அண்ணா என் உடைமைப் பொருள் (18): நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 19
நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை
– வேதா டி. ஸ்ரீதரன் –

ஒருமுறை நான் அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்த போது இரண்டு பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் அண்ணாவுக்கு நெருங்கிய உறவினர். இன்னொருவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர்.

அண்ணா, தனக்கு வந்திருந்த தீபாவளி பட்சணங்கள் நிறைய எடுத்து என்னிடம் கொடுத்தார். சாப்பிட்டவாறே அவர்கள் பேசுவதையும் கவனித்தேன்.

அந்த உரையாடலை என்னால் ஓரளவு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் புதிய நபர் ஶ்ரீவித்யா உபாசகர் என்பது மட்டும் புரிந்தது. அந்த உபாசனை விஷயத்தில் அவருக்கு குரு தேவை என்பதால் சிலரை அணுகி இருக்கிறார். அந்த அனுபவங்களை அவர் அண்ணாவிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அதுவரை அவர் சந்தித்த பெரியவர்கள் யாரும் அவரைச் சீடராக ஏற்கத் தயாராக இல்லை. கடைசியாக யாரையோ குறிப்பிட்டு அவரைப் போய்ப் பார்க்க இருப்பதாகத் தெரிவித்தார். அவர் தனது சிஷ்யராக ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

அப்போது அண்ணா அவரிடம், ‘‘என் கிட்ட எதற்காக வந்தாய்?’’ என்று கேட்டார். உடனே அவர், ‘‘பெர்மிஷன் வாங்கறதுக்காக வந்தேன்’’ என்றார்.

‘‘என்ன பெர்மிஷன்? அவர் கிட்ட சிஷ்யனாகறதுக்கா, இல்லேன்னா வேலையை விடறதுக்கா?’’ என்று கேட்டார்.

அந்த மனிதர் சிரித்துக் கொண்டே, ‘‘இரண்டு விஷயத்துக்காகவும் தான், அண்ணா’’ எந்றார்.

Ra Ganapathy1 - 1

‘‘முதல்ல நீ அவரைப் போய்ப் பாரு. அவர் உன்னை ஏத்துக்கறாரான்னு தெரிஞ்சுக்கோ. அதுக்கப்பறம் வேலையை விடறது பத்தி அவர் கிட்டயே கேட்டுக்கோ. அவர் சொல்றபடியே செய்’’ என்றார்.

அந்த மனிதர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

அவர் கிளம்பியதும் என்னிடம் அண்ணா ஒரு சிபிஐ வழக்கின் பெயரைக் குறிப்பிட்டார். அந்த நாட்களில் அந்த வழக்கைப் பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. மிக உயர்ந்த இடத்தில் இருந்த ஒரு மனிதர் மீதான ஊழல் கேஸ் அது. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் மிகவும் பிரபலமான வழக்குகளில் அதுவும் ஒன்று. அதைப்பற்றி எனக்குத் தெரியுமா என்று கேட்டார்.

‘‘கேள்விப்பட்டிருக்கேன், அண்ணா’’ என்றேன்.

‘‘இப்போ வந்துட்டுப் போனானே, இவன் தான் அந்த கேஸ்ல சிபிஐ லாயர். டெல்லியில …..….. கண்ணில விரலை விட்டு ஆட்டறான். அவனுக்கு இவனை நினைச்சாலே சிம்ம சொப்பனமா இருக்கு. இவன் என்னடான்னா வேலையை விடறதுக்கு பெர்மிஷன் கேட்கறான்’’ என்று சிரிப்புடன் கூறினார்.

அண்ணா சொன்ன தகவல் என்னைத் திடுக்கிடச் செய்தது. வீடு திரும்பும் போது அந்த மனிதரையே நினைத்துக் கொண்டு வந்தேன். பொருளாதாரத்திலோ சமூக அந்தஸ்திலோ உச்சத்தில் இருப்பது வேறு, ஆன்மிகத் தேடலில் நிறைவை அடைவது என்பது வேறு. இந்த உண்மையை எனக்குத் துல்லியமாகப் புரிய வைத்த உதாரணம் அந்த மனிதர்.

இந்தக் காலகட்டத்தில் நான் ஓரளவு அண்ணாவைப் புரிந்து கொண்டிருந்தேன். அண்ணா வெளியுலக அங்கீகாரங்களை ஒரு பொருட்டாக நினைக்காத மனிதர் என்பது எனக்கு நன்றாகப் பரிசயமாகி இருந்தது.. எனினும், ‘‘தனக்கு வெளியே ஒரு தேடலும் இல்லாத மனிதரால் தான் அவ்வாறு இருக்க முடியும்’’ என்பதை அன்றுதான் நான் புரிந்து கொண்டேன்.

இந்தக் காலகட்டத்தில் தான், நானும், என்னைச் சேர்ந்த வேறு சிலரும் அண்ணாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தோம். நெருங்கி என்று நான் சொன்னாலும் அது நெருங்கி இருக்கும் நிலை அல்ல. நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை அது. அவர் எங்களுக்கு மிகமிக அருகில் இருந்தார், மிகமிகத் தொலைவிலும் இருந்தார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (18): நெருங்கியும் தொலைவாகவும் ஒருங்கே இருக்கும் நிலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply