தினசரி ஒரு வேத வாக்கியம்: 62. இத்தனை தெய்வங்கள் ஏன்?!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

62. ஏன் இத்தனை தெய்வங்கள்? 

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாம வேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“யோ தேவாநாம் நாமதா ஏக ஏவ” – ருக்வேதம் 

“ஒன்றேயான பரமாத்மா அனேக தேவதைகளின் நாமங்களை கொண்டுள்ளார்!”

அனேகத்தை ஏகத்திலும் ஏகத்தை அனேகத்திலும் தரிசித்துக் கூறியது சனாதன தர்மம்!

“இருப்பது ஒரே கடவுள். உங்கள் மதத்தில் பல கடவுளர் உள்ளனர்” என்று நம்மை விமர்சிப்பவருக்கு விடை நம்  மதத்திலேயே உள்ளது.

கடவுள் ஒருவரே என்று நமக்கு யாரும் புதிதாகச் சொல்ல தேவை இல்லை. கடவுள் ஒருவர்தான். ஆனால் ஜீவர்கள் பலர்.  ஜீவ இயல்புகள் பலப்பல.  அவர்களை உய்விப்பதற்கே பரமாத்மா பல தேவதைகளாக வெளிப்படுகிறார் என்று மிகத் தெளிவாக வேதம் விளக்கியுள்ளது. இதனையே ஒவ்வொரு தெய்வத்தின் ஸ்தோத்திரமும் எடுத்துரைக்கிறது. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவனின் பெயர்கள், சிவ சஹஸ்ர நாமத்தில் விஷ்ணு நாமங்கள் போன்றவை இந்த தத்துவத்தையே இயம்புகின்றன.

varunan
varunan

இந்திரன் எமன் வருணன் போன்ற தேவர்கள் அனைவரும் நாம் கற்பனை செய்து படைத்தவர்கள் அல்லர். எல்லையற்ற படைப்பு நிர்வாகத்தில் தெய்வசக்தி பல்வேறு விதங்களில் வேளிப்பட்டது. அவற்றின் இயல்பு, சக்தி, தெய்வீக வடிவம் ஆகியவற்றை தரிசித்த ருஷிகள் அவர்களை மகிழ்விக்கும் வழிமுறைகளை நமக்கு எடுத்துரைக்கும் போதே அவற்றின் ஏக தத்துவத்தையும் விளக்கினார்கள்.

நம்மில் பலருக்கும் மிகப் பரிச்சயமான வேதவாக்கியமான “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி”  இதே உண்மையை  வெளியிட்டது. இன்னும் ஆழமாகச் சென்று அந்த ஒன்றேயான தெய்வம் வேறெங்கும் இல்லை என்றும் நம் இதயத்தில் இருக்கும் மகா சைதன்யமே அது என்றும் விவரித்தது.

“ஈஸ்வரஸ்ஸர்வ பூதேஷு ஹ்ருத்தேஸேSர்ஜுன விஷ்டதி” – 

“ஓ அர்ஜுனா! ஈஸ்வரன் சர்வ பிராணிகளின் இதயத்திலும் உள்ளான்”  என்றான் கீதாசார்யன்.

“ஆத்மா ஏகோ தேவ:”, “ஏகோ தேவ:சர்வ பூதேஷு கூட:”  என்று உபநிஷத்துகள் இதே கூற்றை விளக்குகின்றன.

ஸ்வாத்மைவ தேவதாப்ரோக்தா லலிதா விஸ்வவிக்ரஹா” – ஆத்மாவே லலிதா தேவதை. அதுவே விஸ்வ விக்ரஹம் என்பது பிரம்மாண்ட புராணக் கூற்று. 

வேதக் கலாச்சாரம் முழுவதும் பல விதங்களில் இந்த ஏக தத்துவத்தையே போதிக்கிறது. இதனை மனதில் கொண்டு இஷ்டதெய்வத்தைத் தேர்ந்தெடுக்கும் அனுமதியை சிறப்பாக அளித்துள்ளது வேதமதம்.

மானுட இயல்பையும் விஸ்வ சைதன்ய சக்தியையும் சரியாகப் புரிந்து பயின்ற ருஷிகளால் மட்டுமே இத்தனை தெளிவாக விளக்க முடியும். தெய்வங்கள் நாம் கற்பனையில்  தயாரித்ததோ, செல்லுபடி ஆவதோ அல்ல. 

மந்த்ரஸ்துத்யாச” -“மந்த்ரவாச்யார்தோ தேவ”என்ற வேத மந்திரங்களுக்கு நேரான திவ்ய சக்தி சொரூபங்கள் தேவதைகள். அவை கற்பனை வடிவங்கள் அல்ல. அந்த மந்திர சாதனையால் தென்பட்டவை.  அந்த மந்திரத்திற்கான உருவம் அவை.  அவையே ருஷிகள் வர்ணித்த தெய்வீக வடிவங்கள்.

தேவதைகள் பஞ்சபூதங்களுக்கு அதீதமான ஜோதி ஸ்வரூபங்கள். ஒரே ஜோதியின் பல்வேறு வடிவங்கள். எந்தக் கடவுளைப் பற்றிப் படித்தாலும் அவரே மிகச் சிறந்தவர்… அவரே லோகேஸ்வரன்… பரமாத்மா… என்று பார்க்கிறோம். உண்மையில் யார் சிறந்தவர்? என்று சந்தேகப்படுபவர்களும் உள்ளனர்.

sun
sun

சிறந்தவரும் பரப்பிரம்மமுமான லோகேஸ்வரன் ஒருவனே! அவனே இத்தனை தெய்வங்களாக ஆனான். எனவே எந்த தெய்வத்தைப் பார்த்தாலும் பரப்பிரமத்தை வர்ணித்தார்கள். இதுவே நம் தேவதைகளின் விஷயத்தில் புரிந்துகொள்ள வேண்டிய வழிமுறை.

ஒவ்வொரு தெய்வ சஹஸ்ரநாமத்திலும் இதர தெய்வங்களின் நாமங்களை நினைவுபடுத்துவதன் உட்பொருள் இதுவே.

சகல தெய்வங்களையும் நம் இஷ்ட தெய்வத்திலேயே தரிசிக்க வேண்டும். இந்த ஏகத்துவத்தை மறக்காமல் நம் இஷ்ட தெய்வத்தை பிரதானமாக வழிபட்டு, இதர தெய்வங்களை எப்போதும்போல் வணங்குவதே வேத மதம் கூறும் வழிபாட்டு முறை. இதன் மூலம் ஒருபோதும் மத வேறுபாடு வருவதற்கான வாய்ப்பு இல்லை.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 62. இத்தனை தெய்வங்கள் ஏன்?! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply