அண்ணா என் உடைமைப் பொருள் (17): ‘அம்மா’

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 18
– வேதா டி. ஸ்ரீதரன் –

அம்மா – சாரதா பப்ளிகேஷன்ஸ் புத்தகங்கள் தயாராகி வந்த நிலையில் அம்மா புத்தகம் அச்சுக்கு வந்தது. இது சாரதா தேவியின் வாழ்க்கை வரலாறு பற்றியது. சாரதா பப்ளிகேஷன்ஸ் புத்தகங்களுக்குப் பிள்ளையார் சுழியாக சாரதா தேவி வரலாறு புத்தகம் அமைந்தது பற்றி எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

அப்போது ஒருநாள் அண்ணாவைப் பார்க்கப் போயிருந்தேன்.

‘‘அம்மா புத்தகம் ப்ரூஃப் படிச்சியே, எப்படி ஃபீல் பண்ணினாய்?’’ என்று கேட்டார், அண்ணா.

‘‘அன்னையார் பற்றி இதுவரை படிச்சதில்லை. புது ஸப்ஜெக்ட். அண்ணா எழுதின புக் படிக்கறோம்ங்கற சந்தோஷம். இது தவிர, ஸ்பெஷலா வேற ஒண்ணும் இல்லை அண்ணா!’’

‘‘ஏண்டா குழந்தை அப்படிச் சொல்றே!’’ என்று கேட்ட அண்ணா, ‘‘அது நான் ரொம்ப அனுபவிச்சு எழுதின புஸ்தகம்’’ என்று கூறினார்.

குருமகராஜ்-சாரதா திருமணம் முடிந்த பின்னர் இருவரும் குருமகராஜ் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மறு நாள் காலையில் குருமகராஜ் ஏரிக்கரையில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் அன்னையார் குடத்தில் நீர் எடுத்துக் கொண்டிருந்தார். குருமகராஜுக்கு அருகே தரையில் ஒரு சிறு குட்டையாக நீர் தேங்கி இருந்தது. அதில் ஒரு சிறு மீன் இருந்தது. பகல் வெயிலில் அந்த நீர் காய்ந்து விட்டால் மீன் இறந்து விடும்.

குருமகராஜ் தனது கால் கட்டை விரலால் தரையில் கீறி அந்த மீன் ஏரிக்குள் செல்வதற்கு நீர்ப்பாதை அமைத்துக் கொடுக்கிறார். இதன் பின்னர் அன்னையாரும் அவரும் சேர்ந்து வீடு திரும்புகிறார்கள். அவர்கள் இருவரும் வீ்ட்டுக்கு வெளியே முதல் முறையாக சந்தித்தது இப்போது தான். (இந்தச் சம்பவத்தை அண்ணா அந்த நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறார்.)

amma book - 4

இந்தச் சம்பவத்தை அப்போது என்னிடம் குறிப்பிட்ட அண்ணா, ஆங்கில நூலில் இந்தச் சம்பவத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தன்னையறியாமல் நிஷ்டை நிலையை அடைந்ததாகவும், அப்போது தன் எதிரில் அந்தக் காட்சி விரிந்ததாகவும் குறிப்பிட்டார். அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தது போன்ற அனுபவம் கிடைத்தது என்று தெரிவித்தார்.

மேலும், அந்தச் சரிதம் கல்கியில் தொடராக வந்தபோது பல வீடுகளில் போட்டி போட்டுக் கொண்டு முதல் ஆளாக அந்தத் தொடரை வாசித்தார்களாம். இதனால் ஏராளமான வீடுகளில் நாலைந்து பிரதிகள் வாங்குவார்களாம். கல்கி இதழ் கைக்கு வந்ததுமே அம்மா தொடரை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமே இதற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொடர் கல்கியில் வெளிவந்த போது அண்ணா ஒருமுறை ராமகிருஷ்ணா மடம் சென்றிருந்தாராம். அப்போது ராமகிருஷ்ணா மடத்து அண்ணா அந்த வழியாக வந்தாராம்.

(இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். ராமகிருஷ்ணா மடம் எத்தனையோ மந்திரங்களையும் சுலோகங்களையும் தமிழில் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்தவர் இவரே. இவர், அண்ணாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பரும் கூட.)

கணபதி அண்ணாவைப் பார்த்ததுமே அவர் மிகுந்த அன்புடன் கட்டித் தழுவிக் கொண்டாராம். ‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷம்ப்பா. அன்னையார் சரிதம் எழுதறே. இன்ட்யூடிவா புரிஞ்சுண்டு எழுதற போல’’ என்று பாராட்டிச் சொன்னாராம். இதை அண்ணா மிகுந்த பெருமையுடன் என்னிடம் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பாக அண்ணாவின் முதல் நூலான ஜயஜய சங்கர வெளியீட்டின் போது ராஜாஜி, ‘‘My colleague Ra. Ganapati…’’ என்று குறிப்பிட்டதையும் அப்போது நினைவு கூர்ந்தார்.

இந்த இரண்டு பாராட்டுகளையும் அண்ணா தனது எழுத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகக் கருதினார்.

Ra Ganapathy - 5

இதற்குச் சில வருடங்கள் பின்னர் சகாதேவ் சிங் என்ற நண்பர் இல்லத் திருமணத்துக்காகப் பெரியகுளத்துக்குச் சென்றிருந்தேன். எங்கள் பதிப்பகத்தின் பெயரைக் கேட்டதுமே அவர், ‘‘சாரதா தேவி பத்தி ரா. கணபதி எழுதிய அம்மா புஸ்தகம் படிச்சிருக்கீங்களா?’’ என்று கேட்டார். அண்ணாவுடன் எனக்கு உள்ள தொடர்பை அவரிடம் விவரித்தேன்.

அதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர், ‘‘அந்தப் புத்தகம் எனக்குள் இனம் புரியாத உணர்வலைகளை ஏற்படுத்தியது. மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் அந்த நூலை வாசித்தேன். அதுவரை எனக்குக் கடுமையான முதுகுவலி இருந்தது. அந்தப் புத்தகம் வாசிக்க வாசிக்க வலி குறைந்தது. புத்தகத்தை வாசித்து முடித்த போது முழுமையாக வலி மறைந்து விட்டது’’ என்று குறிப்பிட்டார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (17): ‘அம்மா’ முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply