திருப்புகழ் கதைகள்: கண்ணன் குழலிசையில் மயங்கிய உயிரினங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0ae95e0aea3e0af8de0aea3

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 84
களபம் ஒழுகிய – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளிய நாற்பத்திநான்காவது திருப்புகழ். களபம் ஒழுகிய எனத் தொடங்கும் இத்திருப்புகழ் திருச்செந்தூர் தலத்திற்குரியது. பொதுமாதர் உறவு நீங்க அருணகிரியார் பாடிய பாடல் இது. இனிப் பாடலைக் காண்போம்.

களப மொழுகிய புளகித முலையினர்
கடுவு மமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு சரிபுழு கொழுகிய குழலினர் ….. எவரோடும்
கலக மிடுகய லெறிகுழை விரகியர்
பொருளி லிளைஞரை விழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினி லெவரையு….. நகையாடிப்
பிளவு பெறிலதி லளவள வொழுகியர்
நடையி லுடையினி லழகொடு திரிபவர்
பெருகு பொருள் செறில் அமளியி லிதமொடு…. குழைவோடே
பிணமு மணைபவர் வெறிதரு புனலுணு
மவச வநிதையர் முடுகொடு மணைபவர்
பெருமை யுடையவ ருறவினை விடஅருள்….. புரிவாயே
அளையி லுறைபுலி பெறுமக வயில்தரு
பசுவி னிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ னொடுபுலி முலையுண மலையுடன்…. உருகாநீள்
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர….. விரல்சேரேழ்
துளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ்….. மருகோனே
துணைவ குணதர சரவண பவநம
முருக குருபர வளரறு முககுக
துறையி லலையெறி திருநகர் உறைதரு….. பெருமாளே.

இந்தத் திருப்புகழில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் இனிய புல்லாங்குழல் ஓசையினால் இயற்கைக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகள் நடப்பதை அருணகிரியார் பாடுகிறார்.

அந்த நிகழ்ச்சிகளாவான – மலைக் குகையில் வாழ்கின்ற புலியின் குட்டி பசுக்களின் மடியில் பால் குடிக்கின்றது; பசுவினுடைய ஆண் பெண் கன்றுகள் புலியின் முலையில் வாய் வைத்துப் பால் குடிக்கின்றன; மலை முதலியன இசையைக் கேட்டு உருகுகின்றன; நீண்ட கானகத்தில் உள்ள உலர்ந்த மரங்கள் தளிர்க்கின்றன; எல்லா உயிர்களும் அந்த இசையைக் கேட்டு உள்ளம் மயங்கி நிற்கின்றன; மதங்கொண்ட யானைகள் பெண் யானையுடன் ஒருபுறம் போகின்றன; உயரத்தில் பறக்கும் பறவைகள் நிலத்தில் இறங்கி வருகின்றன; இந்நிகழ்ச்சிகள் ஏன் ஏற்படுகின்றன என்றால், விரல் வைத்து வாசிக்கக் கூடிய ஏழு தொளைகள் உள்ள புல்லாங்குழலை விரல்களினால் முறையே தடவி, பலப்பல விதமான இன்னிசைகளை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உருவாக்குகிறார், அதனாலே இவை ஏற்படுகின்றன. – என அருணகிரியார் பாடுகிறார்.

புல்லாங்குழல் ஓர் இயற்கையான வாத்தியம். கானகத்தில் ஓங்கி வளர்ந்த முங்கில்களில் தீப்பிடித்துத் தொளை உண்டாகும். அத்தொளையின் வழியே காற்று வீசும் பொழுது இயற்கையில் நாதம் எழும். ஆகவே இயற்கை வாத்தியம் புல்லாங்குழல். இது யாழினும் முந்தியது. அதனால் “குழலினிது” என்கின்றார் திருவள்ளுவர்.

srikrishna - 10

புல்லாங்குழலில் ஏழு விரல்கள் அதாவது துளைகள் உள்ளன. இடக்கையில் உள்ள பெருவிரலும், சிறுவிரலும் நீக்கிய மற்றைய மூன்று விரல்களும், வலக்கையில் பெருவிரல் நீங்க மற்றைய நான்கு விரல்களும் குழலை இசைக்கப் பயன்படும் விரல்கள். இவற்றுள் சட்சமம், ரிஷபம், காந்தாரம், மத்திபம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற ஏழு சுரங்கள் பிறக்கும். இத்தகைய புல்லாங்குழலை முதன்முதலாக வாசித்தவர் முருகப்பெருமான். இதனை குழலன் கோட்டன் குறும்பல்லியத்தன் என வரும் திருமுருகாற்றுப்படைத் திருவாக்கால் நாம் அறிய முடிகிறது.

ஒவ்வொருவரையும் மயக்கும் இசை, புல்லாங்குழல் இசை. இதாய் நன்குணர்ந்தவர்கள் நமது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்.

சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ற இளையராஜாவின் பாடலின் தொடக்கத்தில் வரும் குழலிசை மனதை மயக்கும். CID ஷங்கர் படத்தில் நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன என்ற பாடலில் வரும் குழலோசை, அப்படலின் ஒரிஜனல் பாடலான ஜ்வல் தீஃப் பட்த்தில் வரும் தில் புகாரே ஆரே ஆரே ஆரே என்ற பாட்டில் வரும் புல்லாங்குழல் இசை இன்னமும் மறக்க முடியாதவை. அந்த புல்லாங்குழல் பற்றி விரிவாக நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: கண்ணன் குழலிசையில் மயங்கிய உயிரினங்கள்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply