அண்ணா என் உடைமைப் பொருள் (9): மறைக்க விரும்பினேன்; மாட்டிக் கொண்டேன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 9
மறைக்க விரும்பினேன்… மாட்டிக் கொண்டேன்!
– வேதா டி. ஸ்ரீதரன் –

அச்சு வேலைகளின் முதல் கட்டம் டிடிபி தான். டிடிபி காரர்கள் லேசர் ப்ரின்ட் எடுப்பதற்கு ரொம்பத் தயங்குவார்கள். செலவு அதிகமாகும் என்பதே இதற்குக் காரணம். பெரும்பாலும் சென்னையில் ஒரு ப்ரூஃப் + ஒரு ஃபைனல் என இரண்டு லேசர் ப்ரின்ட் அவுட் மட்டுமே தருவார்கள்.

அண்ணாவோ இரண்டு தடவை ப்ரூஃப் படிப்பார். எனவே, ஃபைனல் ப்ரின்ட் எடுத்த பின்னரும் திருத்தம் போட வேண்டிய நிலை ஏற்படும். டிடிபியில் இந்தத் திருத்தங்களைப் போட்டு மொத்தப் புத்தகத்தையும் இன்னொரு ப்ரின்ட் எடுத்துத் தர மாட்டார்கள். மாறாக, திருத்தம் போட்ட வரிகளை மட்டும் தனியாக ப்ரின்ட் எடுத்துத் தருவார்கள். அனேகமாக பத்துப் பதினைந்து வரிகள் இதுபோல இருக்கும். முந்தைய ப்ரின்டில் உள்ள தவறான வரிகளின் மீது இந்தப் புதிய வரிகளை ஒட்டுவது எங்கள் வேலை.

பசையை வைத்து ஒட்டினால் ப்ரின்ட் அழுக்காகி விடும். ஃபிலிம் தரமாக இருக்காது. எனவே, டேப் வைத்து ஒட்ட வேண்டும். ஏற்கெனவே உள்ள வரியின் மீது புதிய வரியை கோணல் இல்லாமல் வைத்து ஒட்ட வேண்டும். மேலும், பின்னால் உள்ள தவறான வரியை வெட்டி நீக்க வேண்டும். மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டிய வேலை இது.

கருணைக் காஞ்சி கனகதாரை புத்தகம் அச்சிடும் போது இந்த வேலையில் ஒரு சிறிய தவறு நடந்து விட்டது. பிழையுள்ள பழைய வரியை முழுமையாக வெட்டி நீக்காமல் பாதி மட்டும் நீக்கி இருந்தோம். இது பெரிய குற்றம் அல்ல என்றாலும், அந்த வாக்கியம் படிப்பதற்கு அபத்தமாக இருந்தது.

kanchi munivar ninaivu kathambam book - 4

அச்சுப் பணிகள் நிறைவடைந்த போது மணி ஏழு இருக்கும். அண்ணாவுக்குத் தருவதற்காகக் கையில் இரண்டு பிரதிகளை மட்டும் எடுத்துக் கொண்டேன். மீதிப் பிரதிகளை திவ்ய வித்யா ட்ரஸ்ட் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

அண்ணாவிடம் வர ஆரம்பித்த சில மாதங்களில் சுந்தரம் பஜன்ஸ் எனக்கு அறிமுகமானது. வாராவாரம் ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாமல் சுந்தரம் போய் விடுவேன். கருணைக் காஞ்சி புத்தகம் கைக்கு வந்த தினம் சிவராத்திரி. அன்று இரவில் கண் விழித்திருக்கலாம் என்று சுந்தரம் போய் விட்டேன். அங்கே தொடர்ச்சியாக ஏதேதோ நிகழ்ச்சிகள் இருந்தன. நான் இடையிடையே வெளியே வந்து மைதானத்தில் சும்மா அமர்ந்திருந்தேன். சும்மா இருக்கும் போது புத்தகத்தைப் படித்து முடித்து விடலாம் என்று கருணைக் காஞ்சி புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். சுமார் மூன்று மணி நேரத்தில் படித்து முடித்தேன்.

அப்போது தான் அந்தப் பிழையான வரி கண்ணில் பட்டது.

அதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் வெட்கமாக இருந்தது. இருந்தாலும், ஒரே ஒரு வாக்கியத்தில் தானே பிழை! வாசகர்கள் கண்ணில் படத்தான் செய்யும். என்னதான் தவறான வாக்கியமாக இருந்தாலும் பொருள் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. அச்சான பின்னர் அண்ணா இந்தப் புத்தகத்தை வாசிப்பாரா என்பது சந்தேகம் தான். எனவே, அண்ணா கண்ணில் இந்தப் பிழை தென்பட வாய்ப்பே இல்லை. யாராவது கண்டு பிடித்துக் கேட்டால், அப்போது பார்த்துக் கொள்ளலாம், நாமாகப் போய் யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று முடிவு பண்ணினேன்.

Ra Ganapathy - 5

அந்த நாட்களில் அண்ணா தண்டையார்பேட்டையில் மோகனராமன் இல்லத்தில் தங்கி இருந்தார். மறுநாள் அவரை நேரில் பார்த்து அந்த இரண்டு பிரதிகளையும் கொடுத்தேன். ரொம்பவும் சந்தோஷமாகப் பிரதிகளைக் கையில் வாங்கிய அண்ணா, அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டார். பின்னர், ஒரு பிரதியைப் பிரித்து ஏதோ பக்கத்தைப் பார்த்தார். அடுத்து ஏதோ இன்னொரு பக்கத்தை எடுத்தார். அந்தப் பக்கத்தில் தான் அந்தத் தவறான வரி இருந்தது. பக்கத்தைத் திறந்ததுமே முதலில் அவர் கண்ணில் பட்டது அதுதான். ‘‘ஐயய்யோ என்னப்பா இது! ஏடாகூடமா ப்ரின்ட் ஆகியிருக்கு!’’ என்றார்.

நான் அசடு வழிந்தது பெரிய விஷயம் அல்ல. ஆனால், இதன் பின்னர் தான் அண்ணாவுக்கு எங்கள் மீது நம்பிக்கை கூடியது என்பது ரொம்பவே விசேஷமான செய்தி. இந்த நம்பிக்கையின் விளைவாக அண்ணா எடுத்த சந்தோஷமான முடிவு தான் தீராத விளையாட்டு சாயி புத்தகம்.

அண்ணா என் உடைமைப் பொருள் (9): மறைக்க விரும்பினேன்; மாட்டிக் கொண்டேன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply