அண்ணா என் உடைமைப் பொருள் (25) : ரமணர், பெரியவா!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna
anna

அண்ணா என் உடைமைப் பொருள் (25)
ரமணர், பெரியவா!
– வேதா டி.ஸ்ரீதரன் –

அண்ணா தன்னைப் பற்றி என்னிடம் ஓரளவு விவரங்கள் சொல்லி இருக்கிறார். ஆனாலும், அவரது நெடிய வாழ்க்கைப் பயணத்தில் அது மிகவும் சொற்பமான அளவு மட்டுமே. அவரது அம்மாவைப் பற்றி ஏதோ ஓரிரண்டு சொல்லி இருக்கிறார், ஆனால், அப்பாவைப் பற்றி என்னிடம் அதிகம் பேசியதே இல்லை.

அண்ணாவின் அப்பா பெயர் ராமச்சந்திர ஐயர்.

அவர் சங்கர பாஷ்யத்துக்கு ஆங்கிலத்தில் உரை எழுதியுள்ளார். பாரதிய வித்யா பவன் வெளியிட்டுள்ள அந்த நூலுக்கு அண்ணா அணிந்துரை எழுதியுள்ளார். அந்த அணிந்துரையின் மூலம் அவரது தந்தையார் பற்றிய சில முக்கியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மகா பெரியவாளுக்கும் ஸ்வாமிக்கும் மிகவும் நெருக்கமாக இருந்த அவருக்கு, ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடரான பிரம்மானந்தரிடம் மந்திரோபதேசம் கிடைத்தது. அவர் ராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் தங்கி ப்ரெசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது பிரம்மானந்தர் சென்னை வந்திருந்தார். மடத்தில் ராமச்சந்திரனின் சிரத்தை மிகுந்த பணிவிடைகளால் அகமகிழ்ந்த பிரம்மானந்தர் மிகுந்த மன எழுச்சியுடன் தானாகவே அவருக்கு மந்திர உபதேசம் செய்திருக்கிறார்.

குடும்பச் சூழல் காரணமாகப் படித்து வேலைக்குப் போனாலும், ராமசநந்திர ஐயரது வாழ்க்கை பெரும்பாலும் ஆன்ம சாதனையிலேயே கழிந்தது. அவர் எப்போது தரிசனத்துக்கு வந்தாலும் பெரியவா அவருக்கென்று பிரத்தியேகமாகச் சிறிது நேரம் ஒதுக்கி அவருடன் உரையாடுவாராம். தேவி உபாசனையில் அவ்வப்போது தனக்கு ஏற்படும் ஐயங்களுக்கான விளக்கத்தை அவர் பெரியவாளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

ஸ்வாமியின் அனுக்கிரகமும் பரிபூரணமாகப் பெற்றவர் ராமசந்திர ஐயர். அவரது இறுதி நிமிடங்களில் மிகவும் எதிர்பாராத விதமாக ஸ்வாமியின் விபூதி அவரை வந்தடைந்தது. விபூதியைத் தரித்துக் கைகூப்பியவாறே அனாயாசமாக அவர் உயிர் நீத்தார்.


தமிழில் எழுதிய அளவு அண்ணா ஆங்கிலத்தில் எழுதவில்லை. அதேநேரம், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். குறிப்பாக, ரமணாசிரமத்துக்காக நிறைய மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார்.


ரமணாசிரமம் என்று சொல்லும் போதே பெரியவா-ரமணர் இருவரையும் சேர்த்துச் சொல்லப்படும் சில கருத்துகளைக் குறிப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது.

விஷயம்: 1

ரமணாசிரமம் வழியாக பெரியவா வரும்போது ரமணர் தனது அறையில் இருந்து வெளியே வந்து தூரத்தில் இருந்து பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்.

விஷயம்: 2

ஆசிரமத்து அன்பர்கள் அனைவரும் மிகுந்த பக்தியுடன் பெரியவாளை தரிசித்தனர். அதன்பின்னர் ரமணரிடம் சென்று நீங்கள் ஏன் பெரியவாளை தரிசிக்கவில்லை எந்று கேட்டனர். அதற்கு ரமணர், நானும் பெரியவாளும் அப்பவே ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி விட்டோமே என்று பதில் கூறினார்.

விஷயம்: 3

ரமணர் தனது கடைசி காலத்தில் பெரியவாளிடம் இந்த வியாதி ஏன் இத்தனை நீண்ட காலமாக என் உடலைப் படுத்திக் கொண்டு இருக்கிறது என்று வினவினார்.

எனக்குத் தெரிந்த வகையில் இவை இவ்வளவு தான். இதேபோல இன்னும் எத்தனை கதைகள் உலா வருகின்றனவோ, எனக்குத் தெரியாது.

இந்த விஷயங்கள் பற்றி அண்ணா என்னிடம் கொஞ்சம் சொல்லி இருக்கிறார். ரொம்பவே விரிவாக எழுதி இருக்கிறார். காமகோடியிலும் அது பிரசுரமாகி உள்ளது. அதைச் சுருக்கமாக இங்கே தருகிறேன்.

anna alias ra ganapathy11 - 2

ரமணர் என்ற ஒரு ஞானி இருப்பதை வெளியுலகம் அறிவதற்கு முக்கிய காரணம் பால் பிரன்டன் என்பதை அனைவரும் அறிவோம். அவரை ரமணரிடம் அனுப்பியவரே பெரியவா தான் என்பதையும் அறிவோம். மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியவா ரமணரைப் பற்றி ரொம்பவும் உயர்வாகப் பேசி இருக்கிறார். இதனால் பெரியவா மீது ரமணர் அன்பர்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

பெரியவா திருவண்ணாமலையில் இரண்டு தடவை (1929, 1944) கிரி பிரக்ஷிணம் செய்திருக்கிறார். இரண்டு தடவையும் பெரியவா ரமணாசிரமம் அருகே வரும் போது சற்றே நிதானித்து சுற்று முற்றும் பார்த்தவாறே அந்தப் பகுதியைக் கடந்திருக்கிறார்.

பெரியவா வந்தபோது ரமணாசிரமத்தில் இருந்த அன்பர்கள் ஆசிரமத்துக்கு வெளியே வந்து அவரை தரிசனம் செய்திருக்கிறார்கள்.

ரமணர் எதையும் தேடிப் போனவர் இல்லை. எனவே, அவர் அறைக்கு வெளியே வந்து பெரியவாளைத் தரிசனம் செய்யவில்லை.

பெரியவா ஶ்ரீமடத்தின் அதிபதி. ரமாணாசிரமம் என்பது ஒரு ஸ்தாபனம். இவ்வாறு ஒரு ஸ்தாபனத்துக்குள் மடத்து அதிபதி நுழைய வேண்டுமானால், அந்த ஸ்தாபனத்தில் இருந்து மடத்துக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவும் வந்திராததால், பெரியவா ரமணாசிரமத்துக்குள் நுழைவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

ramana maharshi 1
ramana maharshi 1

இந்த இரண்டுமே இயல்பான, யதார்த்தமான விஷயங்கள். இவற்றில் முக்கியமாகக் குறிப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனினும், பெரியவா, ரமணர் தொடர்பாகப் பேசப்படும் பல விஷயங்களில் உண்மை எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே அண்ணா இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.


பெரியவாளின் இரண்டாவது கிரிவலத்துக்கு அடுத்து ரமணர் அன்பர்களுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய நிகழ்வு ஒன்று உண்டு. சில அன்பர்கள் மடத்து பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தனர். அவர்கள் ஆசாரமாக இல்லை என்றும் குளித்து விட்டுப் பூஜையில் கலந்து கொள்ளுமாறும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இவ்வாறு உத்தரவிட்டவர் சாக்ஷாத் பெரியவாளே தான்.

ரமணாசிரமத்தில் ரமணரின் தாயார் சமாதி உள்ளதை அனைவரும் அறிவோம். ரமணர் அன்பர்களுக்கு அது கோவில். ஆனால், மடத்து ஆசாரங்களால் அதை அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாது. பூத உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து வந்தவர்கள் குளிக்க வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இது பூஜைக்கு வந்திருந்த ரமணர் அன்பர்களை மட்டுமல்ல, மடத்தைச் சார்ந்த ஒருசிலருக்கும் கூட வேதனையைத் தருவதாக இருந்திருக்கிறது.

ரமணர் அன்பர்கள் ரமணரிடம் இந்த விஷயம் பற்றி வருத்தத்துடன் தெரிவித்த போது, அவர், அங்கே (ஶ்ரீமடம்), இங்கே (ரமணாசிரமம்) – ஆகிய இரண்டு இடங்களுக்கும் உள்ள வேறுபாட்டைச் சுட்டிக் காட்டினாராம். இங்கே சர்வ சுதந்திரம், ஆனால், அங்கே, அனைத்து விதக் கட்டுப்பாடுகளும் ஒருங்கே இருக்கும். சாஸ்திரங்களைச் செயலில் காட்டுவதற்காகவே அந்த இடம் என்று அவர் குறிப்பிட்டாராம்.


இதற்குப் பல வருடங்கள் கழித்து இந்த விஷயம் பற்றிப் பெரியவா அண்ணாவிடம் ஒரு புதுத் தகவல் தெரிவித்துள்ளார். ரமணர் அம்மா சமாதி குறித்துப் பெரியவா சுட்டிக் காட்டி இருந்தது ஒரு சாஸ்திரக் குழப்பம். அதைச் சரி செய்வதற்கு சாந்தி ஹோமங்கள் போன்ற சில பரிகாரங்கள் உண்டு. ஆசிரமத்தில் கும்பாபிஷேகம் நடந்த போது அத்தகைய பரிகாரங்கள் செய்து முடிக்கப்பட்டதாகப் பெரியவா அண்ணாவிடம் தெரிவித்துள்ளார். ஆயினும், அது என்ன பரிகாரம், அதைச் செய்தவர்கள் யார், பெரியவா சொல்லித்தான் அத்தகைய பரிகாரம் மேற்கொள்ளப்பட்டதா முதலிய விவரங்களைப் பற்றிப் பெரியவா எதுவும் சொல்லவில்லை. ஆனால், ‘‘ரமணாசிரமத்தைச் சேர்ந்தவர்ளுக்கே அது தெரியுமோ, தெரியாதோ!’’ என்று பெரியவா அண்ணாவிடம் சொன்னாராம்.


ரமணர் குறித்துப் பெரியவா நிறைய இடங்களில் பேசி இருக்கிறார். அதுபோலவே, பெரியவாளைச் சந்தித்திருக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, ரமணர், ‘‘நாங்கள் இருவரும் இருவேறுபட்ட நிலையில் இருந்தால் தானே ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும்?’’ என்று சொல்லி இருக்கிறார். நான் மேலே குறிப்பிட்ட கட்டுரையில் அண்ணா இதையும் எழுதி இருக்கிறார்.

ரமணர் திருவண்ணாமலை வந்த புதிதில் முதன் முறையாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ததும் பின்னர் தியானத்தில் அமர்ந்ததும் அனைவருக்கும் தெரியும். அதேநேரத்தில் அவரைப் பற்றிப் பலர் அறிந்திராத – ஆனால் அவசியம் அறிந்திருக்க வேண்டிய – உண்மை என்னவென்றால், அதன் பிறகு அவர் தானாக எதையும் தேடிப் போகவில்லை. அன்பர்கள் முதல் ஆசிரமம் வரை அனைத்தும் அவரைத் தேடி வந்தவையே. அவர் எதையும் தேடவும் இல்லை, நாடிப் போகவும் இல்லை.

இதையும் அந்தக் கட்டுரையில் அண்ணா சுட்டிக் காட்டியுள்ளார்.


எனக்கு ஓர் உதவி தேவை :

<

p class=”has-pale-cyan-blue-background-color has-background”>விலங்குகளுடன் ரமணரின் நட்புறவு குறித்து ஒரு விஷயம் மட்டும் அண்ணா என்னிடம் தெரிவித்துள்ளார். ரமணரின் குரங்கு நண்பர்கள் தங்கள் சமுதாயக் கூட்டங்களில் நடக்கும் கொண்டாட்டங்களுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுப்பதுண்டு என்பதே அது.

ரமணரின் மாணவியாகிய லக்ஷ்மி பசுமாடு குறித்து சமீபத்தில் கேள்விப்பட்டேன். இதுபோன்ற ஜீவன்களுடன் ரமணர் பாராட்டிய நட்புறவு குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அன்பர்கள் யாராவது உதவலாமா?

இந்த விவரங்கள் வெளியாகியுள்ள புத்தகப் பக்கங்களைப் பிரதி எடுத்து அனுப்பினாலும் சரி, தங்களுக்குத் தெரிந்த விவரங்களை ஆடியோ ஃபைலாக அனுப்பினாலும் மகிழ்ச்சியே. ( mail id : purnavani@gmail.com )

அண்ணா என் உடைமைப் பொருள் (25) : ரமணர், பெரியவா! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply