ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0ae9ee0aebee0aea9 e0aeb5e0aebfe0aeb3e0ae95e0af8de0ae95e0af88 e0ae8fe0aeb1e0af8de0aeb1e0aebfe0aeaf e0ae9ee0aebee0aea9 e0ae86e0ae9a

Thirukoilur ulagalantha perumal horz
Thirukoilur ulagalantha perumal horz
Thirukoilur ulagalantha perumal horz

ஆழ்வார்களின் ஈரச்சொற்கள் மங்களகரமான, வழிகாட்டும் வார்த்தைகள். திருமால் குடிகொண்டிருக்கும் திருத்தலங்களை திவ்யமான தமிழ் வார்த்தைகளினால் மங்களாசாசனம் செய்துள்ளார்கள். ஆழ்வார்களின் திவ்ய தமிழ்ப் பாடல்களின் திரட்டுக்கு “ நாலாயிர திவ்யப் பிரபந்தம்” என்று பெயர். பக்தியில் ஆழ்ந்தவர்கள் என்பதனால் ஆழ்வார்கள் என்றும், அவர்கள் மங்களாசாசனம் செய்த திருத்தலங்கள் “ திவ்யதேசங்கள்” என்றும் அழைக்கப்படுகிறது.

ஆழ்வார்களின் அவதார க்ரமத்தை ஸ்வாமி மணவாள மாமுனிகள் தனது உபதேச ரத்தின மாலையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ் மழிசை
  அய்யன் அருள் மாறன் சேரலர்கோன் துய்ய பட்ட
  நாதன் அன்பர்தாள்தூளி நற்பாணன் நற்கலியன்
  ஈதிவர் தோற்றத் தடைவாமிங்கு”

வீட்டில் மகிழ்ச்சி நிறைய வேண்டும் என்றால் தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டால் சகல சுபகாரியங்கள் நிகழ்ந்து, மங்களம் பொங்கும் என்பது நம்பிக்கை. தீபம் ஏற்றுவது என்பது இருள் என்ற அஞ்ஞானத்தை விலக்கி ஞானம் என்ற ஒளியை ஏற்றுவது என்று பொருள். ஞான ஒளி ஏற்றுபவர்களை ஆசான்( அ) குரு என்று வழக்கத்தில் அழைக்கிறோம்.

ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று அழைக்கப்பட்ட முதல் மூன்று ஆழ்வார்களில் இரண்டு ஆழ்வார்கள் விளக்கு ஏற்றி மங்களகரமாகப்  பரம்பொருளை அறியும் வண்ணம் திவ்ய பிரபந்த பாடல்களை படைத்தனர். விளக்கு ஏற்றி பரமஞானத்தை வழங்கியதால் ஆழ்வார்கள் “ ஶ்ரீ வைஷ்ணவர்களின் ஆசாரியன்” என்று முதலில் கருதப்பட்டனர். ஆழ்வார்களின் தலைவராகக் கருதப்பட்ட நம்மாழ்வாரை
ஆதிகுருவாய் இப்புவியில் அவதரித்தோன் வாழியே”  என்று போற்றி புகழ்ந்தனர்.

ஆழ்வார்களை ஆசாரியனாகக் கொண்ட “ ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில்” , ஆழ்வார்களின் திவ்யச் சொற்கள் எவ்வாறு ஞான ஒளி ஏற்றி ( குரு) வழிகாட்டுகின்றன என்பதனை பின்வரும் பாடல்கள் மூலம் அறிய முயற்சிப்போம்.

பொய்கையாழ்வார் தனது முதல் திருவந்தாதியில்

“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று”

பூதத்தாழ்வார் தனது இரண்டாவது திருவந்தாதியில்

அன்பே தகளியா ஆர்வமே பெய்யாத
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்”

பொய்கையாழ்வார் உலகத்தைத் தகளியாகக்கொண்டு, சூழ்ந்து இருக்கும் கடலை நெய்யாகக் கொண்டு வெய்ய கதிரோன் சுடர் என்ற மிகப்பெரிய விளக்கை உலக நன்மைக்காக ஏற்றி, உலக இருள், இடர் நீங்க பிரார்த்திக்கும் அருமையான பாடல். பிரபஞ்சத்தில் காணப்படும் மிகப்பெரிய பொருள்கள் கொண்டு விளக்கு ஏற்றியதன் மூலம், காணப்படும் பொருள்கள் உண்மை தத்துவம் என்றும், தத்துவத்தைக் கொண்டு தத்துவத்தின் மூலப்பொருளை அறிய முயற்சிக்கும்  பாடல்.

அடுத்தது பூதத்தாழ்வார் அன்பைத் தகளியாகக்கொண்டு, ஆர்வத்தை நெய்யாகக்கொண்டு, சிந்தையைத் திரியாகக் கொண்டு ஞானச் சுடர் விளக்கு ஏற்றுகிறார்.  தகளி என்பது மாறாத ஒன்று, அதேபோல் அன்பு மாறாமல் இருக்கவேண்டும்.  ஆர்வத்திற்கேற்ப சிந்தனை மாறக்கூடிய தன்மைக் கொண்டவை. ஆர்வம் என்ற நெய் நிறைய இருக்கும் பட்சத்தில் சிந்தனை என்ற சுடர் நன்றாக வளரும். அன்பு, ஆர்வம், சிந்தனை என்ற குணங்கள் யாவும் உலகமக்கள் அனைவரிடத்திலும் இருப்பவை.  கண்ணுக்குப் புலப்படாத ஆனால் உணர்ச்சி மூலம் அறியப்படும் உண்மைப் பொருள்கள், இவை கொண்டு அனைவருக்குமான உலக ஞான விளக்கை ஏற்றி வைத்தவர் தமிழ் புரிந்த புலவர் பூதத்தாழ்வார்.

காணப்படும் பொருள்கள் அனைத்தும் உண்மை, உண்மையற்ற பொருள்கள் அன்று. ஆனால் ஆச்சரியமாக விளங்கக்கூடிய பொருள்கள். மாயா என்ற சப்தத்துக்கு விசிஷ்டாத்வைதத்தில் “ ஆச்சரியம்” என்று பாடம் கொள்ளப்படுகிறது.

இரண்டு ஆழ்வார்கள் ஏற்றிய இரண்டு ஆச்சரியமான  விளக்கொளியில் மூன்றாவது ஆழ்வார் பேயாழ்வார், ஆச்சரியமான திருமேனியை, ஶ்ரீமஹாலெக்ஷ்மியுடன் சேர்ந்து சங்க சக்கரம் ஏந்திய மகாவிஷ்ணுவைத் தரிசித்ததைப் பின்வரும் பாடல் மூலம் தெரிவிக்கிறார்.

“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று”

பெரியாழ்வார் தனது திருமொழியில்,
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளி கொள்ள ஏற்றுகேன் வாராய்” – எம்பெருமானுடைய உருவத்தை உருக்காட்டுவதற்காக விளக்கு ஏற்ற வாரீர் என்று அழைக்கிறார்.

இதிலிருந்து பிரம்மத்துக்கு உருவம் உண்டு, குணங்கள் உண்டு தத்துவங்கள் உண்மை என்ற விசிஷ்டாத்வைதம் தத்துவத்தை எளிதாக விளக்கியவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் ஈரச்சொற்களைக் கைவிளக்காகக் கொண்டு பிரம்மசூத்திரத்திற்கு உரை எழுதியவர் ஶ்ரீபாஷ்யக்காரர் என்ற ஸ்வாமி உடையவர்.  
“ ஞான விளக்கேற்றிய ஞானாசிரியன் ஆழ்வார்கள்”  என்று பெருமிதம் கொள்வோம்.  

  • மகர சடகோபன்,  தென்திருப்பேரை

ஞான விளக்கை ஏற்றிய ஞான ஆசிரியன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply