குரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

gurupurnima - 7
gurupurnima - 2

குரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்!
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

வ்யாசாய விஷ்ணு ரூபாய வ்யாச ரூபாய விஷ்ணவே
நமோவை ப்ரஹ்ம நிதயே வாசிஷ்டாய நமோநம:
அகண்ட மண்டலாகாரம் வ்யாப்தம் ஏன சராசரம்
தத் பதம் தர்ஷிதம் ஏன தஸ்மை ஶ்ரீகுரவே நம:

ஆஷாட மாத பௌர்ணமியை குரு பூர்ணிமா என்கிறோம். இந்த சந்தர்ப்பத்தில் குரு பூஜை செய்வது சம்பிரதாயம். இப்படிப்பட்ட பவித்திரமான பண்டிகை தினத்தில் சனாதன தர்மத்தை சேர்ந்த குருபரம்பரைக்கு வணக்கம் தெரிவிக்கிறோம். குரு வைபவம் பற்றி இன்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

குரு என்றால் ஒரு தனி மனிதர் அல்ல. ஞானத்தின் சொருபம். நமக்கு ஞானம் கிடைப்பதற்கு குரு ஒரு ஊடகமாக விளங்குகிறார். ஞானத்தை அளிக்கும் காரணத்தால் குருவை நாம் வழிபடுகிறோம். அதாவது எதை வழிபடுகிறோம்? ஞானத்தை! ஞானத்தை போதித்தவரை வழிபடுவது என்பது ஞானத்தை வழிபடுவதே!

ஞானம் கடவுள் சொரூபம்!

மனிதப்பிறவி எடுத்த பின் லௌகீகமாக எவ்விதம் சுகப்படுவது? இந்த உடலோடு எவ்வாறு உயிர் வாழ்வது என்பதை மட்டுமல்ல… எந்த உடலோடு இருக்கும் போதே பரமார்த்தத்தை எவ்வாறு சாதித்து அடைவது? இந்த உடலை ஆன்மீக சாதனைக்கு எவ்வாறு பயன்படுத்துவது? போன்றவற்றை அறிய வேண்டும். அதற்கான வழியை எடுத்துரைத்து நம்மை சாதனையில் ஈடுபடுத்தி ஒழுங்குபடுத்துபவர் குரு.

குரு, உபாத்தியாயர், ஆச்சாரியர், அத்யாபகர், தேசிகர் என்பதாக குரு என்ற சொல்லை பல பெயர்களில் சம்ஸ்கிருத மொழி அழைக்கிறது. இது மிக வியப்பானது. அதாவது எந்த சந்தர்ப்பத்தில் எந்த பெயரை பயன்படுத்த வேண்டும் என்று விதி உள்ளது.

குரு என்றால் கௌரவிக்கப்பட வேண்டியவர். கௌரவம் என்ற சொல் குரு என்ற சொல்லிலிருந்து வந்தது. குரு என்ற எண்ணத்தோடு வணங்குபவரை நாம் எப்படிப் பார்க்க வேண்டுமோ அந்த வழிமுறையை கௌரவம் என்கிறோம்.

அப்படி பார்க்கப்பட வேண்டியவர் யார்? தாய் தந்தை ஆச்சாரியர்… இந்த மூவரூம் முதன்மையானவர். இதனையே மாத்ருதேவோ பவ! பித்ரு தேவோ பவ! ஆச்சார்ய தேவோ பவ! என்கிறோம்.

இந்த மூவருக்குமே குரு என்ற பட்டம் பொருந்தும். குருவை வழிபடு என்றால் தாய் தந்தை ஆச்சாரியர்.. மூவரையும் வழிபடு என்று பொருள். ஏனென்றால் தாயும் தந்தையும் முதல் குருமார்கள். உண்மையில் வாழ்க்கையின் முதல் அடி எடுத்து வைப்பதற்கு முதல் சொல் உச்சரிப்பதற்கும் கற்றுத் தருபவர் தாய் தந்தையரே! அவர்களை முதல் குருமார்களாக வணங்க வேண்டும். அதற்கு அடுத்த ஸ்தானம் ஆச்சாரியர். இவருடைய ஸ்தானம் இன்னும் உயர்ந்தது. ஏனென்றால் பெற்றோர் நமக்கு இந்த மனிதப் பிறவியை அளித்தனர். குரு என்பவர் ஞானம் மூலம் தீட்சைப் பிறவியை அளிக்கிறார். தீட்டைப் பிறவி எப்படிப்பட்டதென்றால் மீண்டும் பிறவி எடுக்காமல் செய்வது. அதனால் குருவின் சிறப்பு இன்னும் உயர்ந்தது.

எனவே ஒரு மனிதனின் வாழ்வில் தாயும் தந்தையும் எத்தனை உயர்ந்த இடத்தில் உள்ளனரோ, குருவுக்கும் அத்தகைய உயர்ந்த இடம் உள்ளது. குருவிடம் தாய் தந்தை இருவரிடமும் இருக்கும் வாத்சல்ய குணம் காணப்படும்… ஒழுங்குபடுத்தும் கடினமான குணமும் இருக்கும்… இவற்றோடு கூட ஆச்சாரிய லட்சணமும் இருக்கும். குருவிடம் இந்த மூன்று குணங்களையும் காணமுடியும். இதுவே ஆச்சாரியர் என்ற சொல்லின் பொருளாகவும் உள்ளது.

guru purnima - 3

உபாத்தியாயர் என்பவர் கல்வி பயில்விப்பவர். மந்திரோபதேசம், தர்மோபதேசம், ஞானோபதேசம் இந்த மூன்றையும் அளிப்பவருக்கு குரு ஸ்தானத்தில் சிறப்பான இடம் கூறப்படுகிறது. ஏனென்றால் மந்திரம், தர்மம் ,ஞானம் இம்மூன்றும் நம்மில் தெய்வீகத்தை விழிப்படைய செய்பவை.

நம்மில் நமக்கு கூடத் தெரியாமல் இறைசக்தி, இறை சைதன்யம் உள்ளது. அதனையே ஆத்மா என்கிறோம். அதனை அறியும்படி செய்து புத்தியை அந்த திசை நோக்கி தூண்டச் செய்யும் கல்வியை அத்யாத்ம வித்தை என்கிறோம்.

எனவேதான் லௌகீக வித்யை அளிப்பவரையும் குரு என்று கூறலாமே தவிர ஆத்யாத்ம வித்யை அளிப்பவரை சாட்சாத் பகவானுக்குச் சமமான குருவாக பார்க்கவேண்டும். அப்படிப்பட்ட குருமார்களை வழிபடும் நாள் குரு பூர்ணிமை தினம்.

சிறப்பாக இந்த பௌர்ணமிக்கு வியாச பூர்ணிமா என்று பெயர். வியாசர் என்றால் குருவின் மறுபெயர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

வியாசர் என்ற உடன் நமக்கு வியாச மகரிஷி நினைவுக்கு வருவார். ஆனால் அது அவருக்கான விருதுப் பெயர். அவருடைய உண்மையான பெயர் கிருஷ்ணர். தீவில் பிறந்ததால் கிருஷ்ண த்வைபாயனர். வேதங்களை வியாசம் செய்ததால் வியாசர் என பெயர் பெற்றார். வியாசம் செய்வது என்றால் விரிவாகக் கூறுவது என்று பொருள். ஞானத்தை கிரமப்படுத்தி ஒரு கட்டுப்பாடான வழிமுறையை ஏற்படுத்தி போதித்தார். இதனையே ‘அந்த வழிமுறையை வியாசம் செய்வது’ என்கிறோம். இதனைச் செய்தவர் வியாசர். அப்படிப்பட்ட வியாச பகவானை இன்றைய தினம் வழிபட வேண்டும். இதை நாம் நன்கறிய வேண்டும்.

குரு பூர்ணிமா என்ற உடன் சம்பிரதாயம் இல்லாதவர்களிடம் போகாமல், குரு பூர்ணிமா அன்று செய்ய வேண்டியது என்னவென்றால்… சம்பிரதாயத்தின்படி வியாசரை பூஜிக்க வேண்டும். ஏனென்றால் வியாசர் என்பவர் இல்லாதிருந்தால் சனாதன தர்மமே இல்லை. நம் தர்மத்திற்கு ஒரு ஆரம்பித்தவர் என்றோ ஒரு போதகர் என்றோ யாரும் இல்லை. ஆனாலும் யாராவது ஒரு போதகரைக் கூற வேண்டும் என்றால் வியாச பகவானையே கூற வேண்டும். ஏனென்றால் வேதம் எல்லையற்றது.

அனந்த்தமான வேத சாகைகள் இருந்தன.!

துவாபர யுகம் முடியும் போது…

வரப்போகும் கலியுகத்தில் மானுடர்கள் அற்பாயுள், அற்ப புத்தி கொண்டவர்களாக இருப்பர். அற்ப புத்தியை உயர்ந்த புத்தி என்று எண்ணிக்கொள்ளும் அற்பர்களாக நிறைந்திருப்பவர். இது மிக வருத்தம் தரும் விஷயம். ஞானம் இல்லாமல் இருப்பது ஒருபுறம். அஞ்ஞானத்தை ஞானம் என்று எண்ணுவது மறுபுறம். இந்த லட்சணங்கள் கலியுகத்தில் காணப்படும். இப்படிப்பட்ட கலியுகத்தில் வாழும் அற்ப ஜீவர்கள் தவச்சக்தி க்ஷீணித்தவர்களாக இருப்பார்கள் என்பதால் இவர்களுக்காக வேதத்தை சரியானபடி வியவஸ்தை செய்து… ஒரு அமைப்பு செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த மகானுபாவர் வேதத்தை ருக் யஜுர் சாம அதர்வண வேதம் என்ற நான்கு பாகங்களாக பிரித்து விஸ்தரிக்கச் செய்தார். அதனால் அவருக்கு வேத வியாசர் என்று பெயர் ஏற்பட்டது. துவாபர யுக முடிவில் கலியுகத்திற்காக அந்த உத்தமர் செய்தால் சிறப்பான பணி இது.

அதற்கடுத்து அவர் செய்த பெரும் செயல் மகா புராணங்கள் பதினெட்டு, உபபுராணங்கள் பதினெட்டு எழுதியது. அதன் மூலம் வேதங்களில் கூறப்பட்டவற்றை சாமானியருக்கும் கிடைக்கும்படி செய்தார் அதற்காகவே புராண இலக்கியம் தோன்றியது. புராண இலக்கியம் இல்லாவிட்டால் சனாதன தர்மம் இத்தனை வலிமையோடு இருந்திருக்காது.

athi sankarar
athi sankarar

ஏனென்றால் வேதத்தில் கூறியிருப்பவை கடினமான விஷயம். சாமானிய அறிவுக்கு எட்டாதது. அப்படிப்பட்ட வேதத்தில் கூறியுள்ள தர்மத்தை சாமானியனும் கடைபிடித்து பயிற்சி செய்யும் விதத்தில் அழகான போதனைகளாகவும் கதைகளாகவும் வரைமுறைப்படுத்திய இலக்கியமே புராணங்கள்.

அதோடு நிற்காமல் வியாசர் மகாபாரத இதிகாசத்தை எழுதினார். இதிகாசம் என்றால் வேத தர்மம், புராண அம்சம், தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டவை… தர்மசாஸ்திரங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இப்போது நமக்குக் கிடைப்பவையே பராசர ஸ்மிருதி, ஆபஸ்தம்ப ஸ்மிருதி போன்று மிக அதிகம் உள்ளன… இவை அனைத்திலிருந்தும் மற்றும் வேதத்திற்கு அங்கமான சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் போன்ற சாஸ்திரங்களனைத்தின் சாரத்தையும் எடுத்து மகாபாரதத்தை படைத்தார். மகாபாரதம் தர்மங்களின் குவியல். அது உபாசனை மற்றும் உபதேசங்களின் பொக்கிஷம்.

அத்தகைய தெய்வீக நூலை தனி ஒரு மனிதராக எழுதினார். எத்தகைய ஆற்றல்… எத்தகைய கடின உழைப்பு… எத்தகைய முயற்சி… பாருங்கள்! புராணங்களின் ஸ்லோக எண்ணிக்கையைக் கணக்கிட்டால் 4 லட்சத்திற்கு மேல் உள்ளது. இனி, மகாபாரதம் எத்தனை விஸ்தாரமான நூல் என்று பார்த்தால்… லட்சம் சுலோகங்களோடு கூடிய பெரும் படைப்பு. இவை அனைத்தையும் எழுதிவிட்டு பாகவதத்தையும் எழுதி அளித்தார். பிரம்ம சூத்திரங்கள் கூட வியாசர் படைத்தவையே என்று சில சம்பிரதாயத்தினர் கூறுவர். இத்தனை இலக்கியங்களை வியாசர் தனி ஒரு மனிதராக படைத்துள்ளார். நமக்கு எது தேவையென்றாலும் இவற்றிலேயே கிடைக்கும்.

வேதங்களை வியாசர் எழுதவில்லை. இதை அறிய வேண்டும். வேதம் அனேக ஆயிரம் மகரிஷிகள் தரிசித்த சத்தியங்களின் குவியல். அதனால்தான் வேதத்தில் ஒவ்வொரு மந்திரத்திற்கும் த்ரஷ்டா என்று அந்தந்த ரிஷியின் பெயர் கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டால் பல பல ரிஷிகளின் பெயர்களை அதில் காண முடியும். அந்த ரிஷிகளின் பெயர்கள் எல்லாம் புராணங்களில் கிடைக்கின்றன. மகாபாரதத்திலும் தென்படுகின்றன.

ரிஷிகள் வேதம் மூலமாக எத்தகைய சத்தியத்தை தரிசித்து அளித்தனரோ, அவற்றையே புராண, இதிகாசங்களில் வியாசர் அளித்துள்ளார்.

சனாதன தர்மத்தை வியாசர் உருவாக்கவில்லை. மகரிஷிகள் தரிசித்த சாஸ்வத சத்தியங்களின் வடிவமான சனாதன தர்மத்தை நெறிப்படுத்தி வியாசர் நமக்கு அருளியுள்ளார்.

அதனால்தான் யார் எந்த காவியம் படித்தாலும், எந்த தர்மம் போதித்தாலும் அதற்கான ஆதாரம் கட்டாயம் வியாசரின் படைப்பில் இருக்கும். அந்தக் காரணத்தால்தான், “வ்யோசிஷ்டம் ஜகத் சர்வம்” என்ற புகழ்பெற்ற கூற்று உள்ளது. சிருஷ்டியில் அனைத்தும் வியாசரின் எச்சில் என்பது இதன்பொருள். அவர் கூறியிருப்பதைத் தான் யாராயிருந்தாலும் கூறுவர்.

இதுகுறித்து மகாபாரதத்தில் வியாசரே தெரிவிக்கிறார்.

guru sishyas - 4

“இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்று அடித்துக் கூறுகிறார் வியாசர்.

இவ்விதமாக வியாசதேவர் ஒரு சிறந்த அமைப்பை சமைத்துக் கொடுத்தார். வியாச அவதாரம் இப்போதும் உள்ளது. திவ்ய பூமிகளில், சூட்சும பூமிகளில், பாரத தேசத்தின் சித்த பூமிகளில் இன்றும் உள்ளார். அவரை நினைத்தாலே நாம் உய்வடைவோம்.

இன்று முக்கியமாக செய்ய வேண்டியது வியாசபூஜை. இதனை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். வியாசரை அஷ்டோத்தர சத நாமங்களால் வழிபட்டு சோடச உபசார பூஜை செய்ய வேண்டும். வியாச தூதிகள் நிறைய உள்ளன. வ்யாசாய விஷ்ணு ரூபாய… போன்ற சுலோகங்கள் உள்ளன. அவற்றைப் படிக்க வேண்டும்.

இத்தனை நூல்கள் மூலம் கூறிய ஞானம் நமக்கு போதித்த வியாசரையே நாம் குரு என்று கூறவேண்டும். வியாச பூர்ணிமாவை குரு பூர்ணிமை என்று ஏன் சொல்கிறோம் என்றால்.. நம் குருமார்களை நாம் வழிபட்ட போதும் வியாசர் கூறியவற்றை நமக்கு எடுத்துரைப்பவராகவே குருவைக் கருதுகிறோம்.

நம்முடைய சனாதன தர்மத்திற்கு எதிராக கூறுபவரை குரு என்று கூறக் கூடாது. அப்படிப்பட்டவரை இன்றைய பிரத்யேக தினத்தில் பூஜிக்க வேண்டிய அவசியம் இல்லை. வியாசர் எடுத்துரைத்த தர்மங்கள் மீது நம்பிக்கை இருப்பதால்தான் இன்று குரு பௌர்ணமி கடைபிடிக்கிறோம். சனாதன தர்மத்தில் கூறப்படும் நம் பண்டிகைகள்… சாதுர்மாஸ்யம்… இவையனைத்தையும் கூறியவர் வியாசரே!

guru 1 - 5

வியாசர் பிரதானமாக மூன்று விதமான போதனைகளை அளித்துள்ளார். முதலாவது தர்மம். தர்மம் எப்போதும் செயல் வடிவில் இருக்கும். ஒவ்வொருவரும் தம் பிறவியை அனுசரித்துச் செய்யவேண்டிய செயல் தர்மம் எனப்படுகிறது.

இரண்டாவது உபாசனை, பக்தி. பகவானை எந்தெந்த வடிவங்களில் எவ்விதமாக வழிபட வேண்டும்? எந்தெந்த இறை வடிவத்தின் தத்துவம் எவ்விதமாக இருக்கும்? பகவான் ஒருவனே என்றாலும் கூட பதர்களை அருளுவதர்காக அவரவர் வாழ்வியல் குணங்களுக்கு ஏற்ப உபாசனை செய்வதற்காக அனேக அவடிவங்களாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டான். ஒரே பகவான் சிவனாக, விஷ்ணுவாக, ராமனாக, கிருஷ்ணனாக, அம்மனாக, கணபதியாக, சுப்பிரமணியராக, சூரியனாக பல்வேறு வடிவங்களோடு வேத காலத்திலிருந்தே வழிபடப் படுகிறான்.

இவ்விதம் கூறப்படுகிற தெய்வங்களை எவ்விதம் வழிபட வேண்டும்? அந்தந்த தெய்வங்களுக்கான பிரத்யேக நட்சத்திரம், திதி என்ன? பூஜை விதானம் என்ன? மந்திரம், தந்திரம் என்னென்ன? இவையனைத்தையும் வேதங்களிலிருந்து வியாச பகவான் புராணங்கள் மூலம் நமக்களித்துளார். அதனால் தர்மத்திற்கு அடுத்த அம்சமான உபாசனையில் யாருக்கு எந்த தெய்வத்தின் மீது பிரீதி உள்ளதோ அந்த தெய்வத்தை வழிபட முடியும்.

அவ்வாறு வழிபட நினைக்கும்போது அதற்கான வழிமுறைகள் நியமங்கள் ஆகியவற்றை வியாசர் அழகுற அமைத்து கொடுத்துள்ளார். சிவ ஆராதனை செய்பவர்களுக்காக சிவனை முதன்மைக் கடவுளாக கொண்ட புராணங்கள், அதேபோல் விஷ்ணுவை முதன்மையாகக் கொண்ட விஷ்ணு புராணங்கள், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஹயக்கிரீவர் முதலான ஒரே விஷ்ணு தத்துவத்தின் பற்பல வடிவங்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அளித்து உள்ளார். அவதாரங்கள் எவ்வாறு ஏற்பட்டன? அவற்றின் வரலாறு என்ன? அவதாரங்களை எவ்வாறு உபாசனை செய்ய வேண்டும்? இவை அனைத்தையும் நமக்களித்தவர் வியாச பகவான். லட்சுமி சரஸ்வதி துர்கா லலிதா காளி போன்ற வடிவங்கள் அவை ஆவிர்பவித்த நேரங்கள் அந்த வடிவங்களில் இருந்துகொண்டு அம்பாள் செய்த லீலைகள்… இவை அனைத்தையும் வர்ணித்துள்ளார் வியாசர்.

அதேபோல் கணபதி பற்றி பல புராணங்களில் வர்ணித்துள்ளார். கணபதியை பரமாத்மாவாக நிரூபித்து காணபத்திய வழிபாடுகளைத் தெரியச் செய்தார். சுப்பிரமணிய வைபவங்களை ஸ்காந்த புராணத்தில் கூறியதோடு இதர புராணங்களில் கூட கந்தன் உபாசனையின் சிறப்புகளை விளக்கினார். சூரிய உபாசனை குறித்து புராணங்களில் எழுதியதோடு ஆதித்திய புராணம் போன்ற உப புராணங்களிலும் சூரியனை வர்ணிக்கிறார்.

இவ்வாறு சனாதன தர்மத்தில் உள்ள ஷண் மதங்களான சூரியன் சுப்பிரமணியன் கணபதி சிவன் சக்தி விஷ்ணு என்ற வேத சம்பந்தமான இந்த ஆறு வித கடவுளர்களின் உபாசனை வழிமுறைகளை போதித்தார். இவ்விதம் தர்மத்திற்கு அடுத்ததாக உபாசனை வழிமுறைகளை முறைப்படுத்தினார்.

மூன்றாவது வேதாந்த விசாரணை. இது மிகப் பிரதானமானது. இதுவே மிக முக்கியமானது. வியாச பகவான் ஒவ்வொரு நூலிலும் தர்மத்தை போதித்து, பக்தி எனபப்டும் உபாசனையை விளக்கி, மூன்றாவதான ஞானத்தையும் விளக்குகிறார்.

வேதாந்தத்திலும் உபநிஷத்திலும் கூறப்படுவவற்றின் சரமனைத்தியும் ஞானம் என்கிறோம். இது ஆத்மா விசாரணை எனப்படும் புத்தி ஆராய்ச்சி மூலம் அறியப்பட வேண்டியது. ஞானத்தை முழுமையாக ஒவ்வொரு புராணத்திலும் அளிக்கிறார்.

சனாதன தர்மம் என்றால் என் மூன்றும் சேர்ந்ததே. தர்மம், உபாசனை, ஞானம் இம்மூன்றையும் போதித்தவர் வியாச பகவான்.

வியாசர் கூறிய சொற்களை பயிற்சி செய்து அனுஷ்டானம் செய்து கடைபிடித்து அதன் பின்னர் பிறருக்கு போதனை செய்பவரே ஆச்சாரியர். ஒவ்வொரு ஆச்சாரியாரின் கடமை என்னவென்றால் வியாச பகவானிடம் பக்தியோடு வியாசர் படைத்தளித்த நூல்களைத் தான் படித்தறிந்து அனுபவத்தில் பெற்று பின்னர் சீடர்களுக்கு போதிக்க வேண்டும். அப்படிப்பட்ட சனாதனமான வியாச சம்பிரதாயத்தை போதிப்பவரை வியாசருக்குச் சமமாக வழிபடுகிறோம்.

வியாசர் எழுதிய நூல்களை வழிபடுவது, வியாச தர்மத்தை போதிக்கும் குருவை வழிபடுவது இவ்விரண்டும் இன்றைக்கு நாம் செய்ய வேண்டிய கடமை.

தர்மத்தோடு நடப்பவராக, இறைவழிபாட்டிற்கான உபதேசம் பெற்று வழி முறையை கடைபிடிப்பவராக, வேதாந்த ஞானத்தை அறிந்து பிறருக்கு போதிக்க கூடியவராக இருக்கும் குருமார்களை இன்றைய தினம் வழிபடுகிறோம். சாதாரணமாக மூன்றும் சேர்ந்த குருநாதர் கிடைப்பது அரிது. சிலர் தர்மத்தை மட்டும் போதனை செய்வர். சிலர் மந்திரோபதேசம் செய்வர்.

அவர்களுக்கு தர்ம சாஸ்திரம் தெரியாது. சிலர் இரண்டும் இன்றி வேதாந்த கல்வியை மட்டும் போதிப்பர். அவ்வாறின்றி மானுடனுக்கு மூன்றுமே தேவை. தர்மத்தோடு கூடிய வாழ்க்கை முறை இல்லாவிட்டால் மனத்தூய்மை இருக்காது. அவருக்கு உபாசனை பலனளிக்காது.

உள்ளத்தூய்மை வேண்டுமென்றாலும் இகமும் பரமும் பயனுற வேண்டும் என்றாலும் முதலில் தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயல்களை கடைபிடிக்க வேண்டும். எது ஏற்கத்தக்கது? எது விலக்க வேண்டியது? என்பதை சாஸ்திரத்தின் உதவியோடு சாஸ்திரப் பிரமாணத்தோடு கூறக் கூடியவராக இருக்க வேண்டும்.

அதன்பின், நம் தர்மத்தை நாம் செய்து கொண்டிருந்தாலும் அதனை சரிவர செய்து நற்பலன் அளிப்பதற்கும், பரமாத்மாவின் அருளைப் பெறுவதற்கும் பகவானின் ஆதரவு வேண்டும். அங்குதான் உபாசனை என்பது பிரவேசிக்கிறது. ஈஸ்வரோபாசனை மிகவும் அவசியம்.

கடவுளை உபாசனை செய்யும் விதானம், அந்தந்த ஜீவனின் இயல்பையும் விருப்பத்தையும் அனுசரித்து அவரவர் சம்ஸ்காரத்தைப் பொறுத்து அவர் எந்த தெய்வத்தின் உபாசனையை எவ்விதம் செய்ய வேண்டும் என்பதை குரு உபதேசிப்பார். இங்கு உபாசனை என்னும் அம்சம் நுழைகிறது.

இவ்விரண்டிற்கும் பிறகு செய்ய வேண்டியது ஆத்ம விசாரணை. ஆத்ம தத்துவம் என்ன? உண்மையில் பிரம்மம் என்றால் என்ன? இவ்விஷயம் குறித்து ஆராய வேண்டும். இம்மூன்றும் ஒன்றன்பின் ஒன்று என்று இல்லாமல் ஒன்றோடு ஒன்று இணைத்தும் செய்யலாம். ஞானத்தின் மீது பார்வையை வைத்து, தர்மத்தை கடைப்பிடித்தபடி, உபாசனை செய்து வந்தால் கிராமமாக ஞானத்தை அடைந்த மோட்ச நிலையைப் பெறுவோம். இது வழிமுறை.

ஆனால் இம்மூன்றையும் போதிப்பவர் சாட்சாத் விஷ்ணுவுக்கு சமமானவர் என்று தத்தாத்ரேய மஹாத்மியம் பிரம்மாண்ட புராணத்தில் தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சாரியரின் அவதாரமாக நாம் வியாசரை வணங்குகிறோம். வியாசர் ஒரு மேதை மட்டுமல்ல. விஷ்ணுவின் அம்ச சொரூபம் என்று புராணங்கள் கூறுகின்றன.

அபாந்தரதமர் என்பவர் ஒரு மகரிஷி. பிரம்மதேவர் தன்னிடம் பகவான் மூலம் அருளப்பட்ட வேதத்தை பூலோகத்தில் அந்தந்த காலத்திற்கேற்ப அளிப்பதற்காக நாராயணனை பிரார்த்தனை செய்தார். நாராயணன் தன் அம்சத்தோடு கூடிய அபாந்ததமரை பிரம்ம லோகத்தில் தோற்றுவித்தார் என்று மகாபாரதத்தில் ஒரு விவரம் உள்ளது.

அபாந்தரதமர் ஒவ்வொரு மன்வந்திரத்தில் ஒவ்வொரு வியாசராக அவதரித்துக் கொண்டிருப்பார் என்று புராணங்கள் மூலம் தெரிகிறது. எத்தனை பேர் வியாசராக வந்துள்ளனர்? இன்னும் எத்தனை பேர் வரப்போகிறார்கள்? என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

ethiraja gurupuja
ethiraja gurupuja

வியாசர் என்பது ஒரு மனிதரின் பெயர் அல்ல. அது ஒரு பதவியின் பெயர். இப்போதைய மன்வந்திரத்தில் கிருஷ்ண துவைபாயனர் வியாசராக உள்ளார். அடுத்த மன்வந்திரம் வரும்போது வேறொருவர் வியாசராக அவருவார். அகஸ்தியர் கூட வியாசராவார் என்று கூறப்படுகிறது. அபாந்தரதமருடைய தேஜஸ் அந்தந்த ரிஷிகளிடம் பிரவேசித்து அதன் மூலம் வேதங்களை பரப்புவார். அதனால் நாம் வழிபடுவது உண்மையில் அபாந்தரதமரே! ‘அந்தர தமஸ்’ என்றால் உள்ளிருக்கும் இருட்டு. அதாவது அக்ஞானம்.

உள்ளே இருக்கும் அஞ்ஞானம் என்ற இருட்டை விரட்டி ஞானம் என்ற பிரகாசத்தை ஒளியைவிட செய்பவரே குரு. அப்படிப்பட்ட வியாசரை நினைத்து தியானிக்க வேண்டும். அவர் வரலாற்றை நாம் இன்று தியானிக்கவேண்டும்.

பராசர மகரிஷியின் புதல்வர் வியாசர். பராசர மகரிஷியின் குரு சக்தி மகரிஷி. பராசரரின் தந்தை சக்தி மகரிஷி. எவ்வாறு வியாசருக்கு பராசரர் குருவும் தந்தையும் ஆனாரோ அதே போல் பராசரருக்கு சக்தி மகரிஷி தந்தையும் குருவும் ஆவார். சக்தியின் தந்தையும் குருவும் வசிஸ்டர். வசிஷ்டரின் தந்தையும் குருவும் பிரம்மதேவர். பிரம்மதேவரைத் தோற்றுவித்தவர் நாராயணன். நாராயணன் என்றாலும் சிவன் என்றாலும் ஒரே தெய்வம். ஆதலால் சதாசிவ சபாரம்பாம் என்றும் நாராயண சபாரம்பாம் என்றும் கூறுகிறோம்.

வியாசர் கூட சுதந்திரமாக ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கவில்லை. சானாதனமாக, பரம்பரையாக இருக்கும் சித்தாந்தத்தை, இருக்கும் ஒரே சத்தியத்தை… அவர் எடுத்துரைத்தார். யார் உண்மையான ஆச்சாரியார் என்றால் எது சாதனமாக, பரம்பரையாக இருக்கும் சாதியமோ… அதை அளிப்பவர் சிறந்த ஆச்சாரியாரே தவிர புதிய நூல், புதிய மனிதர், புதிய போதனை போன்றவற்றின் பின்னால் சென்றால் அது நம்மை உய்வடையச் செய்யாது என்பதை அறிய வேண்டும்.

வியாசருக்கும் நமஸ்காரம் செய்கிறோம் என்றால்… குருபரம்பரை வியாசரிடம் இருந்து தொடங்கவில்லை. பரமாத்மாவிடம் இருந்து பிரம்ம தேவருக்கும் பிரம்ம தேவரிடம் இருந்து வசிஷ்டருக்கும் தொடர்ந்தது. வசிஷ்டர் ரிஷிகள் அனைவருக்கும் பிரதிநிதியாக இருப்பவர். வசிஷ்டரை வணங்கினால் ரிஷிகள் அனைவரையும் வழங்கினாற்போல. வசிஸ்டரே ஆதி மகரிஷி. ஆதி பிரம்மரிஷி கூட வசிஷ்டரே! அவரிடமிருந்து வேதாந்த விதையைப் பெற்றவர் சக்தி. சக்தியின் சீடர் பராசரர். பராசரரின் சீடர் வியாசர். வியாசரின் புதல்வர் சுக யோகீந்திரர்.

இங்கு வரை சனாதன தர்மத்தின் அனைத்து சம்பிரதாயத்தில் இருப்பவர்களும் இதே முறையை கடைபிடிப்பர். இதன்பிறகு துவைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் குருபரம்பரை மாற்றம் பெறுகிறது. வியாசருக்குப் பிறகு அவரவர் சம்பிரதாயம் மாறுகிறது. சிலர் யமுனாச்சாரியார், சிலர் மத்வாச்சாரியார், சிலர் ஆதிசங்கரர் என்று குரு பரம்பரை மாற்றம் பெறுகிறது. மூன்றும் நமக்கு சம்மதமே!

vyasa 1
vyasa 1

சனாதன தர்மத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் மூன்று பிரிவுகளின் உதவியும் ஒருவருக்கொருவர் தேவையே! அதனால் அனைத்து சம்பிரதாயத்தினரும் வியாசரையே குருவாக வணங்குவர். இன்று வியாசரை ஆராதனை செய்து விட்டு அதன் பிறகு அந்தந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர் அவரவர் குருமார்களை பூஜை செய்வர். சம்பிரதாயமான வித்யையை எடுத்துக்கூறி வழிகாட்டும் குருவிடம் மேற்சொன்ன குருபரம்பரையைக் கண்டு வணங்க வேண்டும்.

நாராயணனிடம் இருந்து தொடங்கி வியாசர் வரையும் பின்னர் அந்தந்த குருபரம்பரை முழுவதையும், தன்னெதிரில் பிரத்தியட்சமாகத் தென்படும் குருவிடம் கண்டு வழிபட வேண்டும். அதற்காகவே குருபூஜை.

உத்தமமான குருவானவர் முதலில் தான் வியாச பூஜை செய்துவிட்டு சீடர்களையும் செய்விப்பது வழக்கம். ஏனென்றால் இன்று இவர் குருவாக அமர்ந்து இருந்தாலும் இவரும் ஒரு குருவின் சீடர் தானே! இது தனிமனித வழிபாடு அல்ல என்பதை அறியவேண்டும். தனிமனித வழிபாடாக மாறி ஒவ்வொருவரும் தானே தெய்வம் என்று கூறினால் அது சனாதன தர்மத்தின் வழி அல்ல!

சனாதன தர்மத்தில் குருவை வழிபடுவது சிறந்த சம்பிரதாயம். ஞானமார்க்கத்தில் கூட குருபூஜை பற்றி உயர்வாக கூறப்படுகிறது. பரமாத்மாவிடம் எத்தனை பக்தி இருக்குமோ அதே பக்தி குருவிடமும் இருக்க வேண்டும். குரு அளிக்கும் மந்திரம், மந்திரத்தின் மூலம் கூறப்படும் தெய்வம், குரு… இம் மூன்றும் ஒரே ரூபம் என்ற உணர்வோடு வழிபடவேண்டும். குரு பக்தி இல்லாவிட்டால் குரு மந்திரம் பலிக்காது. இறையருளும் கிட்டாது. இறுதியில் ஞானம் கூட கிட்டாது.

குரு பக்தி ஆழமாக இருந்தால் சீடனுக்கு ஞானம் பெறும் அறிவுக் கூர்மை இல்லாவிட்டாலும், மந்திரத்தை பலிக்க செய்துகொள்ளும் திறமையோ தியானமோ இல்லாவிட்டாலும் தியானமும் மந்திர சித்தியும் தானே வரும். குருபக்திக்கு அத்தனை மகிமை உள்ளது.

guru paramparai 1 - 6

தோடகாச்சாரியாருக்கு சங்கராச்சாரியாரிடம் அபாரமான பக்தி, கௌரவம். ஆனால் கற்றுத்தந்த பாடம் எதுவும் தலையில் ஏறாது. சிலருக்கு பிறவியிலேயே மந்தம் இருக்கும். பூர்வஜென்ம விதிவசம். மீதி உள்ளவ சீடர்கள் நன்கு படித்தனர் ஆனால் இவர் குரு சிஷ்ரூஷயை விடாமல் சிறப்பாக அன்போடு செய்வார். மற்ற சீடர்களுக்கு இவர் மீது ஏளனம் அதிகமாக இருந்தது. குரு பாடம் கூறும் போது கிரி இன்னும் வரவில்லை என்றார். ஆச்சாரியாருக்கு கிரி என்ற பெயர். அவர் வந்ததும் பாடம் தொடங்கலாம் என்றார். அங்கிருந்த சீடர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். அவனுக்கு பாடம் சொன்னாலும் தலைக்கு ஏறாது என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சுவரும் அவனும் ஒன்று என்றனர்.

குருதேவர் அவற்றை கவனித்தார். அவர்களின் கர்ரவத்தை நீக்க திருவுள்ளம் கொண்டார். அப்போதுதான் துணிகளை உலர்த்த விட்டு திடீரென்று தொடக்கம் என்ற சந்தஸ்ஸில் அற்புதமான விதிதாகில… என்ற ஸ்லோகத்தில் வேதாந்த ரகசியம் அனைத்தையும் பாடினார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர். மற்ற சீடர்கள் சாச்திர பாடத்தில் எதை அப்டிக்கின்றனரோ அவையாவற்றையும் அழகான ஸ்லோகமாக, ஆசுகவியாக பாடிக்கொண்டே வந்து குருநாதரைப் பணிந்து வணங்கினார்.

மற்ற சீடர்களின் கர்வம் ஒழிந்தது. குருபக்தியின் மகிமை தெரிந்தது.

குரு கடாக்ஷம் எத்தனை உயர்ந்தது என்றால் சாஸ்திரங்களை படிக்காவிட்டாலும் அவற்றின் மூலம் எந்த ஞானம் வர வேண்டுமோ அந்த ஞானத்தை சீடரிடம் ஒளிர செய்பவார் குரு. குருபக்தியும் சக்தி அது. ஒரு நூலை நாமே படித்து அறிவதற்கும் குருமுகமாக கேட்டு அறிவதற்கும் நிரம்ப வேறுபாடு உள்ளது. குருமுகமாக கேட்டால் அதன் சாரம் கிடைக்கும். அது சக்தியோடு பணிபுரியும்… சித்தியாக மாறும். குரு என்பவர் ஞானத்திற்கும் நமக்கும் இடையில் பாலமாக இருப்பவர். அவர் மூலம் நமக்கு ஞானம் கிடைக்கிறது. ஞான சொரூபமாக, முழுமையான குரு பரம்பரையின் சொரூபமாக குருவை வணங்கவேண்டும்!

தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!

குரு பூர்ணிமா சிறப்பு கட்டுரை: குரு வைபவம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply