தினசரி ஒரு வேத வாக்கியம்: 60. உலக நட்பு!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

60. உலக நட்பு.

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“மித்ரஸ்ய சக்ஷுஷா சமீக்ஷாமஹே” -சுக்ல யஜுர்வேதம்.

“எப்போதும் உலகை நட்போடு பார்ப்போம்!”

மனிதர்களிடையே தொடர்புகள் அனைத்தும் நட்போடு விளங்க வேண்டும் என்ற விருப்பத்தைவேதம் பல இடங்களில்  வெளிப்படுத்துகிறது. ‘சௌமனஸ்ய சூக்தம்’ போன்றவற்றிலும், யோக சாஸ்திரத்திலும் கூட ‘மைத்ரீ’ பற்றி மிக அற்புதமான கருத்துகளை அளிக்கிறது.

ஒவ்வொருவரும் காலையில் தூங்கி எழுந்ததுமே இந்த வேத வாக்கியத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். சினேகத்திற்கு எத்தனை சிறந்த சக்தி இருக்கிறது என்றால் அடுத்தவர் தவறு செய்தாலும் சரி நம் நண்பராக இருந்தால் அதனை நல்லவிதமாக ஏற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பார். நட்பு இல்லாவிட்டால் பிறர் நல்லதே சொன்னாலும் தீமையாகத் தென்படும். அதாவது நம் சினேக பாவனையே பிறரிடமிருந்து என்ன பெறுகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. 

உத்தம குணங்களில் “மைத்ர: கருண ஏவச” என்கிறார் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. நட்பு, கருணை என்ற இரண்டு இயல்புகள் உள்ளன. அனைவரிடமும் நட்போடு விளங்கவேண்டும். உதவியற்ற நிலையில் உள்ளவர்களிடம் கருணையோடு விளங்கவேண்டும். கருணையும் நட்பின் மற்றுமொரு வடிவமே!

எப்போதும் உலகை நட்போடு பார்க்க வேண்டும் என்கிறது வேதம். நட்புப் பார்வை என்ற சொல்லில் ஒரு நயம் உள்ளது. மித்ரன் என்றால் சூரியன் என்று பொருள். மித்ரப் பார்வை என்றால் சூரியனின் பார்வையே. ஏனென்றால் சூரியனின் பார்வை எப்போதும் நட்போடு கூடியது. சூரியன் பிரபஞ்சத்தை சமமாகப்  பார்த்தபடி இருக்கிறான். அப்படிப்பட்ட சமமான பார்வைக்கே நட்புப் பார்வை என்று பெயர்.

இதற்கு வேதாந்தத்தின்படி பொருள் விளக்க வேண்டுமென்றால்… இன்பத்திலும் துன்பத்திலும் துள்ளாமலும் துவளாமலும் பகைவன், நண்பன் என்ற இரண்டு கருத்துகள் இல்லாமல் சமமாக விளங்கினால் அதுவே மித்ரப் பார்வை அல்லது சமமான பார்வை.

இவ்விதம் நாம் வாழ்ந்தால் அமைதியாக வாழலாம். அனைவரிடமும் சினேகத்தோடு பழகினால் வெறுப்பு வராது. பகை இருக்காது. அதே போல் சமமான பார்வை இருந்தால் சுகமோ துக்கமோ நம்மை பாதிக்காது.இருமைகளுக்கு அப்பாற்பட்டு வாழ முடியும். அது மோட்சத்திற்கும் காரணமாகக் கூடியது. 

அதனால்தான் “மித்ரஸ்ய சக்ஷுஷா சமீக்ஷாமஹே” என்ற வாக்கியம் இவ்வுலக வாழ்விலும் அமைதியை அளிக்கிறது. மேலுலகிற்கு வேண்டிய மோட்சத்தையும் அருளுகிறது. 

‘மைத்ரீ பாவனை’ உயர்ந்தது என்பதால்தான் பரமாச்சாரியார், “மைத்ரீம் பஜத அகில ஹ்ருஞ்ஜைத்ரீம்”என்றார். அனைவரின் மனங்களையும் ஒன்று சேர்ப்பது நட்பால் மட்டும்தான் முடியும்.

நட்பு என்றால் வம்பு பேசுவதற்கு துணைக்காக அல்ல. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதற்கும் ஒருவரை ஒருவர் மன்னிப்பதற்குமானது.

நட்புக்கு ஆறு குணங்கள் என்கிறார் பர்த்ருஹரி. நண்பன் தவறு செய்து விடாமல் தடுப்பது, நற்செயல்கள் செய்யும்படி தூண்டுவது, நண்பனைப் பற்றி வெளியிடக்கூடாத செய்திகளை சொல்லாமல் இருப்பது, அவனுடைய நற்குணங்களை பிரச்சாரம் செய்வது, ஆபத்துக்காலத்தில் விட்டு விலகாமல் அருகில் இருப்பது, தேவையான போது பொருளுதவி செய்து ஆதரிப்பது. இந்த ஆறு குணங்களும் நட்புக்கான தகுதிகள்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 60. உலக நட்பு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply