திருப்புகழ் கதைகள்: தடக்கைப் பங்கயம்..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 38
தடக்கைப் பங்கயம் (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

திருப்பரங்குன்றம் மேவிய முருகா, அடியேனை ஆண்டருள்வாயே என அருணகிரியார் வேண்டும் திருப்புகழ். இனி பாடலைப் பார்க்கலாம்.

தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத் தஞ்சமென் …… றுலகோரைத்
தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்

தளர்ச்சிப் பம்பரந் …… தனையூசற்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப் பஞ்சஇந் …… த்ரியவாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத் தொண்டுகொண் …… டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்

புரக்கக் கஞ்சைமன் …… பணியாகப்
பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடுந் …… தனிவேலா

குடக்குத் தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற் கங்கைதன் …… சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக் கும்பிடும் …… பெருமாளே.

பாடலின் பொருளாவது – பிரமதேவனை படைக்கும் தொழிலிலும், உருத்திரமூர்த்தியை அழித்தல் தொழிலிலும், திருமாலைக் காத்தல் தொழிலிலும் நியமித்து, அவர்கட்கு அவ்வப்போது சூராதியவுணர்களால் வரும் அச்சத்தையும் அல்லலையும் அகற்றி, எப்போதும் மேலான பொருளாக விளங்கும் ஒப்பற்ற வேலாயுதக் கடவுளே! மதுரைமா நகருக்கு மேல் திசையில் உள்ள இனிய திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவரே! மேலான கங்காதேவியின் இளங்குமாரரே!

தினைப்புனத்தில் முன்னாளில் சென்று குறமாதாகிய அழகிய பொற்கொம்பு போன்ற வள்ளிநாயகியை, சிவந்த கர மலரைக் கூப்பிக் கும்பிட்ட பெருமிதம் உடையவரே! உலகில் உள்ள உலோபிகளிடம் போய் உம்முடைய கரம் பதுமநிதிக்கு நிகர் என்றும், நீர் கொடுப்பதில் மேகம் போன்றவர் என்றும், இனிய தமிழ் மொழிக்கு நீரே அடைக்கலம் என்றும் கூறிப் புகழ்ந்து பாடி ஒன்றும் ஊதியம் பெறாது துன்புற்று உள்ளம் புண்ணாகியவனும், ஆடி ஓய்ந்த பம்பரம் போன்றவனும், ஊஞ்சலில் வைத்த மண் குடம் போன்றவனும், ஐந்து இந்திரியங்களுடன் கூடியவனுமாகிய அடியேனை ஒரு நொடியில் திருத்தி, உமது தண்டையணிந்த தாமரைத் திருவடிகளில் தொண்டு செய்யுமாறு ஆட்கொண்டருள்வீர் – என்பதாகும்.

குபேரனின் நவநிதி

இப்பாடலின் முதல் வரியில் வரும் தடக்கை பங்கயம் என்ற சொற்றொடர், – புலவர்கள் பொருளாசையால் உலோபிகள் இருக்கும் வீடு தோறும் சென்று, பரமலோபியான அத் தனவந்தனைப் பார்த்து பல்லைக் காட்டிக் கையை நீட்டி, “உன் திருக்கரம் பதுமநிதிக்குச் சமமானது” என்பர் – எனப் பொருள்படும். பதுமநிதி, சங்கநிதி என்று இரு நிதிகள் உண்டு. அவைகள் பத்மம் போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும், சங்கு போன்ற உருவம் பதித்த பொற்காசுகளையும் எடுக்க எடுக்கச் சுரந்து கொண்டே இருக்கும் அரிய நிதிக்குவைகள்.

செல்வத்துக்கு அதிபதியாகத் திகழ்பவர் குபேரன். பக்தியுடன் பூஜிப்போர்க்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, வருபவர்களை செல்வச் செழிப்பாக மாற்றுபவர். வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.

மனைவி சித்திரரேகையோடு இணைந்து அன்பர்களுக்கு அருளாசி வழங்குபவர். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்கள் குபேரனுக்கு இருக்கிறார்கள். சிவந்த மேனியும் குள்ளமான உருவமும், பெரிய வயிறும் உடையவராக இவர் வர்ணிக்கப்படுகிறார்.

(1) பத்ம நிதி, (2) மஹாபத்ம நிதி, (3) மகர நிதி, (4) கச்சப நிதி, (5) குமுத நிதி, (6) நந்த நிதி, (7) சங்க நிதி, (8) நீலம நிதி, (9) பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர்.

குபேரனின் வரலாற்றை நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: தடக்கைப் பங்கயம்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply