தினசரி ஒரு வேத வாக்கியம்: 61. சக்தி கொடு!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

61. சக்தி கொடு!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

“ஜனாய ஊர்ஜம் வரிவ: க்ருதி”  – சாமவேதம்.
“மக்களுக்கு சிறந்த வலிமையை அருள்!”

தார்மீக, ஆன்மீக வாழ்க்கையில் சாதாரணமாக உடல் வலிமையை பொருட்படுத்துவது இல்லை என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் பரிபூரணமான வலிமை பற்றி எடுத்துரைத்து அதனைப் பெறுவதற்கு தேவையான சாதனங்களை அளித்துள்ளனர் வேத ருஷிகள். 

ஆரோக்கியமும் புஷ்டியும் கொண்ட சரீர திடத்தன்மை, மானசீக பலம் இரண்டுமே தேவை. ஆனால் வலிமை சரியானதாக, நேர்மையானதாக, தர்மத்திற்கும் உலக நன்மைக்கும் உண்மையாக  பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே உயர்ந்த வலிமை!

ஒரு சாதனையோ, கருவியோ அவற்றை பயன்படுத்தும் முறையிலும் அதன் பயனிலும்தான் அதன் சிறப்பு இருக்கும். அதனால் உலக நன்மைக்குப் பயன்படக்கூடிய சிறந்த வலிமையை அருளும்படி இறைவனை வேண்ட வேண்டும்.

வலிமை இருக்கும் வரை புலன்களைத் திருப்தி படுத்துவதற்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் கேளிக்கைகளுக்கும் செலவழித்துவிட்டு பலம் குன்றிய பின் தர்மவழியில் சாதனை செய்யலாம் என்று நினைப்பது வெறும் கற்பனை! பலமிழந்த மனதும் வலிமையிழந்த உடலும் எதற்கும் பயன்படாது. 

எனவே திடமான நல்வலிமை பெறுவதற்காக நல்ல உணவும் நல்ல பழக்க வழக்கங்களும் தேவை. யோக சாஸ்திரத்தையும் ஆயுர்வேத வழிமுறைகளையும் ஆயுளும் ஆரோக்கியமும் அளிக்கும்  நியம நிஷ்டைகளோடு கூடிய வாழ்க்கை முறையையும் ஏற்பாடு செய்தனர் நம் ருஷிகள்.

நாயமாத்மா பலஹீனேன லப்ய:” -பலவீனமானவர்களுக்கு ஆத்ம சாட்சாத்காரம் கிடைக்காது என்பது வேதவசனம். 

உயிர் வாழும்வரை மக்கள் சிறந்த உடல் வலிமையோடு வாழவேண்டும் என்பது வேதத்தின் விருப்பம். உலகெங்கும் அவ்வாறு வலிமையானவர்கள் இருந்தால் இனி உலக நலனுக்கு குறை என்ன இருக்கப் போகிறது?

உடல்வலிமை எதற்காக தேவை? நம்மை துன்புறுத்துபவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும், சாதனை செய்து

vedantha desikar
vedantha desikar

இக உலகிலும் பர உலகிலும்  பயன் பெறுவதற்காகவும் உடல் வலிமை தேவை.

ஆனால் அத்தகைய வலிமையைப் பெறுவதற்குத் தேவையான சாதனங்களை நாம் தற்போது தொலைத்துவிட்டோம். இன்றைய தலைமுறைக்கு சுகமும் கேளிக்கையும் பெறும் ஆசை இருக்கிறதே தவிர அதற்குத் தகுந்த பலமும் புஷ்டியும் இல்லை.

அதற்கு காரணம் தேவையான உடற்பயிற்சி, யோகாப்பியாசம், தியானம் போன்ற உடல், மனப் பயிற்சிகள் இல்லாமல் போனதே! நம் பிள்ளைகள் செல்வந்தர்களாக, சுகவாசிகளாக வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் சிறு வயது முதல் உடற்பயிற்சிக்கும் விளையாட்டுக்கும் நேரமில்லாத ‘பிஸி ஸ்டடி’  ஷெட்யூலில் ஈடுபடுத்தி வலிமை குன்றியவர்களாக வளர்க்கிறோம். 

வேத வாழ்க்கை முறையில் சிறு வயது முதல் ஜபம், தியானம், பிராணாயமம், யோகாப்பியாசம் போன்றவை நித்திய வாழ்க்கை முறையாக இருந்தன. இவற்றால்  வலிமையும் ஆரோக்கியமும் கொண்ட  உடலும் திடமான மனதும் கூர்மையான அறிவும் பெற்று ஆன்மீகப்பயிற்சிக்கும் சிந்தனைக்கும் ஏற்ற புத்தி வளர்ச்சி இருந்தது.

ancient veda period guru sishya
ancient veda period guru sishya

சிறிது வெப்பமோ குளிரோ கூட தாங்கக்கூடிய பொறுமையோ பலமோ இல்லாத இளைய தலைமுறை உருவாகியுள்ளது. புலனடக்கம், ஒருமுகப்பட்ட மனம் என்ற இரு குணங்களும் மனதிற்கு ஆற்றலளிக்கும் அடித்தளங்கள். அவற்றை ஏற்படுத்தும் நேர்மையும், தார்மீக வாழ்க்கை முறையும், அதற்கான அறிவுரையும் தற்போது எங்குமே தென்படுவதில்லை.அதனால் மன உறுதியும் மறைந்துபோனது. பயங்கொள்ளித் தனம், கையாலாகாத தனம் போன்றவை– பொறுமை, சகிப்புத்தன்மை என்ற போர்வைகளில் வலம் வருகின்றன. பெரியவர்களிடம் கௌரவமின்மை, பாவச் செயலை செய்வதற்கு தயக்கமின்மை போன்றவை சாகசச் செயல்களாக கணக்கிடப்படுகின்றன. அதர்மம் செய்வதில் உற்சாகம், தர்மம் செய்வதில் அலட்சியம் உடலையும் மனதையும் பலவீனமாக்குகின்றன.

தளராத மன உறுதியும் யோகாப்பியாசம் போன்ற பயிற்சிகளால் கிடைக்கும் உடலுறுதியுமான தார்மீக பலம் நமக்குத் தேவை. அதற்காக முயற்சிக்க வேண்டும். அதற்கு கடவுள் அருள் வேண்டும்.

இங்கு கடவுளை பிரார்த்திப்பதில் நாம் ஒரு உபகரணத்தை (சாதனையை) கேட்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். அந்த சாதனையை அவர் அளித்தால் அதன்மூலம் தார்மீகச் செயல் புரிய வேண்டியது நம் கடமை. நம் வலிமையைக் கூட இறைவனின் பிரசாதமாக கருதும் பக்தி, பணிவு, கர்வமின்மை போன்றவை இந்த பிரார்த்தனையில் வெளிப்படுகின்றன.

“ஸ்ரோத்ரிய: அகாமஹத: த்ரடிஷ்ட: பலிஷ்ட:” என்று உபநிடதம் உரைக்கிறது. வேதம் கூறும் சதாச்சாரச் செல்வம், கண் போன போக்கில் மனம் போகாத சக்தி, உடல் மற்றும் மன வலிமை ஆகியவை பிரம்ம வித்யைக்குத் தேவை என்பது வேதவாக்கு.

அத்தகு சிறந்த வலிமையை  அருளி நம்மை தர்ம வீரர்களாக மாற்ற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம்!

தினசரி ஒரு வேத வாக்கியம்: 61. சக்தி கொடு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply