திருப்புகழ் கதைகள்: தரிக்கும் கலை – திருச்செந்தூர்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aea4e0aeb0e0aebfe0ae95

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 101
தரிக்கும்கலை – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் எழுதியுள்ள அறுபத்தைந்தாவது திருப்புகழான ‘தரிக்குங்கலை’ எனத் தொடங்கும் திருப்புகழ் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இப்பாடலில் அருணகிரியார் – முருகா! மனிதர்களைப் பாடும் புலவர்கள், உன்னைப் பாட அறியாதது விந்தையிலும் விந்தை எனப் பாடியுள்ளார்.

தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி …… மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி …… னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
மெனப்புன்கவி …… சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட …… அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
மனுக்குந்தெரி …… வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
மரற்கும்புரி …… தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு …… பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
கெடக்கன்றிய …… பெருமாளே.

இப்பாடலின் பொருளாவது – திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமதேவருக்கும், காணமுடியாத திருவடியையும், சிவந்த சடைமுடியையும் உடைய சிவமூர்த்திக்கும், நிறைந்த தவம் புரிந்தவரும், பொதியமலையில் உள்ளவரும், கும்பத்தில் பிறந்தவரும் ஆகிய அகத்தியருக்கு கருணையுடன் உபதேசித்த மேலான குருமூர்த்தியே! சுற்றப் பெருக்குடன் வந்த சூரபன்மன் உறவுடன் மாண்டு அழியுமாறு கோபித்த பெருமிதம் உடையவரே!

அகப்பொருள் துறையில் பாடுகின்ற புலவன் தன்னைப் பெண்ணாகப் பாவித்து பொருள் தருகின்றவனைத் தலைவனாக அமைத்து) உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது; விரக வேதனையால் தவிக்கின்றேன்; கொடிபோன்ற யான் மன்மதனுடைய பாணங்களினால் தடைபடுகின்றேன்; தனியே நின்று திகைக்கின்றேன்; மெல்லிய இனியத் தென்றல் காற்றினுடன் வந்து நின்று சந்திரன் கொளுத்துகின்றான் என்று, மனம் புண்படுகின்றேன் என்றும் கூறி, புன்மையான கவிகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி, சில புலவர்கள் வீணே இருக்கின்றார்கள். திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள முருகா! இவர்கள் உன்னைப்பாடி உய்யுந்தன்மையை அறிந்திலரே! (இது என்ன பாவம் அந்தோ! – என்பதாகும்.

நாயகன் நாயகி பாவம்

இத்திருப்புகழில் அருணகிரியார் நாயகன் நாயகி பாவ முறையில் பாடலை எழுதியுள்ளார். அகப் பொருள் துறையில், புலவன் தன்னைப் பெண்ணாக அமைத்து, தனவந்தனைத் தலைவனாக அமைத்து, “ஏ அழகனே! உன் மீதுள்ள மோகத்தால் எனக்கு ஆடை நெகிழ்கின்றது. நான் விரக வேதனையால் பரதவிக்கின்றேன்” என்று பாடுவான். “மன்மதனுடைய மலர்க் கணைகளால் புண்ணாகி நான் துன்பப்படுகின்றேன்” “உன்னைப் பிரிந்து தன்னந்தனிமையில் இருந்து நான் திகைக்கின்றேன்; என்னை வந்து அணைவாய்” என்றெல்லாம் புலவர்கள் பாடுவார்கள்.

தமிழ்த் தென்றல், தமிழ் வழங்கும் திசை தென் திசை. அத்திசையில் இருந்து வரும் மெல்லியக் காற்று தென்றல், இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும் என்பது நிகண்டு. இனியக் காற்று தென்றல். “தமிழ் மாருதம்” என்று சேக்கிழாரும் கூறுகின்றனர்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும். நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்குக் குளிர்ந்த தென்றல் காற்று நெருப்பை அள்ளி வீசுவதைப் போல் துன்பத்தைத் தரும். பரவையாரைப் பிரிந்து வருந்தும் சுந்தரரைத் தென்றல் வருத்தியது. அப்போது அப்பெருமான் கூறுகின்றார்: “ஏ தென்றல் காற்றே! உயர்ந்த இடத்தில் பிறந்தவர்க்கு நற்குணம் தானேயமையும். நல்லவரைச் சார்ந்தவர்க்கும் அவ்வாறே நல்ல பண்புகள் உண்டாகும். தமிழ் மாருதமே! நீ எம்பிரானுடைய பொதிய மலையில் பிறந்தனை; பரமன் இருந்து அரசாண்டதும், தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் புரிந்ததுமாகிய சிறந்த பாண்டி நாட்டின் வழியே, அருள் நிறைந்த சோழவள நாட்டைச் சார்ந்தும் தவழ்கின்றனை. இவ்வாறிருக்க, நீ பிறரை வருத்தும் இத்தீமைக் குணத்தை எங்கே கற்றுக்கொண்டாய்?”

பிறந்தது எங்கள் பிரான் மலயத்து இடை,
சிறந்து அணைந்தது தெய்வ நீர் நாட்டினில்,
புறம் பணைத் தடம் பொங்கு அழல் வீசிட
மறம் பயின்றது எங்கோ? தமிழ் மாருதம்!
— பெரியபுராணம்

திருப்புகழ் கதைகள்: தரிக்கும் கலை – திருச்செந்தூர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply