அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0ae85e0aea3e0af8de0aea3e0aebe e0ae8ee0aea9e0af8d e0ae89e0ae9fe0af88e0aeaee0af88e0aeaae0af8d e0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d 35

anna en udaimaiporul 2 - 8
anna en udaimaiporul 2 - 3

அண்ணா என் உடைமைப் பொருள் – 35
அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!
– வேதா டி. ஸ்ரீதரன் –

என் மனதில் மிகுந்த விரக்தி உணர்வும் சுய பச்சாதாபமும் அவ்வப்போது தலைதூக்கும். ஏதேதோ காரணங்கள், பழைய நினைவுகள், நிகழ் காலத்து வேதனைகள்…

அண்ணாவிடம் என்னைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று முயற்சி செய்தேன். முடியவில்லை. கூச்சம் மட்டுமல்ல, ஏதோ ஒருவகை அச்ச உணர்வும் இருந்தது.

அண்ணாவிடம் நான் மிகவும் சகஜமாகப் பேசுவதுண்டு. இருந்தாலும், என்னைப் பற்றிப் பேச நா எழவில்லை.

சாரதா பப்ளிகேஷன்ஸ் ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு ஒரு விரிவான கடிதம் எழுதினேன்.

அதன் பிறகு அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.

நான் போயிருந்த போது அண்ணா சுவரில் சாய்ந்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தார். நான் நமஸ்காரம் பண்ணி விட்டுத் தரையில் அமர்ந்தேன்.

anna alias ra ganapathy3 - 4

அண்ணா என்னைப் பார்த்துச் சிரித்தவாறே, ‘‘மொத்தம் ஆறு பக்க லெட்டர். அதில முழுசா ஒரு பக்கம் எதுக்காக இந்த லெட்டர்ன்னு நீளமான அறிமுகம்!! எல்லாம் எதுக்கு? அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுண்டியா? அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னா நினைச்சுண்டே? அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்’’ என்று சொல்லி லேசாக நிறுத்தியவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். மீண்டும் அழுத்தம் திருத்தமாக, ‘‘அண்ணாவுக்கு எல்லாம் தெரியும், அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தே!’’ என்றார்.

பின்னர், ‘‘உன்னளவில நீ எப்படி இருந்தாலும் அண்ணாவுக்கு வருத்தம் இல்லை. பிறத்தியாருக்குக் கெடுதல் பண்ணாம இருந்தால் போதும். உன்னை அண்ணா என் பக்கத்திலயே வச்சிண்டிருக்கேன். ஏன் தெரியுமா? நீ அசடுங்கறதால தான். எதையும் போட்டுக் குழப்பிக்காதே!’’ என்றார்.


எனக்கு எல்லாம் தெரியும் என்றால் என்ன பொருள்? அண்ணா ஸர்வக்ஞர் என்று அர்த்தமா?

எனக்குப் புரியவில்லை. அவரிடம் அதற்கு விளக்கம் கேட்கவும் தோன்றவில்லை.

அதன் பின்னர் அவரிடம் அவ்வப்போது ஏதோ ஒருசில விஷயங்கள் கேட்டதுண்டு. எனினும், பெரிதாக எதுவும் கேட்கத் தோன்றவில்லை. குறிப்பாக, ஆன்மிக விஷயமாக எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.

தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது என்ற கருத்து சிறு வயது முதலே மனதில் இருந்து வந்தது. எனினும், பக்தி என்று சொல்லிக் கொள்ளுமளவு பெரிதாக ஒன்றும் இல்லை. அண்ணாவிடம் வர ஆரம்பித்த பின்னர் தான் ஸ்வாமி, பெரியவா, யோகி மூவரின் மீதும் நிஜமான பக்தி உணர்வு ஏற்பட்டது.

anna alias ra ganapathy4 1 - 5

ஆனால், இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் என்னிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது.

ஸ்வாமி, பெரியவா, யோகி எல்லோருமே எனக்கு அண்ணா தான் என்ற உணர்வு ஏற்பட்டது.

கம்பெனிக்கு சாரதா பெயரை வை என்று சொன்னவர் சாக்ஷாத் சாரதையின் மனித வடிவமே என்று என் மனம் நம்ப ஆரம்பித்தது.

மனம் முழுவதும் அண்ணா, அண்ணா, அண்ணா என்று துதிக்க ஆரம்பித்தது.

சில வருடங்கள் இந்த நிலையே நீடித்தது.


கடந்த சில நாட்களாக, பழைய சம்பவங்கள் அனைத்தையும் கோவையாக நினைவுக்குக் கொண்டு வந்து அசை போட முயற்சிக்கிறேன். பல விஷயங்களை நம்பவே முடியவில்லை.

அவற்றில் தலையாயது ‘‘அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தே!’’ தான்.

அண்ணாவா அப்படிச் சொன்னார்?

ஆம், சாக்ஷாத் அண்ணாவே தான்.

25 வருடங்கள் கழிந்த பின்னரும் நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காட்சி என் கண்ணில் இப்போதும் நிழலாடுகிறது. வார்த்தைகள் அப்படியே நினைவில் இருக்கின்றன.

ஆனாலும், அதை நம்பவே முடியவில்லை.

அண்ணாவை நெருக்கமாக அறிந்த யாராலும் இதை நம்ப முடியாது.

சம்பவத்துக்கு சாக்ஷியாக இருந்த என்னாலேயே நம்ப முடியவில்லை.

ஏனெனில், அது தான் அண்ணா. அவர் தன்னை ஒருபோதும் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டதில்லை.

சிற்சில இடங்களில் – மிகச் சில இடங்களில் – குறிப்பாக, நவராத்திரி நாயகி நூலுக்கான முகவுரை என்கிற முக்கிய உரையில் – அண்ணா தனது அனுபூதி நிலையைப் பற்றி லேசாகக் கோடி காட்டி எழுதி இருக்கிறார். அவரது அன்புத் தம்பி ஒருவருக்குக் கடைசி நாட்களில் எழுதிய கடிதத்திலும் இதுபோன்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவையெல்லாம், வெறுமனே மேம்போக்கான வர்ணனை மட்டுமே.

‘‘அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தே!’’ மட்டுமே எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விதி விலக்கு.

இதற்குப் பின்னர் பல சந்தர்ப்பங்களில் என்னிடம், அவர், தன்னை ஒண்ணுமே தெரியாத பாமரராகவே குறிப்பிட்டுப் பேசி இருக்கிறார்.


‘‘அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை!’’க்குச் சில வாரங்கள் கழிந்த பின்னர் நடந்தது இது.

சாரதா பப்ளிகேஷன்ஸ் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டி இருந்தது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆலோசித்து முடிவு செய்தோம். எடுக்கப்பட்ட முடிவுகளை அண்ணாவிடம் தெரிவித்தேன். அண்ணா வெறுமனே கேட்டுக் கொண்டார்.

மறுநாள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘அண்ணாவுக்குப் பரிபூர்ண சம்மதம்’’ என்று தெரிவித்தார்.

அத்துடன் கூடவே ஒரு ‘‘மங்கல’’ச் செய்தியையும் தெரிவித்தார்.

anna alias ra ganapathy9 - 6

அண்ணாவுக்கு ஸ்வாமி ஒரு மாலை வரவழைத்துக் கொடுத்திருந்தார். அவரது வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளின் போது அது அறுந்து போகுமாம். இதற்கு முன்னால் ஒரு தடவை அது அறுந்து போனதாம். அதைத் தொடர்ந்து அவரது அம்மா காலமாகி விட்டார்.

முந்தைய நாள் இரவு அந்த மாலை அறுந்து போனதாம். காலையில் தான் அண்ணா அதை கவனித்தாராம். உடனே என்னைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்தார். சாரதா பப்ளிகேஷன்ஸில் எடுக்கப்பட்ட முடிவுகள் அண்ணாவின் வாழ்வில் முக்கியமான விஷயம். எனவே, மாலை அறுந்தது மங்கலமான சூசகம் என்பதே அவர் தெரிவித்த செய்தி.

மரணத்துடன் தொடர்புடையது, மாலை அறுந்து போனது ஆகிய இரண்டையும் மங்கலச் செய்தியாகத் தான் அண்ணா என்னிடம் தெரிவித்தார். நானும் அதை அப்படியே நம்பினேன்.

என்னை அசடு என்று அண்ணா சொன்னது சரி தான்!


அப்போது அறுந்த அந்த மாலை அதன்பின்னர் அறுந்து போகவே இல்லை. மிகச் சீக்கிரத்திலேயே காணாமல் போய் விட்டது.

சாரதா பப்ளிகேஷன்ஸில் அப்போது நாங்கள் எடுத்த முடிவு தான் பிற்காலத்திய பிரச்சினைகள் அனைத்துக்கும் பிள்ளையார் சுழியாக அமைந்தது.

அண்ணாவின் (mis)guidance சரியாகத் தான் இருந்திருக்கிறது.


அந்த நாட்களில் வாழ்க்கை என்பது எனது expert caretaker இடம் நான் செய்யும் பிரார்த்தனை ஆகி இருந்தது. எது நடந்தாலும் அண்ணாவை நேரில் சந்தித்து அவரிடம் அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். அவருக்கு அருகே இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் மனம் அவருடனேயே இருக்கும்.

இந்நிலையில் எனக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சேமிப்பு என்பது ஸேவிங்ஸ் பேங்க் அக்கௌன்ட் மினிமம் பேலன்ஸ் மட்டுமே. பதிப்பகத்தில் இருந்து மாதம் ரூபாய் ஐந்தாயிரம் வரும். அனேகமாக, அது இரண்டு அல்லது மூன்று தவணைகளில் கிடைக்கும்.

வரவு இவ்வளவு தான் என்றாலும், எனக்கென்றே அமைந்து விட்ட நிறைய பிரத்தியேகமான – எழுத்தில் வடிக்க முடியாத – செலவுகள் உண்டு. எனவே, வருமானத்தில் சுமார் பாதியளவு தான் வீட்டுக்குப் போய்ச் சேரும்.

இதுபோன்ற காரணங்களால், எனது பொருளாதார வசதியை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியுமா என்ற அச்சம் எனக்கு இருந்தது.

அப்போது ஒருநாள் அண்ணா ஃபோன் பண்ணினார். அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறதாம். உடல் மிகவும் சோர்வாக இருக்கிறது. பாத்ரூமுக்கு நடந்து போக சிரமமாக இருக்கிறது. உதவிக்கு ஆள் தேவை. மூன்று நாள் இரவு அண்ணாவுடன் தங்க வேண்டும். என்னை வரச் சொன்னார்.

அண்ணா இருந்த அந்த அறை ஒரு வீட்டின் பின்புற போர்ஷன். அந்த வீட்டின் வழியாக அண்ணாவின் அறைக்குள் செல்லலாம். இது தவிர, அண்ணாவின் அறையின் பக்கவாட்டில் தனியாக வேறொரு வழியும் உண்டு. முன்புற வீ்ட்டில் நடுத்தர வயது தம்பதி இருந்தனர். அன்றைய தினம் அவர்கள் ஊரில் இல்லையாம். எனவே, அருகில் உதவிக்கு யாரும் இல்லை.

சாயங்காலம் அண்ணாவிடம் போய்ச் சேர்ந்தேன். நான் போவதற்கு முன்னர் சக்திவேல் வந்திருந்தாராம். அண்ணாவுக்கு வயிற்றுப் போக்கு என்பது தெரிந்ததும் அவர் அண்ணாவுடனேயே தங்குகிறேன் என்று சொன்னாராம். அண்ணாவோ, வேண்டாம் வேண்டாம், நான் ஶ்ரீதரை வரச் சொல்லி வி்ட்டேன், நீ கிளம்பு என்று அவரை அனுப்பி விட்டாராம்.

அண்ணாவுக்கு சக்திவேலை விட எந்த வகையிலும் யாரும் பெட்டர் அல்ல. சக்திவேல் வேண்டாம் ஶ்ரீதர் தான் வேண்டும் என்பது எதற்காக?

புரியவில்லை.

அவரது மாலை நேர வழக்கப்படி அவரைக் கோவிலுக்கு அழைத்துப் போனேன். பின்னர் அவரது அனுஷ்டானங்கள். அதெல்லாம் சிதம்பர ரகசியம். தாழிடப்பட்ட அறைக்குள் தான் நடக்கும். நான் வெளியே போய் சாப்பிட்டு விட்டு வந்து முன்புற வீட்டில் காத்திருந்தேன்.

anna alias ra ganapathy5 - 7

இரவு சுமார் எட்டரைக்குக் கதவு திறந்தது. அதன்பின்னர் அண்ணா சற்று நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். பின்னர், ‘‘எனக்கு ரொம்ப முடியல. டயர்டா இருக்கு. படுத்துக்கறேன்’’ என்று சொல்லி என்னை முன்புற வீட்டில் படுக்குமாறு சொல்லி விட்டுப் படுக்கப் போய் விட்டார்.

எனக்குச் சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. வயிற்றுப் போக்கின் காரணமாக அவதிப்படுபவர்களுக்கு பாத்ரூமே கதி. தனது படுக்கைக்கு ஐந்து அடிகள் தள்ளி இருக்கும் பாத்ரூமுக்குப் போக முடியாத அளவு அசதியாக இருப்பவர் – பாத்ரூமின் ப்ளைவுட் கதவைத் திறக்க முடியாத அளவு உடல் பலகீனமாக இருப்பவர் – பதினைந்து அடி நடந்து வந்து, கனமான மரக் கதவைத் திறந்து, என்னைக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்து அடித்து எழுப்பி…..

நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. நான் நிம்மதியாகத் தூங்கி விட்டேன்.

காலையில் எழுந்ததும் காலைக் கடன்களை முடித்துப் பல் தேய்த்தேன். அண்ணாவின் அறைக் கதவு திறந்தது. என்னை உள்ளே அழைத்தார். போனேன்.

இரவில் ஊற வைத்திருந்த பாதாம் பருப்பை உரித்துக் கொடுத்தார். சாப்பிட்டேன். அதைத் தொடர்ந்து சூடான, சுவையான தேநீர் கொடுத்தார். குடித்தேன்.

‘‘உனக்கு நாழியாச்சு. வீட்டுக்குக் கிளம்பு. இன்னிக்கு சாயங்காலமும் வந்துடு’’ என்றார்.

அடுத்தடுத்து மூன்று நாட்கள் அவருடன் ராத்தங்கல், காலை உபசாரம்.

இதைத்தொடர்ந்து மனதில் திருமணம் குறித்த அச்சம் பெருமளவு குறைந்து விட்டது. I’m under expert care என்று நம்பிக்கை உறுதிப்பட்டது.


‘‘நாங்கள் எல்லோரும் அண்ணாவுக்கு விழுந்து விழுந்து சேவை பண்ணுவோம். ஆனால் அண்ணாவோ ஶ்ரீதருக்கு விழுந்து விழுந்து சேவை பண்ணுவார்’’ என்று நண்பர் இளங்கோவன் அடிக்கடி கூறுவதுண்டு.

உண்மை தான்.

ஆனால், ‘‘எல்லாம் தெரிந்த’’ அண்ணா, ஶ்ரீதரன் என்கிற ஓர் அசடனைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அவனுக்கு விழுந்து விழுந்து உபசாரம் பண்ணியது ஏன் என்பது தான் –

அப்போதும் புரியவில்லை, இப்போதும் புரியவில்லை.

அண்ணா என் உடைமைப் பொருள் (35): அண்ணாவுக்கு எல்லாம் தெரியும்டா, குழந்தை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply