திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் – 106
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தெருப்புறத்து – திருச்செந்தூர்
கவந்தம் ஆடியது

வரலாற்றில் முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மடிந்தனர் என்று கூறுவர். முதல் உலகப் போரில் ஏறத்தாழ 18 மில்லியன் பேரும் (1,80,00,000 ஒரு கோடியே எண்பது இலட்சம்) இரண்டாம் உலகப் போரில் 85 மில்லியன் மக்களும் (8,50,00,000 எட்டரைக் கோடி) இறந்ததாக ஒரு கணக்கு கூறுகிறது. அசோகர் நடத்திய கலிங்கப் போரில் ஒரு இலட்சம் பேர் இறந்ததாக வரலாறு சொல்கிறது.

மகாபாரதப் போரில் 18 அக்குரோணிப் படைகள் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஒரு அக்குரோணிப் படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன்.

இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும். ஆனால் போரின் முடிவில் எஞ்சி இருந்தவர்கள் கௌரவர் தரப்பில் நான்கு பேர், பாண்டவர்கள் தரப்பில் எட்டு பேர். கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி, யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

Diwali pandavas 1
Diwali pandavas 1

இராமாயணத்தில் எத்தனை பேர் மடிந்தனர் என்பதற்கு கணக்கு இருக்கிறதா எனப் பார்த்தால், வால்மிகியின் கணக்கிற்கும், கம்பரின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளது. கம்பர் கணக்கைச் சொல்லு விதமே அலாதியானது. இராமனுடைய வில்லின் திறத்தால் பலர் இறந்ததாகக் கம்பர் யுத்தகாண்டத்தில் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இராமனுடைய வில்லின் திறம் பற்றி கம்பன் பல இடங்களில் பாடியிருக்கிறார்.

அவற்றில் எல்லாம் உச்சமானது உயுத்தகாண்டம், மூலபல சேனை வதத்தைப் பற்றிய பகுதிதான். ஏனென்றால் அந்தச் சேனையின் எண்ணிக்கையும் வலுவும் அப்படிப்பட்டது. மூலபல அரக்கர் சேனையை தனியொருவனாக எதிர்த்து நின்று ராமன் முறியடித்த விதத்தைக் கம்பன் சொல்லியபடி விளக்குவதென்றால் பரந்து விரியும். எனினும் அதைச் சுருங்கக் காண்போம்.

இந்திரஜித்தின் வதத்தை அடுத்து சொல்லொணாத் துயரம் அடைந்த ராவணன் சீதையை வெட்டிப்போட விரைகிறான். அப்போது அவனைத் தடுத்த அமைச்சனான மகோதரன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறுகிறான்.

இந்த அரக்கர்களின் சேனைதான் மூல பல சேனை என்று அழைக்கப்பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் இலங்கை வரச்சொல்லி செய்தி அனுப்பி மகோதரன் வரவழைத்தான். அந்தச் சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், பவளக்குன்றினர், கந்தமாதானத்தோர், மலையத்து மறவோர், புட்கரத்தீவினர், இறலித்தீவினர், பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று பல பிரிவினர் இருந்தனராம்.

ravana insulting

அவர்களைக் கண்ட இராவணன் அவர்களது எண்ணிக்கை எவ்வளவு என்று மகோதரனிடம் கேட்டான். அந்த அரக்கர் சேனையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க இயலாது என்று மகோதரன் பதிலுரைத்தான். சரி, ஆட்களைத்தான் எண்ண முடியவில்லை, படைத் தலைவர்களையாவது கொண்டுவாருங்கள் என்று இராவணன் தன் தூதர்களை அனுப்பி அந்தச் சேனையின் தலைவர்கள் எல்லாரையும் தருவித்தான். அவர்களிடம் இராம, இலட்சுமணர்களையும் வானரவீரர்களையும் வெல்ல வேண்டிய காரணத்தைக் கூறியதும், அவர்கள் வெடிச்சிரிப்புச் சிரித்தனர்.

உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, ஓர் ஏழ்
மலையை வேரோடும் வாங்க அன்று, அங்கையால் வாரி
அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, அழைத்தது; மலரோடு
இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல், எம்மை?

இராவணா நீ எங்களைக் கூப்பிட்டது உலகை ஆதிசேடனின் தலைமேல் இருந்து எடுக்கவோ, ஏழு மலைகளை வேரோடு பிடுங்கி எறியவோ, கடலை உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவோ என்று பார்த்தால் போயும் போயும் மலர்களோடு இலைகளைத் தின்னும் குரங்குகளைக் கொல்லச்சொல்கிறாயே என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர்.

அதன்பிறகு இராவணன் இராம, இலட்சுமணர்களின் வீரத்தைப் பற்றியும் அனுமன் முதலிய வானரர்களின் வலிமையைப் பற்றியும் விளக்கிக்கூற அவர்கள் போருக்குப் புறப்பட்டனர். அந்தச் சேனா வீரர்களிடம் நீங்கள் இராம, இலட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று கூறி இராவணனும் போருக்குப் புறப்பட்டான்.

போர்க்களத்தில் நிகழ்ந்தது என்ன? நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: கவந்தம் ஆடிய கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply