ஆயினும் தாங்கள் பாடலின் பொருள் தெரிந்தே நீர் எழுத வேண்டும்” என்றார். விநாயகர் அதற்கு இசைந்து எழுதத் தொடங்கினார்.

வியாசர் விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்யும் பொருட்டுச் சிந்தித்தாலன்றிப் பொருள் விளங்காத கடின பதங்களை அமைத்து ஒரு சுலோகம் பாடுவார். இவற்றிற்கு ‘குட்டுஸ்லோகங்கள்’ என்று பெயர். இதற்கு என்ன பொருள் என்று விநாயகர் சற்று சிந்திப்பதற்குள் பல்லாயிரம் சுலோகங்களை மனதில் பாடிக் கொள்வார். இப்படி விநாயகருடைய எழுத்தாணியைத் தாமதிக்கச் செய்ய இடையிடையே கடினமான 8,800 சுலோகங்களைப் பாடினார்.

ஆயினும் இது சரியா? நாளை பார்க்கலாம்.

திருப்புகழ் கதைகள்: முத்தமிழ் அடைவினை முற்பட எழுதியவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply