அண்ணா என் உடைமைப் பொருள் (12): உபவாசமும் அடியார் சேவையும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 12
உபவாசமும் அடியார் சேவையும் கிடைத்தன
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவுக்காக நான் முதன் முதலில் ப்ரூஃப் படித்தது இந்தப் புத்தகமே. மேலும், இந்தப் புத்தகம் பல விதங்களில் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

அண்ணா எனக்கு ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிய வைத்தார். முழுமையாக என்றால், முழுமையாகவே – முழுக்க முழுக்க முழுமையாகவே. இந்தப் புரிதலுக்கான பிள்ளையார் சுழியாக அமைந்தது இந்தப் புத்தகமே. பின்னாட்களில் பல்வேறு விதங்களில் இந்த நூல் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னிடம் படிப்படியான உருமாற்றங்களை ஏற்படுத்தியது. பாரதத்தின் பண்பாட்டுப் பாரம்பரியம் – குறிப்பாக, கல்விப் பாரம்பரியம் – பற்றிய சில நுண்ணிய விஷயங்களை நான் புரிந்து கொள்வதற்கு (‘‘எனக்குப் புரிய வைக்கப்படுவதற்கு’’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.) காரணமாக அமைந்ததும் இந்த நூலே.

பார்க்கப்போனால், அண்ணாவை நான் முழுமையாக உள் வாங்கிக் கொள்ள ஆரம்பித்ததே இந்தப் புத்தகத்தின் மூலம் தான்.

Ra Ganapathy - 1

நவராத்திரி நாயகி புத்தகம் என்றாலே அதில் அண்ணா எழுதியுள்ள முகவுரை என்கிற முக்கிய உரை தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். நவராத்திரி நாயகி என்பது தேவி சரிதத்தைக் கூறும் புராணக் கதை. அதற்கு அண்ணா எழுதிய முகவுரை இது.

அதில் என்ன விசேஷம் என்று யாராவது கேட்டால், குஸ்திச் சண்டை என்று பதில் சொல்வேன். அதாவது, அண்ணா அத்வைதிகளுடன் சண்டை போட்டார். மகா பெரியவா அத்வைதி அல்லவா? அப்படியானால் அண்ணா மகா பெரியவாளுடன் சண்டை போட்டாரா? என்ற கேள்வி உங்களுக்கு ஏற்படலாம்.

ஆமாம், ஆமாம், ஆமாம்.

நீங்கள் அதுபோலப் புரிந்து கொண்டால் அதில் தவறே இல்லை. ஆனால், கூடவே இன்னொரு விஷயத்தையும் சேர்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணா ஒரு கோஷ்டி, அத்வைதிகள் எதிர் கோஷ்டி என்று நடைபெறும் அந்த குஸ்தியில் சில சமயம் அத்வைதி மகா பெரியவா அண்ணா கோஷ்டிக்கு வந்து விடுவார். வேறு சில சமயம் அண்ணா ஸேம் ஸைடு கோல் போட்டு விட்டு பெரியவா கோஷ்டிக்குத் தாவி விடுவார். குஸ்தி போட்டுக் கொண்டிருக்கும் போதே திடீர் திடீரென்று அண்ணா அத்வைதிகளுக்கு நமஸ்காரம் பண்ணி விடுவார்.

நான் அந்தப் பகுதியைப் பற்றி ரொம்ப வேடிக்கையாகக் குறிப்பிடுகிறேன். ஆனால், அதை யாரும் அவ்வளவு சுலபமாக எடுத்துக் கொள்ள முடியாது. நானும் அந்தக் காலத்தில் அந்தப் பகுதியைப் படித்து மண்டையை உடைத்துக் கொண்டவன் தான்.

அதேநேரத்தில், நவராத்திரி நாயகி நூலுக்கு அண்ணா எழுதிய இன்னொரு முகவுரையும் உண்டு. இரண்டாம் பதிப்புக்கான முகவுரை அது. முகவுரை என்கிற முக்கிய உரையின் நீட்சி என்று அதைக் கருதலாம். நமது பாரம்பரியத்தின் நுட்பமான சில அம்சங்களை எனக்குக் கோடிட்டுக் காட்டிய பகுதி அதுதான்.

நவராத்திரி நாயகியின் புராணப் பகுதி, முகவுரை என்கிற முக்கிய உரை, இரண்டாம் பதிப்புக்கான முகவுரை ஆகிய மூன்றையும் பற்றிய சில விவரங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன் அவற்றை இந்தத் தொடரின் நிறைவுப் பகுதியில் பார்க்கலாம்.

Ra Ganapathy1 - 2

நவராத்திரி நாயகி புத்தகம் ப்ரூஃப் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புட்டபர்த்தி போயிருந்தேன். இது எனது மூன்றாவது புட்டபர்த்தி விஜயம். முதல் தடவை போயிருந்த போது பிரசாந்தியில் தங்குமிடம் இருப்பதே தெரியாமல் வெளியில் அறை எடுத்துத் தங்கினேன். (சென்னையில் இருந்து புட்டபர்த்திக்கு நேரடி பஸ் சர்வீஸ் இருந்தது என்ற தகவல் கூட அப்போது எனக்குத் தெரியாது.)

இரண்டாவது தடவை பிரசாந்தியில் டார்மிடரியில் தங்கினேன். ஆகா, ஒரு ஆளுக்கு வெறும் இரண்டு ரூபாய் மட்டுமே! ஆனால், கொசுக்கடி தாங்க முடியவில்லை.

இந்தத் தடவையும் டார்மிடரியிலேயே தங்கலாம் என்று முடிவு செய்தேன் டார்மிடரிக்கான க்யூவில் நின்றேன். ரசீது போடும் ஊழியரிடம், ‘‘டார்மிடரியில் ஏதாவது போர்வை கிடைக்குமா?’’ என்று கேட்டேன். அவ்வளவுதான்! அ்ந்த மனிதர் ஏதோ அசிங்கத்தை மிதித்தவர் போலத் திடுக்கிட்டுப் போனார். எனக்கு பிரசாந்தியில் தங்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார். எனக்கு இதற்கான காரணம் புரியவில்லை. காரணம் என்ன என்று அவரிடம் கேட்டேன். இடம் தர முடியாது என்பதற்கு மேல் அவர் எந்த பதிலும் சொல்லத் தயாரில்லை. மாறாக, நான் சாய் சமிதி உறுப்பினரா என்பதைத் தெரிந்து கொள்வதிலேயே அவர் குறியாக இருந்தார். (நான் சமிதி உறுப்பினர் என்றால் யாரிடமும் புகார் செய்து விடுவேன், இதனால் தனக்கு எதுவும் பிரச்சினை வரலாம் என்ற அச்சமோ என்னவோ!)

காரணம் தெரியாமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று நான் அங்கேயே நின்று விட்டேன். ஆனால் அந்த மனிதரோ, ‘‘நோ ஆர்க்யுமென்ட்ஸ்’’ என்று கத்துகிறார். இதற்குள் பல விநாடிகள் கடந்து விட்டன. எனக்குப் பின்னால் நின்றிருப்பவர்கள் பொறுமை இழக்க வாய்ப்பு உண்டு. அதையும் விட முக்கியமான காரணம், எனது கோபம். எனக்குக் கோபம் வந்து விட்டால் ஏடாகூடம் ஆகிவிடும். எனவே, என்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.

சாயி பெயரில் அனைத்து ஊர்களிலும் இயங்கும் அனைத்து அமைப்புகளுக்கும் ஸ்வாமி ஒருவர் தான் சொந்தக்காரர். அவருக்காக மட்டுமே அனைவரும் வருகிறார்கள். வசதி இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோருமே காணிக்கை தருகிறார்கள். சமுதாயத்தில் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் கூட சாயி ஸ்தாபனங்களில் எல்லா மட்டங்களிலும் – செருப்பு அடுக்கி வைப்பது உட்பட – சேவை செய்து கொண்டிருப்பார்கள். ஸ்வாமியின் சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. அதில் பெரும்பாலானோர் சம்பளம் வாங்காமல் தன்னலமின்றி சேவை செய்பவர்கள்.

இவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒருவரைத் தான் தெரியும். அது ஸ்வாமி, ஸ்வாமி, ஸ்வாமி மட்டுமே. அவருக்காகவே அனைவரும் பணிபுரிகிறார்கள். ஸ்வாமி தனது ஆசிரமத்தில் பக்தர்களுக்காக ஏதேதோ வசதிகளை ஏற்படுத்தினால், இந்த ஆசாமியைப் போன்ற சிலர் ஸ்வாமியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்களே என்ற ஆத்திரம் எனக்கு. ஸ்வாமியின் பணத்தை இந்த ஆசாமி எனக்குப் பிச்சை போடுவதாக நினைத்துக் கொண்டாரோ என்ற கேள்வி எனக்குள் மீண்டும் மீண்டும் தலை தூக்கியது.

நேரம் செல்லச் செல்ல, அந்த ஊழியர் மீதான ஆத்திரம் ஸ்வாமி மீதான கோபமாக உருவெடுத்தது. ஆம், அவரது ஸ்தாபனத்தில் நடக்கும் தவறுகளுக்கு அவர் தானே பொறுப்பாளி! அவரது சங்கல்பம் இல்லாமலா இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க முடியும்? நான் பிரசாந்தியில் தங்கக் கூடாது அவரது சங்கல்பமா? அவர் என்னைத் துரத்துவது எந்த வகையில் நியாயம்? இதுதான் அவரது சங்கல்பம் என்றால், நான் தெருவோரத்தில் தங்குகிறேன். அவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கட்டும் என்று தோன்றியது

பர்த்தியில் இரண்டு நாட்கள் தங்குவதாக உத்தேசம். என்னிடம் ஓரளவு பணம் இருந்தது. லாட்ஜில் தங்கி இருக்கலாம். ஆனால், விரும்பவில்லை. ஸ்வாமி என்னைப் பிச்சைக்காரனைப் போலத் தானே நடத்தினார்? பிச்சைக்காரனைப் போலவே தெருவில் தங்குகிறேன். அவர் ரொம்பவே சந்தோஷப்பட்டுக் கொள்ளட்டும். அன்று இரவு கொசுக்கடி எனது தூக்கத்தைக் கொள்ளையடித்து விடும் என்பது நன்றாகவே உறைத்தது. அதுவும் நல்லது தான். கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்காகப் போர்வை இருக்குமா என்று விசாரித்ததால் தானே ஸ்வாமி என்னைத் துரத்தினார்? மேலும், அந்த இரு நாட்களிலும் சாப்பிடாமல் இருப்பது என்று முடிவு செய்தேன். எனது பட்டினி அவருக்கு போனஸாக இருக்கட்டுமே!

நான் ஏகாதசி முதலான விரதங்கள் ஒருபோதும் இருந்ததில்லை. எவ்வளவோ வறுமையில் இருந்த நாட்களில் கூட பட்டினி இருந்தது கிடையாது. வேலை அல்லது பயண நிமித்தமாக எப்போதாவது சாப்பிட முடியாமல் போனது உண்டு. சில சந்தர்ப்பங்களில் சில இடங்களில் ஓட்டல் சாப்பாடு பிடிக்காமல் உணவைத் தவிர்த்தது உண்டு. எனினும், இதுபோன்றவை மிகவும் விதிவிலக்கான சம்பவங்களே. பெரும்பாலும் நான் பட்டினியே அறியாதவன். எனவே, இரண்டு நாள் பட்டினி என்பது எனக்கு ரொம்பவே கஷ்டமான விஷயம். இருந்தாலும், எனது உள்ளத்தில் ஸ்வாமியின் மீது ஏற்பட்ட ஆத்திரத்துக்கு அதுபோன்ற வடிகால் தேவையாக இருந்தது

அன்று தரிசன நேரம் தவிர மற்ற சமயங்களில் வெளியே சுற்றித் திரிந்தேன். அவ்வப்போது ப்ரூஃப் படித்தேன். இருட்டியதும் தெரு விளக்கு வெளிச்சத்தில் ப்ரூஃப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பையன் – சுமார் இருபது வயது இருக்கலாம் – என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். நான் அவனைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அவன் என்னைப் பற்றி ஆர்வமாக விசாரித்தான். பகல் முழுவதும் நான் வெளியிலேயே இருந்திருக்கிறேன் என்பதை அந்தப் பையன் கவனித்திருக்கிறான். அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவன் பேச்சில் தெரிந்தது. கையில் பணம் இல்லையா என்று கேட்டான். பணம் பிரச்சினை இல்லை. லாட்ஜில் தங்க விருப்பம் இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னேன். அவனைப் பற்றி விசாரித்தேன்.

அந்தப் பையன் ஹைதராபாதைச் சேர்ந்தவன். ஸ்வாமி தரிசனத்துக்காக வந்திருக்கிறான். அவன் பர்த்தி வருவது இதுவே முதல் தடவை. பஸ்ஸில் இருந்து இறங்கியதும் பார்த்தால் பர்சைக் காணோம். மொத்தப் பணமும் போய் விட்டது. சட்டைப் பையில் ஏதோ சில்லறைக் காசுகள் மட்டுமே. என்ன செய்வது என்று தெரியாமல் போலீஸ் ஸ்டேஷனில் போய் உதவி கேட்டிருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஏதோ ஓர் உறவினர் வீட்டில் தொலைபேசி உண்டு. போலீஸ் உதவியுடன் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு எஸ்டிடியில் பேசி விஷயத்தைத் தெரியப்படுத்தி இருக்கிறான். அங்கிருந்து அவனது வீட்டுக்குத் தகவல் போய்ச் சேர வேண்டும். வீட்டில் இருந்து யாராவது பணம் எடுத்துக் கொண்டு வர வேண்டும். அதுவரை அந்தப் பையன் கேர் ஆஃப் ப்ளாட்ஃபார்ம். நானும் அதேபோல இருந்ததால் அவனுக்கு என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.

அந்தப் பையன் பாவம்! யாரிடமும் உதவி கேட்க விரும்பாமல் நாள் முழுவதும் பட்டினி இருந்திருக்கிறான். அவனை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று டிஃபன் வாங்கிக் கொடுத்தேன். இரவு நாங்கள் இருவரும் ஏதோ ஒரு கடை வாசலில் கொசுக்கடிக்கு நடுவே உறங்க முயற்சி செய்தோம். மறு நாள் மூன்று வேளையும் அவனுக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன்.

நான் சாப்பிடாமல் இருப்பதற்கான காரணம் கேட்டான். விவரம் சொன்னேன். தனக்கு உதவி செய்ய ஆள் வேண்டும் என்பதற்காகவே ஸ்வாமி என்னை வெளியே தங்க வைத்து விட்டார் என்று அவன் நம்பினான்.

ஊருக்குத் திரும்பும்போது அவன் கையில் கொஞ்சம் பணம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொள்வதில் அவன் மிகவும் கூச்சப்பட்டான். ஆனாலும், அவன் குடும்பத்தில் இருந்து எப்போது ஆட்கள் வந்து சேர்வார்கள் என்பது தெரியவில்லை. எனவே, அவனை வற்புறுத்திப் பணத்தைக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டான்.

anna en udaimaiporul - 3

அண்ணா வாரத்தில் மூன்று நாட்கள் மௌன விரதம் இருப்பார். இதுதவிர, வருடம் ஒருமுறை ஒரு மாதம் முழுவதும் மௌன விரதம் இருந்ததும் உண்டு. தனது வேலைக்கு மௌனம் அவசியம் என்று அவர் எல்லோரிடமும் சொல்லுவார். ஆனால், பார்வையாளர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் பயன்படுத்திய கருவியே மௌனம் என்பது என் ஊகம். மௌனம் என்றாலும், நாம் பேசுவதைக் கேட்டுக் கொள்வார். அவரது கருத்துகளை எழுதிக் காட்டுவார்.

சென்னை திரும்பியதும் அண்ணாவைப் பார்க்கச் சென்றேன். அன்று அண்ணா மௌனம். பர்த்தியில் நடந்ததைப் பற்றி அவரிடம் சொன்னேன். புன்முறுவலுடன் அண்ணா, ‘‘ரொம்ப சந்தோஷம். உபவாசமும் அடியார் சேவையும் லபித்தன (கிடைத்தன)’’ என்று எழுதிக் காட்டினார்.

பல நாட்களுக்குப் பின்னர்தான் இதன் பொருள் எனக்குப் புரிந்தது. அதுவரை நான், பணத்தைத் தொலைத்த பையனுக்கு உதவுவதற்காக ஸ்வாமி என்னை வெளியே நிறுத்தினார் என்று நம்பி இருந்தேன். அதாவது, ஸ்வாமி அந்தப் பையனுக்கு நன்மை செய்தார் என்பது என் எண்ணம். இல்லை இல்லை, ஸ்வாமி எனக்கு அனுக்கிரகம் பண்ணினார் என்பதை அண்ணா எனக்குப் புரிய வைத்தார். எனக்கு உபவாசம் கிடைத்தது, எனக்கு அடியார் சேவை கிடைத்தது. அண்ணா சொல்வதற்கு முன் இது எனக்கு உறைக்கவே இல்லை.

அந்தப் பையனுக்கு என்னால் ஏதோ பிரயோஜனம் கிடைத்திருக்கலாம். ஆனால், உண்மையான பிரயோஜனம் எனக்குத்தான் என்பது புரிந்தது (புரிய வைக்கப்பட்டது).

அண்ணா என் உடைமைப் பொருள் (12): உபவாசமும் அடியார் சேவையும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply