அண்ணா என் உடைமைப் பொருள் (20): கொஞ்சம் சினிமா!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் – 20
– வேதா டி.ஸ்ரீதரன் –

கொஞ்சம் சினிமா

ஜய ஜய சங்கர நூல் விஷயத்தில் சில கூடுதல் தகவல்களும் உண்டு. அந்தத் தொடர் கல்கியில் வெளியான காலத்தில் தமிழ்நாட்டில் அதற்கு மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. ஜய ஜய சங்கர அவரைப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆக்கி விட்டது. அதன் விளைவாக, ஸ்வாமி விவேகானந்தர் சரிதம் எழுதுமாறு அவரை ராமகிருஷ்ணா மடத்தினர் கேட்டுக் கொண்டார்கள். அவரும் எழுதினார்.

தமிழகத்தின் திரைத்துறையில் சிவாஜி கணேசன் மிகவும் பிரபலமாக இருந்த நாட்கள் அவை. அப்போது சிவாஜியின் நடிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஒரு புராணக் கதை எடுக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்தார்களாம். அவர்களது முதல் சாய்ஸ் ஜய ஜய சங்கர. ஆனால், ஏதோ காரணத்தினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. ஆசார்யாளுக்குப் பதிலாக, இதிகாச பாத்திரம் கர்ணனைப் பற்றி எடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டார்கள்.

அண்ணா இந்தச் சம்பவத்தைப் பற்றி என்னிடம் சொன்னபோது, ‘‘நல்ல வேளை ஆசார்யாள் தப்பித்தார்!’’ என்றுதான் நினைக்கத் தோன்றியது. தப்பித்தது அண்ணாவும் தான்.

anna alias ra ganapathy4 - 1

ஒருமுறை அண்ணா பெரியவா தரிசனத்துக்காக மடத்துப் போயிருந்தார். பெரியவா இருந்த பகுதிக்குள் அண்ணா நுழையும் வேளையில் பெரியவா தரிசனம் முடித்து திரும்பும் ‘‘யாரோ’’ ஓர் அன்பர் வெளியே சென்று கொண்டிருந்தார். அவர் யாரென்று அண்ணாவுக்குத் தெரியாது.

அண்ணாவிடம் பெரியவா, ‘‘நீங்கள்லாம் நல்ல பேப்பர்லதானே அச்சுப் போடுவேள்? வழவழா காகிதத்தில கலர் கலரா ஃபோட்டோ எல்லாம் போட்டுத்தானே அட்டை போடுவேள்? இங்கே ஒருத்தன் பாரு, சாணிப் பேப்பர்ல அச்சுப் போட்டு, அட்டையில கழுதைப் படத்தைப் போட்டு, அதையும் சாணிப் பேப்பர்லயே அச்சுப் போட்டு பத்திரிகை ரெடி பண்ணிருக்கான். பத்திரிகைக்குப் பேரு துக்ளக்னு வச்சிருக்கான்’’ என்று சொல்லி அந்தப் பத்திரிகைப் பிரதியையும் அண்ணாவுக்குக் காட்டினாராம்.

அண்ணா அதை ஆச்சரியத்துடன் கையில் வாங்கிப் பார்த்த போது, பெரியவா, ‘‘நீ உள்ள வர்றச்சே எதுத்தாப்ல ஒருத்தன் உன்னை க்ராஸ் பண்ணிப் போனானே, அவன் தான் ஆரம்பிச்சிருக்கான். அவன் பேரு சோ. ராமசாமி. சோ சோன்னு கூப்பிடுவா. சினிமால காமெடியன் வேஷத்தில நடிப்பான். பத்திரிகையோட முதல் பிரதியை எனக்கு சமர்ப்பணம் பண்றதுக்காக வந்து குடுத்துட்டுப் போறான்’’ என்று தெரிவித்தாராம்.

anna alias ra ganapathy7 - 2

அதுவரை அண்ணாவுக்கு சோ அறிமுகம் இல்லை என்ற தகவல் எனக்கு வியப்பாக இருந்தது.

அதற்குப் பின்னர் ஒரு தடவை சோ கல்கி அலுவலகத்துக்கு வந்த செய்தியையும் அப்போது அண்ணா குறிப்பிட்டார். ‘‘அவருக்கு ……… ஆபிசாரம் (துர்மாந்திரீகம்) பண்ணிட்டானாம். அதனால தான் சின்ன வயசிலேயே முடி கொட்டிப் போய் தலை வழுக்கை ஆயிடுத்தாம். பரிகாரம் என்ன பண்றதுன்னு சதாசிவத்திடம் கேட்பதற்காக வந்திருந்தார்’’ என்று அண்ணா தெரிவித்தார்.

அண்ணா என்னிடம் இந்தத் தகவலைச் சொன்னதற்குச் சில மாதங்கள் முன்பாக, துக்ளக்கில் சோ தனது வழுக்கைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு எழுதி இருந்தார். ஏதோ மருந்து சாப்பிட்டதால் ஏற்பட்ட பக்க விளைவினால் முடி கொட்டி வழுக்கை விழுந்ததாக அதில் சோ எழுதி இருந்தார். துர்மாந்திரீகம் பற்றி அதில் அவர் எதுவும் எழுதவில்லை.

பக்க விளைவு, துர்மாந்திரீகம் – இரண்டில் எது உண்மை என்று நான் அண்ணாவிடம் கேட்டேன். தனக்குத் தெரியாது என்று அண்ணா சொல்லி விட்டார்.

anna alias ra ganapathy8 - 3

அண்ணாவுக்கும் சோவுக்கும் இன்னொரு சம்பந்தமும் உண்டு. ஆர். வெங்கட்ராமன் சொன்னதன் பேரில், சோவும் எஸ். குருமூர்த்தியும் தெய்வத்தின் குரலில் இருந்து சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து சிறிய நூல் ஒன்றை உருவாக்க விரும்பினார்கள். தெய்வத்தின் குரல் பெரிய நூலாக இருப்பதால், நிறைய பேர் அதை வாசிக்க முடிவதில்லை என்பதால் அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது சோவும் எஸ்ஜியும் அண்ணாவிடம் அனுமதி கேட்பதற்காக அவரை நேரில் சந்தித்தார்கள். இந்தச் சந்திப்பைப் பற்றி என்னிடம் அண்ணா சொன்னபோது சோவின் பணிவை ரொம்பவும் பாராட்டிப் பேசினார். சோவின் பணிவு தனக்கு மிகவும் வியப்பைத் தந்ததாகவும் அண்ணா குறிப்பிட்டார்.

அந்தப் புத்தகத்தை அவர்கள் உருவாக்கிய விதமும் கொஞ்சம் வியப்பான செய்திதான். தெய்வத்தின் குரலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை அச்சிடுவது என்றால், முதலில் அவற்றை கம்ப்யூட்டரில் டைப் பண்ண வேண்டும். டைப் பண்ணினால் ப்ரூஃப் படிக்க வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் சோவுக்கும் எஸ்ஜிக்கும் ப்ரூஃப் படிப்பதில் உடன்பாடு இல்லையாம். தெய்வத்தின் குரலில் உள்ள மாதிரி அப்படியே வர வேண்டும் என்பதற்காக அந்தப் பகுதிகளைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து ஒரு காகிதத்தில் ஒட்டி ஃபிலிம் எடுத்து அச்சிட்டார்கள். இவ்வாறு பண்ணும்போது அச்சுத் தரம் பாதிப்படையும். இருந்தாலும் பரவாயில்லை, நாம் ப்ரூஃப் படித்தால் பிழைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அவ்விருவரும் முடிவு செய்தார்கள்.

பெரியவா கருத்துகளை வெளியிடுகிறோம், அதில் பிழைகள் வந்து விடவே கூடாது என்ற பயபக்தியின் காரணமாகவே அவர்கள் இத்தகைய முடிவை எடுத்தார்கள். அண்ணா என்னிடம் இதைச் சொன்னபோது அண்ணாவின் உழைப்புதான் எனக்கு நினைவு வந்தது. தெய்வத்தின் குரலில் இருந்து ஒருசில பகுதிகளை மட்டும் வெளியிடுவதற்கே சோவைப் போன்ற ஒரு பெரிய பத்திரிகை ஆசிரியருக்கு இவ்வளவு அச்சம் வருகிறது என்றால், அதுதான் தெய்வத்தின் குரலின் தரம்.

தெய்வத்தின் குரலுக்கான அத்தனை விஷயங்களையும் திரட்டி, கையால் எழுதி, ப்ரூஃப் படித்து… அப்பப்பா, அண்ணா தனி ஆளாகத்தானே இத்தனை வேலைகளையும் பண்ணினார்? அண்ணாவின் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து மோகனராமன் தனது அழகான கையெழுத்தில் இன்னொரு பிரதி எழுதித் தருவார். (அதையும் அண்ணா ஒருமுறை ப்ரூஃப் படித்த பின்னர்தான் பதிப்பகத்துக்கு அனுப்புவார்.) வேறு சில விதங்களில் உதவியவர்களும் உண்டு. ஆனால், அவையெல்லாம் மிகவும் குறைவானவையே. தெய்வத்தின் குரல் நூல் உருவாக்கம் முழுக்க முழுக்க அண்ணாவின் உழைப்பு மட்டுமே. ஏழாவது பகுதி மட்டும் நான் ப்ரூஃப் படித்தேன். அந்தப் பகுதிக்கான வேலைகள் நடந்த போது, ‘‘நான் ப்ரூஃப் படிக்கல, நீயே எல்லா வேலையும் பாத்துடு’’ என்று என்னிடம் அண்ணா சொன்னாலும், இறுதியில், அவருமே தான் ப்ரூஃப் படித்தார். இவற்றைத் தவிர வேறு யாரும் அந்தப் பணிகளில் அண்ணாவுக்கு எந்த வகையிலும் ஒத்தாசை செய்தது இல்லை

கோபம், சாபம் என்றெல்லாம் அண்ணாவைப் பற்றி இதற்கு முன்னர் சொல்லி இருந்தேன். (அவையெல்லாம் சத்தியமான சத்தியம் தான்.) ஆனாலும், சில சமயம் அண்ணாவைப் பார்க்கும் போது பாவமாக இருந்தது என்பதும் உண்மை.

பாவம், பரிதாபம் எல்லாம் என் மனதில் எழுந்த உணர்ச்சிகளே தவிர, அண்ணா பரிதாபத்துக்கு உரியவராக ஒருபோதும் இருந்தது கிடையாது. அங்கே கம்பீரம் மட்டுமே இருந்தது – ராஜ கம்பீரம் அல்ல, துறவின் காம்பீர்யம் அது!

அண்ணா என் உடைமைப் பொருள் (20): கொஞ்சம் சினிமா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply