தினசரி ஒரு வேத வாக்கியம்: 77. மூலிகை மருத்துவம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

daily one veda vakyam 2 5
daily one veda vakyam 2 5

77. மூலிகை மருத்துவம்!

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன் 

“நம: ப்ருதிவ்யை நம ஓஷதீப்ய:” – யஜுர் வேதம் 
“பூமிக்கு நமஸ்காரம்! ஓஷதிகளுக்கு நமஸ்காரம்!”

பஞ்ச பூதங்களை ஜடப் பொருளாக அன்றி இறைவனின் கருணை வடிவங்களாகவும் சைதன்ய சொரூபங்களாகவும் வழிபடும்படி வேதமாதா போதிக்கிறாள்.

இந்தக் கருத்து வேதத்தில் தொடங்கி பாரதிய புராணங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், காவியங்கள் என அனைத்திலும் தெளிவாக காணப்படுகிறது. “ஈசாவாஸ்யமிதம் சர்வம்” – என்ற உபநிஷத்தின் பொருளும் இதுவே!

ஜனனீ ப்ருதிவீ காமதுகாஸ்தே“- பூமாதா அனைத்து விருப்பங்களையும் தீர்க்கும் காமதேனுவாக உள்ளாள்” என்று காஞ்சி பெரியவா ஸ்ரீஸ்ரீஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் கீர்த்தனை செய்தார். 

பூமியை பூதேவியாக வழிபட்டனர் மகரிஷிகள். பசுமை நிறைந்த காடுகளும் நதிகளும் செல்வம் மிகுந்தளிக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்து ஜகன்மாதாவாக போற்றினர். லலிதா, லக்ஷ்மி நாமங்கள் கூட பூமாதாவாக ஜகதம்பாளை தரிசிக்கச் சொல்கின்றன. 

தாய்ப்பால் சிசுவை பாதுகாப்பது போல பூமாதாவின் ஐஸ்வர்யங்கள் நமக்கு போஷணையும் ரட்சணையும் அளிக்கின்றன.

பிருதிவி அளிக்கும் செல்வங்களில் ஓஷதிகளான மூலிகைகள் மிகப் பிரதானமானவை. அதனால்தான் ஓஷதிகளை தேவதைகளாக தரிசித்தார்கள். இது உண்மை தரிசனம். கற்பனை அல்ல. தேவதைகளின் சக்திகள் ஔஷதிகளாக  வெளிப் படுகின்றன. அந்த சூட்சும ஒளி பொருந்தியவற்றை வேத ரிஷிகள் தரிசித்தார்கள்.

herbals2
herbals2

அற்புத சக்தி போருந்திய மருத்துவ மூலிகைகளை எவ்வாறு பறிப்பது? எவ்விதம் மருந்தாக மாற்றுவது? எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து மகரிஷிகள் பல சாஸ்திரங்களில் வெளியிட்டுள்ளார்கள். 

ஔஷதிகள் உயிருள்ளவை. தாம் விரும்பினால் மட்டுமே பிறர் கண்ணில் படும் மூலிகைகள் பல உள்ளன. ராமாயணத்தில் ஆஞ்சநேய ஸ்வாமி சஞ்சீவி பர்வதத்தை எடுத்து வந்தபோது அந்த மலையின் சிகரம் முழுவதும் சுவாமியின் கரங்களுக்குள் வரவேண்டுமென்று மூலிகைச் செடிகள் சூட்சும வடிவமெடுத்து மலையில் அமர்ந்தன என்று வால்மீகி வர்ணிக்கிறார்.

மனிதர்களில் தார்மிக சக்தி குறைந்தால் சில ஔஷதிகள் கிடைக்காது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. நம் பண்டைய வைத்திய நூல்கள் விவரித்துள்ள பல மூலிகைகளில் தற்போது சில மட்டுமே கிடைக்கின்றன. காடுகளை அழிப்பது, நம் சாஸ்திரங்களை அலட்சியம் செய்வது போன்றவை இதற்குக் காரணங்கள்.

ஆயுர்வேதக் கல்வி மீது தகுந்த ஊக்கமளிக்கும் பயிற்சி கூடங்கள் நம் தேசத்தில் இல்லை. மறுபுறம் பயங்கரமான சுற்றுச்சூழல் மாசு, செயற்கை மருந்துகளை நம்பியிருப்பது போன்றவற்றால் இயற்கையிலிருந்து விலகி விட்டோம்.

துளசி, மஞ்சள், வில்வம் போன்ற மருத்துவ குணமுள்ள தாவரங்களை நம் தினசரி வாழ்க்கை முறையோடு சேர்த்த கலாசாரத்தை இழந்து வருகிறோம்.

herbals
herbals

லட்சக்கணக்கான பணம் செலவு செய்தாலும் தீராத நோய்களை மிகக் குறைந்த செலவில் சிறிய மருத்துவ மூலிகையால் நீக்கக் கூடிய அற்புதமான கல்விக்கு ஆதரவளிக்காமல் விலக்கி வைத்துவிட்டு நோயாளியாக வாழ்ந்து வருகிறோம்.

இப்போதாவது விழித்துக் கொண்டு பண்டைய பாரதிய நூல்களை ஆராய்ந்து அந்த மூலிகை விஞ்ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை உணரவேண்டும்.மருத்துவ மூலிகைகள் பற்றிய செய்திகள் ஆயுர்வேத நூல்களில் மட்டுமின்றி புராணங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் கிராமிய வாழ்க்கை முறையிலும் ஏராளமாக கிடைக்கின்றன.

மலைவாழ் மக்களும்,  காட்டுவாசிகளும்அனுபவத்தோடு இயல்பான ஞானத்தால் மிகப் பல மருத்துவமுறைகளையும் மூலிகைகளையும் கண்டறிந்து பயனடைந்தார்கள். ஆனால் நவீன அறிவியலை அறியாதிருப்பது முட்டாள்தனம் என்று கணக்கிடப்பட்டு அவர்களின் இயல்பான மருத்துவ அறிவை அவர்களிடமிருந்து நீக்கி வருகிறோம். அதனால் அவர்களிடம் இருக்கும் பண்டைய அறிவு கூட மறைந்து வருகிறது. தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் மேல்நாட்டு மருத்துவமுறை பாரதிய ஔஷதி  விஞ்ஞானத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறது.

இந்த எதிர்ப்பையும் அலட்சியத்தையும் இப்போதாவது விலகிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்திடம் இதை எதிர்பார்க்க இயலாவிட்டாலும் தன்னார்வு தொண்டு அமைப்புகள், பீடாதிபதிகள், ஆசிரம நிறுவனங்கள் முன்வந்து  பல்வேறு மருத்துவ செடிகளை வளர்த்து பாதுகாத்து பாரதிய வைத்திய முறையை அபிவிருத்தி செய்வது உடனடிக் கடமை. 

இந்த வழியில் நம் அறிவைத் தூண்டும்படி “ஓஷதீனாம் பதயே நம:” என்று பகவானை பிரார்த்திப்போம்.

தினசரி ஒரு வேத வாக்கியம்: 77. மூலிகை மருத்துவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *