தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது?

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

திலேஷு தைலம் ததிநீவ சர்பி:ஆப ஸ்ரோதஸ்வரணேஷு சாக்னி: ஏவமாத்மா ஆத்மனி க்ருஹ்யதே சத்யேநைநம் தபசா யோனு பஸ்யதி” -சுவேதாஸ்வதர உபநிஷத் – கிருஷ்ண யஜுர்வேத சாகை.

“எள்ளில் எண்ணெய்போல, தயிரில் நெய் போல, பூமிக்கடியில் நீர்ப் பிரவாகம் போல, அரணியில் அக்னி போல புத்தியில் பரமாத்மா மறைந்துள்ளார். வாய்மையாலும் தவத்தாலும் அவரைக் காண முடியும்”

இந்த மந்திரத்தில் பயன்படுத்திய கவிதை மொழி மிகச் சிறப்பானது.

ஸ்வேதாஸ்வதரர் என்ற மகரிஷி பல உவமைகளோடு ஆத்ம தத்துவத்தை விவரித்து, “ஆத்ம தத்துவம் வெளியில் தென்படும் பொருள் அல்ல. வெளி வஸ்துவானால் அது பெறப்பட வேண்டியதே அல்ல. ஏனென்றால் பொருள் உள்ளது என்றால் நிச்சயம் அதற்கு அழியும் இயல்பு இருக்கும். மாயைக்கு உண்டான இயல்பு இருக்கும். ஆத்மா அப்படிப்பட்டது அல்ல” என்கிறார்.

பரமாத்மா என்றாலும் ஆத்மா என்றாலும் ஒன்றுதான். சாதாரண மொழியில்  கூற வேண்டுமானால் பகவான், கடவுள் என்று பொருள்.

இவ்வாறு வர்ணிக்கப்படுவது எங்கோ தொலைவில் இல்லை. அது நம் புத்தியிலேயே உள்ளது. அது இருப்பதால்தான் புத்தி வேலை செய்கிறது. உடல் இயங்குகிறது. ஆனால் அதைத் தெரிந்து கொள்வதற்கு புத்தி முயற்சிப்பதில்லை.

புத்தியிலே உள்ள பரமாத்மாவை எவ்விதம் தெரிந்து கொள்வது? இத்தனை உவமைகள் எதற்கு? ஒவ்வொரு உபமானத்திலிருந்தும் ஒவ்வொரு உபதேசத்தைப் பெற முடியும்.

ohm
ohm

முதலில் கூறுவது எள்-எண்ணெய் நியாயம். அதாவது எள்ளில் எண்ணெய் எங்கே மறைந்திருக்கிறது என்று யாரால் கூற முடியும்? எள் முழுவதும் எண்ணெய் உள்ளது. எண்ணையைப் பெற வேண்டும் என்றால் எள்ளைப் பிழிய வேண்டும். அதேபோல் இறைவனும் இந்த பிரபஞ்சத்தில், நம்மில், எங்கும் வியாபித்துள்ளான். 

தயிரில் நெய் உள்ளது. நெய் கிடைக்க வேண்டுமென்றால் கடைய வேண்டும்.  ஊற்றுக்களில் நீர் உள்ளது. பூமியைத் தோண்டி சிரமப்பட்டு நீரை மேலே கொண்டு வர வேண்டும். அடுத்து அரணி நியாயம். யாகங்கள் செய்யும் போது இரு அரணிக் கட்டைகளைக் கடைந்து நெருப்பு மூட்டுவார்கள். 

பரமாத்மா எங்கும் நிறைந்தவன் என்று அறிவதற்காக எள்-எண்ணெய் நியாயத்தை கூறினார். சாதனை செய்தால் பகவானை அடையலாம் என்பதற்காக தயிரைக் கடைந்தால் நெய் கிடைக்கும் என்று உதாரணம் காட்டினார். அந்த சாதனையை எவ்வாறு சிரமப்பட்டு செய்ய வேண்டும் என்று விளக்குவதற்காக ஊற்றுநீர் உதாரணத்தைக் கூறினார். அரணியில் தீ மூட்டுவது என்பது ஒரு சாஸ்த்ரீயமான மார்க்கத்தை எடுத்துரைக்கிறது. வன்னி மரக்கட்டைகளைக் கடைந்து அக்னி மூட்டுவது என்பது வேத மந்திரங்களோடு கூடிய செயல். அதேபோல் பரமாத்மாவை அடைவதற்கு வேதம் முதலான சாஸ்த்திரங்கள் காட்டிய வழியிலே சாதனை செய்ய வேண்டும். இந்த நான்கும் மறைவாக உள்ள பரமாத்மாவை அடைவதற்குச் செய்யும் முயற்சிகள். 

brahma vshnu sivan
brahma vshnu sivan

“சர்வ வ்யாபி நமாத்மானம் க்ஷீரே சர்பிரிவார்பிதம் ஆத்ம வித்யா தபோமூலம் தத் ப்ரஹ்மோபனிஷத் பரம்” என்று அடுத்த மந்திரத்தில் கூறுகிறார்.

பாலில் நெய் போல பரமாத்மாவும் ஜகத் எங்கும் பரவியுள்ளார். பாலில் உள்ள நெய் தென்படாதது போலவே பிரபஞ்சத்தில் சாதாரண கண்களுக்கு பரமாத்மா தென்படமாட்டார். நெய்யைப் பெறுவதற்கு பாலை எத்தனை விதங்களில் மாற்ற வேண்டுமோ அதே போல் உலகில் சாதனை செய்து பகவானைப் பெற முடியும் என்று தெரிவிப்பதற்காக இந்த உவமை.

ஆத்மாவை அறிந்து கொள்வதே ஆத்ம வித்யை. அதற்கு மூலம் தவம். “ஆத்ம வித்யா – தபோ மூலம்” என்ற இந்த சொல்லை எப்போதும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தவம் என்றால் நியமத்தை  கடைபிடிப்பதும், சாஸ்திர தொடர்புடைய ஞானமார்க்கத்தில் செல்வதும்.”யஸ்ய ஞானமயம் தப:” ஞானமே தவம். 

இந்த இரண்டும் மேற்கொண்டால்தான் ஆத்ம வித்யையை அறியமுடியும். எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தை அடைய வேண்டும் என்றால் தவத்தின் மூலம் மட்டுமே முடியும். “தபஸா ப்ரஹ்ம விஜிஞ்ஜாஸஸ்வ” என்ற மந்திரத்தையும் உபநிஷத்து மாதா தெரிவிக்கிறாள்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 59. பரப்பிரம்மம் எப்படி மறைந்துள்ளது? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply