அண்ணா என் உடைமைப் பொருள் (34); My Colleague Ra. Ganapati

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0ae85e0aea3e0af8de0aea3e0aebe e0ae8ee0aea9e0af8d e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d 34 m

anna en udaimaiporul 2 - 7
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 34
My Colleague Ra. Ganapati
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவுக்கு ராஜாஜி மீது மிகுந்த மரியாதை உண்டு. அண்ணா எழுதிய ஜய ஜய சங்கர நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜாஜி, அவரை, ‘‘My colleague Ra. Ganapati’’ என்று குறிப்பிட்டாராம். இதை அண்ணா என்னிடம் நாலைந்து தடவை சொல்லி இருக்கிறார். ‘‘எப்பேர்ப்பட்ட மகான்ப்பா அவர்! என்னைப் போயி கலீக்னு சொன்னார்’’ என்று வியப்புடன் சொல்வதுண்டு

அம்மா புத்தகத்தை ராமகிருஷ்ணா மடத்து அண்ணா பாராட்டியதையும், ராஜாஜி ‘My colleague Ra. Ganapati’ என்று குறிப்பிட்டதையும் அவர் தனது எழுத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதினார். இருந்தாலும், ராஜாஜி அவரை ‘‘கலீக்’’ என்று குறிப்பிட்டதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதும் உண்மை. கலீக் என்ற சொல் சம அந்தஸ்தில் இருப்பவரைக் குறிக்கிறது. அண்ணா மனதில் ராஜாஜி மிக உயர்வான இடத்தில் இருந்தவர். அவருக்குச் சமமானவராகத் தன்னை அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

பெரியவாளின் எளிமையைப் போலவே ராஜாஜியின் எளிமையும் அண்ணாவைக் கவர்ந்த விஷயம். ராஜாஜியை மகான், பூஜிதர், தபஸ்வி, ஸந்நியாஸி என்றெல்லாம் அண்ணா என்னிடம் சொல்லியதுண்டு.

அண்ணாவின் நெஞ்சில் நிறைந்த மனிதர்களில் ராஜாஜியும் ஒருவர். ராஜாஜியைப் பற்றி எழுதா விட்டால் அண்ணாவைப் பற்றிய இந்தத் தொடர் முழுமையானதாக இருக்காது. எனவே அண்ணா அவரைப் பற்றிக் கூறிய விஷயங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

anna alias ra ganapathy6 - 3

*

எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் வெளியிட்டிருந்த ஒரு புத்தகத்தில் ராஜாஜியின் பங்களாவில் நடந்த ஒரு சந்திப்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அண்ணாவுக்கு அந்தச் செய்தி புதியதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவரிடம் அதைக் காட்டினேன். அதைப் படித்ததுமே, ‘‘ஐயய்யோ, என்னப்பா இது, ராஜாஜியோட பங்களான்னு போட்டிருக்கா?’’ என்று அதிர்ச்சியோடு கேட்ட அவர், ராஜாஜி எந்தக் காலத்திலும் பங்களாவில் வசித்ததில்லை என்று சொன்னார். இந்தப் புத்தகம் மறுபடியும் அச்சிட நேர்ந்தால் பங்களா என்ற வார்த்தையை இல்லம் என்று திருத்தி வெளியிடுமாறு அதன் பதிப்பாளர்களிடம் சொல்லச் சொன்னார்.

*

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருமுறை ஏதோ காங்கிரஸ் மாநாட்டுக்காக, கல்கி, ராஜாஜி, சதாசிவம் மூவரும் பஞ்சாப் போக வேண்டி இருந்ததாம். பஞ்சாபில் அப்போது தண்ணீர்ப் பஞ்சமாம். (ஐந்து ஜீவ நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியில் ஏன் தண்ணீர்க் கஷ்டம் ஏற்பட்டது என்ற விவரம் அண்ணாவுக்குத் தெரியவில்லை. மாநாட்டில் நிறையப் பேர் கூடுவதால் ஏதாவது தட்டுப்பாடுகள், சிரமங்கள் இருந்திருக்கலாம்.) மாநாட்டுக்குப் போவதற்கு முன் கல்கி, சதாசிவம் ஆகியோரிடம் ராஜாஜி, ‘‘நீங்கள்லாம் ரொம்ப ஆடம்பரமா வாழறேள். குளிக்கறதுக்கும் துணி துவைக்கறதுக்கும் சேர்த்தே எனக்கு ஒரு பக்கெட் தண்ணீர் தான் செலவாறது. நீங்க ரெண்டு பேரும் என் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துக்கோங்கோ’’ என்று சொன்னாராம்.

kalki krishnamurthy novels PDF Download

குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் சேர்த்து எவ்வாறு ஒரே ஒரு பக்கெட் தண்ணீர் போதுமானதாக இருக்க முடியும் என்று நான் அண்ணாவிடம் கேட்டேன். அவருக்கும் அது அதிசயமாகத் தான் இருந்தது. எனினும், சதாசிவம் இந்தச் சம்பவத்தை அடிக்கடி நினைவு கூர்வாராம். ராஜாஜியின் சிக்கனத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம் என்று அண்ணா என்னிடம் குறிப்பிட்டார்.

*

ராஜாஜி முதல்வராக இருந்த போது ஒரு தடவை ஏதோ ஊருக்குப் போகும் வழியில் கார் ரிப்பேர் ஆகி விட்டது. சில கிலோ மீட்டர் நடந்து போனால் அரசு பயணியர் விடுதியை அடைந்து விடலாம். தனது ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொண்ட ராஜாஜி அருகில் இருந்த ஒரு கட்சிக்காரர் வீட்டுக்குப் போய் அங்கிருந்து பயணியர் விடுதிக்கு ஃபோன் பண்ணி அன்று இரவு அங்கே தங்கப் போகிறேன் என்று தகவல் சொன்னார்.

மறு நாள் காலைக்குள் ஏதாவது மெக்கானிக் உதவியுடன் கார் ரிப்பேரை சரி செய்த பின்னர், நேரே விடுதிக்கு வந்து ராஜாஜியை பிக்அப் பண்ணுவதாக கார் ட்ரைவர் உறுதி அளித்தார்.

கட்சிக்காரர் வீட்டில் இருந்து தனி ஆளாக விடுதிக்கு நடந்தே போனார், ராஜாஜி.

விடுதி அறையில் ஒரு புது டேபிள் ஃபேன் இருந்தது. அதைப் பார்த்ததும் ராஜாஜிக்கு சந்தேகம். அந்த ஃபேனை அப்போது தான் வாங்கி இருக்கிறார்கள் என்று தோன்றியது. விடுதி மேனேஜரை அழைத்து அவரிடம் விவரம் கேட்டார்.

‘‘ஃபேன் புதுசு மாதிரி இருக்கு? இப்பத்தான் வாங்கினீங்களோ?’’

‘‘ஆமா சார்.’’

rajaji - 4

‘‘ஓ! எதுக்காகவாம்? சீஃப் மினிஸ்டர் வராரு. ரூம்ல ஃபேன் இல்லை. அவருக்குப் புழுக்கமா இருக்கும், தூங்க முடியாம கஷ்டப்படுவார்னு வாங்கினீங்களோ?’’

‘‘ஆமா சார்.’’

‘‘ரொம்ப அக்கறையா இருக்கீங்களே! ஃபேன் விலை எவ்வளவோ?’’

‘‘நூற்றி ஐம்பது ரூபா சார்.’’

‘‘அவ்ளோ ரூபாயா? யார் செலவு பண்ணினாங்களோ?’’

‘‘நான் தான் சார்.’’

‘‘நமக்கு சம்பளம் எவ்வளவோ?’’

‘‘தொண்ணூறு ரூபா சார்.’’

‘‘இந்தச் சம்பளத்தை வச்சு வாயைக் கட்டி வயித்தைக் கட்டித் தான் வாழ்க்கை நடத்த முடியும். ஐயா கைக்காசைப் போட்டுச் செலவு பண்ணி சீஃப் மினிஸ்டருக்கு ஃபேன் வாங்கறீங்களாக்கும்?’’

‘‘….’’

‘‘இந்த மாதிரி செலவை எப்படிச் சரிக்கட்டுவீங்க? வர்றவங்க போறவங்க எல்லார் கிட்டயும் லஞ்சம் வாங்குவீங்க. எங்களுக்கு எவ்ளோ செலவு பாருங்க, சீஃப் மினிஸ்டர் வந்தா நாங்க நூத்தம்பது ரூபாய்க்கு ஃபேன் வாங்கிப் போட வேண்டி இருக்குன்னு சொல்லுவீங்க? ஊழல் இப்படித் தான் ஆரம்பமாகுது’’ என்று சொன்ன ராஜாஜி, தனது ப்ரீஃப்கேஸைத் திறந்து செக் புக்கை எடுத்தார். நூற்றி ஐம்பது ரூபாய்க்கு செக் எழுதி அந்த மேனேஜரிடம் கொடுத்தார்.

மறு நாள் காலை கார் ரெடி. அதை ஓட்டிக் கொண்டு ட்ரைவர் விடுதிக்கு வந்து சேர்ந்தார். காரில் ஏறி உட்கார்ந்த முதலமைச்சர் ராஜாஜி, விடுதி மேனேஜரிடம், படு தோரணையாக, ‘‘ஐயா, என்னுடைய ஃபேன்-ஐ மறந்து போயிட்டீங்களே! எடுத்திட்டு வந்து டிக்கியில வைங்க’’ என்று சொன்னாராம்.

இந்தச் சம்பவத்தை என்னிடம் தெரிவித்த போது, அண்ணா, என்னுடைய ஃபேன் என்பதை அழுத்தமாக உச்சரித்தார். எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்தது. ஃபேன் விலை நூத்தி ஐம்பது ரூபாயாச்சே!

ஆனால், இப்போது இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் வேதனையாக இருக்கிறது.

முதல் மந்திரியுடன் யாருமே இல்லை… அவரும் டிரைவரும் தான் பயணம் போனார்கள்…. முதல்வரின் லக்கேஜ் ஒரு ப்ரீஃப்கேஸ் மட்டுமே… பயணியர் விடுதிக்கு அவர் தனி ஆளாக நடந்தே போனது… தனக்காக ஃபேன் வாங்கியதைக் குற்றமாகக் கருதியது….

நம் தலைவர்கள் இப்படித் தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

தற்போதைய நிலையைப் பார்த்தால்…. எங்கேயோ வலிக்கிறது.

*

anna alias ra ganapathy12 - 5

ஒருமுறை, கதர் சம்பந்தமாக ஏதோ ஒரு பெரிய கண்காட்சிக்கு ராஜாஜியை அழைத்திருந்தார்கள். அவரும் வருகை தந்தார். ஒவ்வோர் உற்பத்திப் பொருளையும் அவருக்குக் காட்டும் போது, அவர்கள், ‘‘இயந்திரத்தில் தயாரித்த மாதிரியே… பவர்லூமில் உற்பத்தி பண்ணிய மாதிரியே…’’ என்பதாக விளக்கினார்கள்.

பின்னர், அவர் கிளம்பும் போது பார்வையாளர்கள் புத்தகத்தில், ‘‘இங்கே எல்லாப் பொருட்களுமே இயந்திரத்தில் தயார் செய்யப்பட்டவை போல இருக்கின்றன. இனிமேலாவது கையால் தயாரிக்கப்பட்ட மாதிரியே இருக்கும் பொருட்களை உற்பத்தி பண்ணுங்களேன்!’’ என்று எழுதினாராம்.

ராஜாஜி வாழ்க்கையில் அண்ணாவுக்கு ரொம்பவும் பிடித்த சம்பவம் இது. நிறைய தடவை இதை என்னிடம் சொல்லி இருக்கிறார்.

*

அரசியலில் காமராஜரும் ராஜாஜியும் எதிரெதிர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு மேலே படிக்கவும்.

காமராஜர் முதல்வராக இருந்த போது ஒருமுறை ஏதோ சிக்கலான பிரச்சினை ஏற்பட்டது. அவரும் தலைமைச் செயலாளரும் அதைப் பற்றி விவாதித்துக் கொண்டே காரில் வந்தனர். திடீரென காராஜருக்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்த நேரம் ராஜாஜி முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என்பதே அந்தக் கேள்வி. அதைத் தலைமைச் செயலரிடம் கேட்கிறார். அவர் ராஜாஜி காலத்திலும் பணியில் இருந்தவர். சற்று நேரம் யோசித்த அவர், ‘‘அவர் எப்படிக் கையாண்டிருப்பார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இதை நாம் ஏன் யூகிக்க வேண்டும். அவரிடமே கேட்டு விடலாமே!’’ என்று சொல்கிறார்.

இருவரும் அப்போதே ராஜாஜி இல்லத்துக்கு விரைந்தார்கள்.

வீட்டில் ராஜாஜி மட்டும் தனியே இருந்தார். வீட்டு வாசலில் கார் வந்து நின்றதும், வந்திருப்பவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளியே வருகிறார். முதல்வரையும் தலைமைச் செயலரையும் பார்த்ததும் அவருக்கு வியப்பாக இருக்கிறது. உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்துத் தண்ணீர் கொடுத்து உபசரிக்கிறார்.

kamaraj
kamaraj

பின்னர் தாங்கள் இருவரும் ராஜாஜியைப் பார்க்க வந்த காரணத்தைக் காமராஜர் அவரிடம் விவரிக்கிறார். உடனே, ராஜாஜி, ‘‘நீங்கள் முதலமைச்சர். நான் சாதாரணக் குடிமகன். நீங்கள் உங்களது வீட்டிலோ அலுவலகத்திலோ இருந்து கொண்டு என்னை அங்கே வரவழைத்து இந்தக் கேள்வியைக் கேட்பது தான் முறையாக இருக்கும்’’ என்று சொன்னாராம்.

*

சிஎன் அண்ணாத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ராஜாஜி, இரண்டு முறை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தார். மருத்துவமனையில் அண்ணாத்துரை அருகில் இருந்து கவனித்துக் கொண்டவர் அப்போதைய போலீஸ் மந்திரி. அவர் தனது துறை சார்ந்த ஃபைல்களை மருத்துவமனைக்கே வரவழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அந்த மந்திரியைப் பற்றி சதாசிவத்திடம் பெருமையாகக் கூறுவாராம், ராஜாஜி:

‘‘சிஎன்ஏக்கு பதிலா இந்தப் பையனை சீஃப் மினிஸ்டர் ஆக்கியிருக்கலாமோன்னு தோணறது. என்ன கமிட்மென்ட் அவனுக்கு! ஹாஸ்பிடல்ல உக்காந்துண்டு ஃபைல்ஸ் பார்த்துண்டிருக்கான்! ரொம்ப வொர்கஹாலிக் டைப்!’’

சிஎன் அண்ணாத்துரை மறைவுக்குப் பின்னர், ராஜாஜியின் மனம் கவர்ந்த அந்த ‘‘வொர்கஹாலிக் பையன்’’ முதலமைச்சரானார். அவர் தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்தி ‘‘ஆல்கஹால்’’ கடைகளைத் திறந்து விட்டார்.

anna alias ra ganapathy14 - 6
annadurai

திடுக்கிட்டுப் போன ராஜாஜி, ‘‘வொர்கஹாலிக் பையனை’’ நேரில் சந்தித்து இந்த முடிவைத் திரும்பப் பெற வைப்பதற்காக முயற்சி செய்தார். ‘‘வொர்கஹாலிக் பையன்’’ தரப்பில் இருந்த யாரும் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை. ‘‘வொர்கஹாலிக் பையன்’’ ராஜாஜியைச் சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லை.

மனம் வெறுத்துப் போன ராஜாஜி, சதாசிவத்திடம், ‘‘உயிர் வாழும் ஆசையே போய் விட்டது, தரமில்லாத மனிதர்களைப் பதவியில் அமர்த்துவதற்குக் காரணமாக இருந்து விட்டேன். நான் பாவி. தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டேன். எதிர்கால சமுதாயம் என்னை மன்னிக்கவே மன்னிக்காது’’ என்று புலம்பினாராம்.

நிஜமாகவே அவருக்கு உயிர் வாழும் ஆசை போய் விட்டது.

சில மாதங்களில் அவரது வாழ்க்கை முடிவடைந்தது.

*

இந்த வரலாற்று நிகழ்வுக்கு ஒரு பிற்சேர்க்கை உண்டு. அதையும் இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும்.

முதல்வராக இருந்த ‘‘வொர்கஹாலிக் பையனை’’ மதுவிலக்கு விஷயமாக நேரில் சந்திக்க ராஜாஜி பலமுறை முயன்ற போது, வொர்கஹாலிக் பையன் தரப்பைச் சேர்ந்த பலர், ‘‘ராஜாஜி தனது சொந்தக்காரர் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என்பதற்காக சிபாரிசு வேண்டி முதல்வரைச் சந்திக்க முயற்சி செய்தார். எங்கள் முதல்வர் அத்தகைய தவறான செய்கைக்கு உடன்படத் தயாரில்லை’’ என்று மேடைகளில் முழங்கினார்கள்.

அப்போது, ராஜாஜியின் அரசியல் எதிரியான காமராஜர், ‘‘ராஜாஜி பொது நன்மைக்காக எந்தவித மரியாதையும் எதிர்பார்க்காமல் யாரிடமும் போய்க் கையேந்துவார். தனது சுயநலத்துக்காக யாரிடமும் போய்க் கெஞ்ச மாட்டார்’’ என்று காட்டமாக அறிக்கை விடுத்தார்.

அண்ணா என் உடைமைப் பொருள் (34); My Colleague Ra. Ganapati முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply