அண்ணா என் உடைமைப் பொருள் (7): மிகப் பெரும் அங்கீகாரம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 7
எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்
– வேதா டி. ஸ்ரீதரன் –

ப்ரின்டிங் வேலைகள் – அதிலும், ஆஃப்செட் ப்ரின்டிங் – உண்மையில் எரிச்சலூட்டும் வேலை தான். காரணம், புத்தக உருவாக்கம் என்பது நிறைய சின்னச் சின்ன வேலைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு வேலைக்காகவும் ஒவ்வொரு திசையில் ஓட வேண்டும். இதனால் அலைச்சலும் தாமதமும் தவிர்க்க முடியாதவை.

இதனால் பெரும்பாலும், யாரிடமாவது இந்த வேலைகளை ஒப்படைப்பது எளிய தீர்வாக இருக்கும். இவ்வாறு ப்ரின்டிங் ஆர்டரை ஏற்கும் நபர் அனைத்து இடங்களுக்கும் சென்று எல்லா வேலைகளையும் முடித்துக் கொடுப்பார். உரிய பில்களுடன் தனது கமிஷனையும் சேர்த்து அவர் பணம் பெற்றுக் கொள்வார். அண்ணா புத்தகங்களுக்கு இவ்வாறு ப்ரின்டிங் பணிகளை முடித்துத் தரும் வேலையைத் தான் நாங்கள் செய்து தந்தோம்.

புத்தகம் எழுதி முடித்ததும், அதை கம்ப்யூட்டரில் டைப் செய்து, பக்க வடிவமைப்பை முடித்து, ஃபைனல் லேசர் ப்ரின்ட் அவுட் முடிப்பது தான் முதல் கட்ட வேலை. அந்த ப்ரின்ட் அவுட்டை எங்களிடம் தருவார்கள். அடுத்தடுத்த வேலைகளை நாங்கள் முடித்து, இறுதியாக, புத்தகப் பிரதிகளை டெலிவர் பண்ணுவோம்.

இந்த இடத்தில், அண்ணாவின் வேலை முறை குறித்த ஒரு தகவலைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அண்ணா பெரும்பாலும், தனது வேலைகளைத் தானே செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார். அதிலும், அவரது கட்டுரைகளை மற்ற யாராவது ப்ரூஃப் படித்தால் அவருக்குத் திருப்தி ஏற்படாது. இது அவருக்கும் வேலைப்பளுவை அதிகரித்தது. மற்றவர்களுக்கும் சிரமம் தருவதாக இருந்தது.

பத்திரிகைகளில் வெளியாகும் தன்னுடைய கட்டுரைகளைக் கூட அண்ணாவே ப்ரூஃப் படிப்பார். திவ்ய வித்யா ட்ரஸ்ட் புத்தக விஷயத்திலும் அப்படியே. கடைசிவரை பிழைத் திருத்தம் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டு அவர் பார்த்து ஓகே சொன்ன பிறகு தான் புத்தகத்தை அச்சிட முடியும்.

kanchi munivar ninaivu kathambam book - 4

நாங்கள் அச்சுப் பணியை ஏற்றதும் இதில் ஒரு சிறிய மாற்றம் வந்தது. அண்ணா கடைசி ப்ரூஃப் படித்து முடித்ததும், நாங்களே பிழைத் திருத்தம் போட்டு அச்சு வேலைகளைத் தொடங்க அனுமதித்தார். இந்த நிலையில், அனேகமாக, பத்துப் பதினைந்து திருத்தங்கள் பாக்கி இருக்கும். நாங்களே டிடிபியில் போய் அந்தத் திருத்தங்களைப் போட்டு வாங்கிக் கொள்வோம். அந்தத் திருத்தங்களை நான் சரி பார்த்தால் போதும், அண்ணாவிடம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

இதுதான் அண்ணா தன்னுடைய பணிகளில் என்னைச் செய்ய அனுமதித்த முதல் வேலை.

Ra Ganapathy1 - 5

இதன்பின்னர், படிப்படியாக என்னை ப்ரூஃப் படிக்க அனுமதித்தார். சில வருடங்களுக்குப் பின்னர், அண்ணா மட்டும் படித்தால் போதாது, ஶ்ரீதர் ப்ரூஃப் படித்தே ஆக வேண்டும் என்று சொன்னார். தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதி டைப்செட் ஆகி வந்திருந்த போது அண்ணா உடல்நிலை பாதிப்புகள் ஆரம்பம். ‘‘எனக்கு உடம்பு முடியல. அதனால நீ மட்டும் படிச்சா போதும். ப்ரூஃப் மட்டுமில்லை, எடிட் பண்ணுவது, தலைப்புகள் போடுவது உட்பட மொத்த வேலைகளையும் நீயே பார்த்து விடு’’ என்று கூறினார்.

எனக்கு வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. என்னிடம் முழுமையாகப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அண்ணாவும் ஒரு தடவை ப்ரூஃப் படித்தார்.

இதற்கு அடுத்த நாட்களில் அண்ணா புதிதாக எழுதுவது ஏறக்குறைய நின்று விட்டது. பழைய நூல்கள் மறு அச்சு மட்டுமே. எனவே, ப்ரூஃப் வேலைகளும் குறைந்தன. ஃபிலிம் இல்லாத புத்தகங்களுக்கு மட்டுமே புதிதாக டைப்செட்டிங் செய்ய வேண்டிய தேவை வரும். இந்த நாட்களில் நான் மட்டுமே ப்ரூஃப் படிப்பேன். அண்ணா ப்ரூஃப் படிப்பதை அறவே நிறுத்தி விட்டார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (7): மிகப் பெரும் அங்கீகாரம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply