தினசரி ஒரு வேத வாக்கியம்: 70. கடமை தவறாதே!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

70. கடமை தவறாதே!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்  

“தேவ பித்ரு கார்யாப்யாம் ந ப்ரமதிதவ்யம்” – யஜுர்வேதம்
“தேவ பித்ரு காரியங்களில் அலட்சியம் கூடாது”.

இல்லற வாழ்வில் புகும் பிரம்மச்சாரிக்கு குரு அளிக்கும் உபதேசம் இது. தினமும் தேவ காரியம், பித்ரு காரியம் செய்ய வேண்டும். 

தேவர்களைத் திருப்திப்படுத்துவதும் பித்ரு தேவர்களை திருப்திப்படுத்துவதும் ஒவ்வொருவரின் கடமை. இதனை மிக முக்கியமான பணியாக கட்டளையிடுகிறது வேத தர்மம்.

நமக்கு வெளி நோக்குப் பார்வை மட்டுமே இருப்பதால் தேவர்களைப் பற்றிய உணர்வு இருப்பதில்லை. ஆனால் தேவர்களின் உதவி இல்லாவிட்டால் இயற்கையில் எதுவும் நடக்காது. பஞ்ச பூதங்கள், அவற்றின் சக்திகள், செயல்கள் அனைத்தையும் இயக்கும் விஸ்வ சக்திகளே தேவர்கள்.

அதேபோல் இயற்கையை அனுபவிக்கும் நம் புலன்களின் ஆற்றல்களும் தேவர்களின் அருளால் மட்டுமே இயங்குகின்றன. ஒவ்வொரு அவயவத்துக்கும் இயக்கும் சக்தியாக ஒவ்வொரு தேவதை உள்ளது. மனிதனின் நல்வினை தீவினைக்கு ஏற்ப அந்த தேவதைகளின் ஆற்றல் புலன்களில் நிரம்பியிருக்கும். அதனால் தேவதைகளுக்கு நன்றி கூற வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது.

எனவேதான் ருஷிகள் தேவ யக்ஞம் ஆற்ற வேண்டியது நம் கடமை என்றனர். தினமும் மூன்று சந்தியா காலங்களிலும் தெய்வ உபாசனையை விதித்துள்ளனர்.

நித்திய, நைமித்திக செயல்களால் தெய்வ வழிபாடு செய்கிறோம். தினமும் செய்யும் பூஜைகள் நித்திய கர்மாக்கள். விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, ஏகாதசி போன்றவை நைமித்திக கர்மாக்கள்.இன்னொன்று கூட உள்ளது. அவை காம்ய கர்மா. அதாவது ஏதாவது கோரிக்கையோடு செய்யும் விரதங்கள் போன்றவை. கோரிக்கை எதுவும் இன்றி இருப்பவர்கள் காமிய கர்மாக்களை விட்டு விடலாமே தவிர நித்திய, நைமித்திக கர்மாக்களை விடக் கூடாது.

எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று கூறும் யோகிகள் கூட “க்ருதக்னஸ்ய  நிவ்ருத்தயே” – “நன்றியின்மை என்ற குற்றத்திற்கு பரிகாரமாக” என்று கூறி நியமங்களுக்கு ஏற்ப தெய்வ ஆராதனை செய்வார்கள்.

இஷ்ட தெய்வத்தோடுகூட இதர தெய்வங்களின் வழிபாடும் அவசியமே என்று கூறுகிறது வேத சம்பிரதாயம். வீடு என்றால் அதில் க்ருஹ தேவதைகள் இருப்பார்கள். அவர்களை திருப்திப்படுத்துவதற்கு வீட்டில் விளக்கேற்றுதல், நிவேதனம் செய்தல் போன்றவை நடக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் நிம்மதி இருக்காது.

cauvery-pooja
cauvery-pooja

கோரிக்கைகளை இல்லை என்று சிலர் பகட்டாக கூறிக் கொண்டாலும், தேவை என்பது அனைவருக்கும் உண்டு. தேவைகள் நிறைவேறி வந்தால் அவை விருப்பங்களாகத் தோன்றாது. அவை நிறைவேறாத போது கோரிக்கைகளாக மாறும்

இச்சா சக்தி, அனுபவிக்கும் சக்தி இவைகூட தேவதைகளின் சக்திகளே. இவ்விரண்டும் சரியாக பணிபுரிந்து வருவதற்காக நன்றியும், பணிபுரிய வேண்டும் என்ற பிரார்த்தனையும் செய்ய வேண்டும். இவையே தெய்வ வழிபாடு என்பது.

நம் இருப்பிற்கு ஆதாரம் நம்  முன்னோர். தாய் தந்தையருக்கு மட்டுமின்றி தாத்தா பாட்டனாருக்குக் கூட நம் வாழ்க்கை அமைப்பில் முக்கிய பங்கு உள்ளது. பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள், கல்வி, செல்வம் அனைத்தும் மூதாதையரிடம் இருந்து கிடைத்தவையே. எனவே அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும். இது பெரியவர்களின் விருப்பம் மட்டுமல்ல. பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டிய பொறுப்பும் கூட.

உயிரோடு இருக்கும்போது தாய் தந்தையரை மகிழ்ச்சியாக வாழ வைப்பதும் அதன்பிறகு பித்ரு காரியம் மூலம் அவர்களைத் திருப்திப்படுத்துவதும் ஒவ்வொரு மனிதனின் கடமை. உடலளவில் பெரியவர்களோடான தொடர்பு விலகினாலும், சூட்சுமமாக எண்ட அளவில் அவர்களுடைய தொடர்பு நம்மை விட்டு நீங்காது. வாழும் காலம் முடிய நம்மோடு கூடவே இருக்கும். எனவேதான் வாழ்க்கை முழுவதும் பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

பித்ருக்கள் மறுபிறவி எடுத்து விட்டால்? போன்ற தர்க்கங்களுக்கு இடமில்லை. மறுபிறவி எடுக்காவிட்டால்? நாம் செய்யும் கர்மாக்களே அவர்களுக்கு சூட்சும உலகில் ஆதாரம். வேறு பிறவி எடுத்திருந்தாலும் அங்கு அவர்களுக்கு உதவும். அவர்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் பித்ருக்களின் மீது நன்றிக்கடன் செலுத்தும் புத்திரர்களை தேவதைகள் அனுகிரகம் செய்வார்கள்.

பரம்பரையாகச் செய்துவரும் தெய்வ காரியங்களில் இருந்தும் பித்ரு கர்மாக்களில் இருந்தும் ஒருபோதும் தவறக்கூடாது. தவறினால் பாவம் சேரும் என்பது சாஸ்திர வசனம்.

அப்படிப்பட்ட பரம்பரை கடமைகளிலிருந்து இன்றைய தலைமுறை விலகி வருகிறது. தினமும் நியமப்படி சற்று நேரமாவது தெய்வ வழிபாடு செய்வதில்லை. எந்த பண்டிகையை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளோம். செய்ய வேண்டிய விதிகளும் செய்யக் கூடாத  நிஷேதங்களும்  தாறுமாறாகி வருகின்றன. பித்ரு காரியங்களை மறந்தே போய்விட்டோம்.

சத்யம் வத- தர்மம் சர – மாத்ரு தேவோ பவ – பித்ரு தேவோ பவ – ஆசார்ய தேவோ பவ – அதிதி தேவோ பவ – என்று கூறியுள்ள கட்டளையிலேயே மேற்சொன்ன மந்திரத்தையும் கூறியுள்ளது வேதம்.

அதற்கு மாறாக நடப்பது தவறு. வேத தர்மத்தை கடைப்பிடிப்பதில் தேவ பித்ரு காரியங்களைத் தவறாமல் செய்வது மிக மிக முக்கியம்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 70. கடமை தவறாதே! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *