அண்ணா என் உடைமைப் பொருள்(32): ரிஷி மந்த்ர த்ருஷ்டா

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 6
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 32
ரிஷி மந்த்ர த்ருஷ்டா
– வேதா டி.ஸ்ரீதரன் –

ஒருமுறை அண்ணாவுக்கு திடீரென ஒரு சந்தேகம் பிறந்தது. உபநிஷதம் ஒன்றில் உள்ள ஒரு பாட பேதத்தைப் பற்றிய சந்தேகம் அது. அந்த உபநிஷத்தில் உள்ள ஒரு வரியை வைஷ்ணவர்கள் ஒரு மாதிரியும், ஸ்மார்த்தர்கள் வேறு மாதிரியும் சொல்கிறார்கள். வேதத்தில் இதுபோன்ற உச்சரிப்பு வேறுபாடு ஏற்பட வாய்ப்பே இல்லை. இவர்கள் இருவரும் சொல்லும் முறையில் எது சரியானது என்பதே அண்ணாவின் சந்தேகம்.

அண்ணா இந்த சந்தேகத்தைப் பெரியவாளிடம் கேட்டார். பெரியவா, கிண்டலாக, ‘‘என் கிட்ட ஏன் கேட்கற? நீ தான் என்னவோ பண்ணுவியே’’ என்று சொல்லி, மூக்கைப் பிடித்துக் கொண்டு தியானம் பண்ணுவது போலச் செய்து காட்டி, ‘‘நீயாவே தெரிஞ்சுக்கோயேன்’’ என்று சொன்னாராம். அண்ணாவுக்கு ஆத்திரமான ஆத்திரம்! இந்தக் கிழவரிடம் நிஜமாகவே சந்தேகம் தானே கேட்டேன், இதற்கும் கேலி கிண்டல் தானா என்ற வருத்தம் மேலிட்டது. மௌனமாகத் திரும்பி விட்டார்.

சற்று நேரத்தில் திடீரென ஓர் எண்ணம் பளிச்சிட்டது. ‘‘தியானத்தில் உட்கார்ந்து நீயாகவே தெரிந்து கொள் என்று பெரியவா சொல்லி இருக்கிறார். அவர் என்ன சொன்னாலும் அது எனக்கு வேத வாக்கு அல்லவா?’’ என்று அவருக்குத் தோன்றியது. மடத்தின் ஓர் அறைக்குள் சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.

எப்போதும், தியானத்தில் அமர்ந்த உடனேயே அண்ணா சமாதி நிலைக்குள் போய் விடுவார். அன்றும் அப்படியே.

anna alias ra ganapathy5 - 3

சமாதி நிலை என்பது செயல் மட்டுமல்ல, நினைவும் இல்லாத நிலை. அத்தகைய நிலையில் அவருக்குள் அந்த உபநிஷத் மந்திரம் முழுவதும் அலை வடிவில் காட்சி அளித்ததாம். அண்ணாவால் அதை விளக்க முடியவில்லை. இருந்தாலும், ரிஷிகள் மந்திரங்களைக் கண்டுபிடித்தது இந்த வடிவத்தில் தான் என்பது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது. மந்திரம் என்பது கேட்கப்படுவது – சப்தம். ஆனால், ரிஷிகள் மந்திரங்களைப் பார்த்தார்கள் என்று தான் சொல்லப்படுகிறது. ‘‘மந்திரங்களைப் பார்த்தவர் ரிஷி’’ என்ற பொருளில் ‘‘ரிஷி மந்திர த்ருஷ்டா’’ என்று சொல்வார்கள்.

உண்மையில், அது கண்களால் பார்க்கப்படுவதும் அல்ல, காதுகளால் கேட்கட்படுவதும் அல்ல. அது புலன்களுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

அவருக்குக் கிட்டிய உபநிஷத் வடிவத்தின்படி பார்த்தால் வைஷ்ணவர்கள் சொல்லும் உபநிஷத வரி தான் சரியானது.

தான் புரிந்து கொண்டது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பெரியவாளிடம் போய் அதைத் தெரிவித்தாராம், அண்ணா.

அதற்குப் பெரியவா, ‘‘எனக்குத் தெரியுமே, நீ இப்படித் தான் ஏடாகூடமா என்னை வம்பில மாட்டி விட்டுடுவே. நான் என்னவோ ஆசார்யாள் பெயரைச் சொல்லிண்டு காலட்சேபம் பண்ணி பிக்ஷை சாப்பிட்டு வயிறு வளர்த்திண்டிருக்கேன். நீயானா ஆசார்யாள் சொன்னதெல்லாம் தப்பு, வைஷ்ணவா சொல்றது தான் சரின்னு பிரசாரம் பண்ணி என் பிழைப்பில மண்ணைப் போட்டுடப் போறே! தோ பாரு, இந்த சமாசாரத்தை உன்னோட வச்சிக்கோ. யார் கிட்டயும் சொல்லிடாதே!’’ என்று சொன்னாராம்.

பெரியவா தன்னைப் பற்றி மட்டம் தட்டிப் பேசிக் கொள்வது அன்பர்கள் அனைவருக்கும் பழகிப் போன விஷயமே. அவர் தன்னை மகா மட்டமானவராக வர்ணித்துக் கொள்வதுண்டு. குருடு, பொட்டை, கண்ணும் பொட்டை அறிவும் பொட்டை, முட்டாள்களுக்கு அதிபதி, தந்திரக்காரச் சாமியார், சாப்பிட்டுச் சாப்பிட்டு வயிறு வளர்த்திருக்கேன் – இதுபோல ஏராளமான சுய வர்ணனைகள் உண்டு. பெரியவா தன்னைப் பற்றி இவ்வாறு வர்ணித்துக் கொள்ளும் போது அண்ணா மனதுக்குள் பொங்கிப் பொங்கி அழுவதும் உண்டு.

anna alias ra ganapathy12 - 4

ஆனாலும், பெரியவா சொன்ன வார்த்தைகளை அண்ணா என்னிடம் கூறிய போது, இது வழக்கமான சுய கேலி வகையைச் சேர்ந்தது அல்ல என்று எனக்குத் தோன்றியது. ‘‘பெரியவா சொன்னதுக்கு என்ன அர்த்தம்?’’ என்று அண்ணாவிடம் கேட்டேன்.

‘‘நீ ஆசைப்பட்டே. நான் அனுக்கிரகம் பண்ணினேன். உண்மையைத் தெரிஞ்சுண்டே. அத்தோட விஷயம் முடிஞ்சது. இதைப் பத்திப் பெருசா வெளியில டமாரம் அடிச்சுடாதேன்னு அர்த்தம். எனக்கு அப்படித்தான் தோணித்து’’ என்று அண்ணா கூறினார்.


அண்ணாவைப் பற்றி எழுதும் ஆசை, அது அண்ணாவுக்குப் பிடிக்காத விஷயம் என்பதால் எனக்கு நானே போட்டுக் கொண்ட தடை இரண்டையும் பற்றி விரிவாகச் சொல்லி இருந்தேன். இருந்தாலும், பிற்காலத்தில் அண்ணாவைப் பற்றி நான் எழுத நேர்ந்தால் இந்தச் சம்பவத்தை மிகச் சரியாகவும் முழுமையாகவும் சொல்ல வேண்டும் என்று மனதில் பட்டது. உபநிஷத் பெயர், வரிகள் முதலான விவரங்கள் எனக்கு மறந்து விட்டன. எனவே, அண்ணாவின் கடைசி நாட்களில் அவரிடம் அந்த உபநிஷத் பற்றிய விவரங்களைக் கேட்டேன். அண்ணா சிறிது நேரம் யோசித்துப் பார்த்தார். அவருக்கு நினைவு வரவில்லை.


அண்ணா நிஷ்டையில் அமர்வதை யாரும் பார்க்கவே வாய்ப்புக் கிடைக்காது. அவர் பூட்டிய அறைக்குள் அமர்ந்து தான் நிஷ்டையில் இருப்பதுண்டு. அண்ணா நிஷ்டையில் அமர்ந்ததுமே சமாதி நிலை அவருக்குக் கை கூடும் என்பதை ஒரே ஒரு தடவை என்னிடம் சொல்லி இருக்கிறார். (மேலே கூறியுள்ள சம்பவத்தை என்னிடம் தெரிவித்த போது.) எனினும், அவரது அன்புத் தம்பியர் பலருக்கும் இது தெரிந்த விஷயமே.

ஓவியர் மணியம் தனது அனுபவத்தை ஏதோ பத்திரிகையில் எழுதி இருந்தார். எனக்கு அந்தச் சம்பவம் சரியாக நினைவில் இல்லை. ஏதோ நீண்ட நேர ரயில் பயணத்தில் அண்ணா, மணியம், இன்னொரு நபர் (பெயர் நினைவில் இல்லை.) வந்து கொண்டிருந்த போது அண்ணா சமாதி நிலையில் அமர்ந்திருந்தாராம். அப்போது ஏதோ பெரிய சப்தம் கேட்டிருக்கிறது. அனைவரும் திடுக்கிட்டுப் போனார்கள். ஆனால், அண்ணாவிடம் சிறு அசைவு கூட இல்லை என்பதை மணியம் கவனித்திருக்கிறார். மற்றவர்கள் அருகில் இருக்கும் போது அவர் யோக நிஷ்டையில் இருந்தார் என்பது எனக்கு மிகவும் ஆச்சரியமான செய்தியாகவே இருந்தது.

anna alias ra ganapathy15 - 5

இதேபோன்ற நிகழ்வுகள் பெரியவா வாழ்க்கையிலும் உண்டு. பெரியவா நடந்து போகும்போது கூட சமாதி நிலையில் இருந்திருக்கிறார் என்று அண்ணாவே எழுதி இருக்கிறார். ஒரு தடவை சாலையில் அவர் நடந்து போகும் போது அருகே ஒரு பெரிய விபத்து நேரிட்டது. அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். ஆனால், பெரியவா நூல் பிடித்தது போல ஒரே நேர் கோட்டில் நடந்து கொண்டிருந்தார். அவரிடம் எந்தச் சலனமும் இல்லை. அதற்குக் காரணம் அவரது சமாதி நிலை என்று அண்ணா எழுதி இருக்கிறார்.


அண்ணா யோகியாரிடம் குண்டலினி பற்றி ஏதோ சந்தேகம் கேட்டதை சக்திவேல் கவனித்திருக்கிறார். எனவே அவர், பெரியவாளிடமும் ஸ்வாமியிடமும் இதுபோலவே சந்தகங்கள் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு என்றும் தோன்றுகிறது.

ஆனால், அதுபற்றி அவர் என்னிடம் எதுவும் சொன்னதில்லை.


அண்ணாவின் நிமிர்ந்த முதுகு ரொம்ப விசேஷம் என்று சொல்லி இருந்தேன். யோகியாருடன் அண்ணா இருக்கும் வீடியோவிலும் அவரது நிமிர்ந்த முதுகைக் கவனித்திருப்பீர்கள். அண்ணா, அனேகமாக, இரண்டு லட்சம் பக்கங்கள் கையால் எழுதி இருப்பார் என்ற எனது யூகத்தையும் சொல்லி இருந்தேன். ஆனால், அண்ணா டேபிள்-சேர் அதிகம் பயன்படுத்தியதில்லை. தரையில் அமர்ந்த நிலையில் மடியின் மீது ரைட்டிங் பேட் வைத்துக் கொண்டு அதன் மேல் காகிதத்தை வைத்து எழுதுவார்.

இப்படி எழுதுபவர்களுக்கு விரைவிலேயே கூன் விழும். ஆனால், அண்ணாவின் முதுகு கடைசி வரை நேராகவே இருந்தது. அதற்குக் காரணம் அவரது நிஷ்டை தான் என்பது எனது அனுமானம்.

அண்ணா கூடவே பல வருடங்கள் இருந்த நான், அவரைப் பற்றி அனுமானம், யூகம் என்று தான் குறிப்பிட முடிகிறது என்றால், அதற்கு அண்ணா தான் முக்கியக் காரணம். அவர் தன்னைப் பற்றித் தெரிவித்த விஷயங்கள் குறைவு. அவரிடம் நானாகவே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை என்பதும் உண்மை. மேலும், பல விஷயங்கள் மறந்தும் போய் விட்டன.

ஆனாலும், அண்ணாவைப் பற்றிப் பொதுவெளியில் பேசுகிறோம், நம் மூலமாகத் தவறான கருத்து பொதுவெளியில் பரவி விடக் கூடாது, அண்ணாவைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட வர்ணனை இருக்கவும் கூடாது என்ற தீர்மானத்துடன் எழுதுகிறேன். என்னிடம் பக்திக் குறைவு இருக்கலாம். ஆனாலும், பதைபதைப்பு இருக்கிறது. எனவே, என் மூலம் நடக்கும் வேலை சரியாகவே அமையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

எழுதுவதே பிழையான செயலோ என்ற மன உறுத்தலுடன் எழுதுகிறேன். எழுத்தில் பிழைகள் நேரிடுகின்றன என்பதும் புரிந்தே இருக்கிறது. அண்ணா எழுத்து என்றாலே அது content-quality தான். எனினும், இப்போது அவரைப் பற்றி நான் எழுதுவது வெறும் Sridharan-quality ஆகத் தான் இருக்க முடியும்.

பிழை பொறுக்குமாறு வேண்டுகிறேன்.

அண்ணா என் உடைமைப் பொருள்(32): ரிஷி மந்த்ர த்ருஷ்டா முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply