அண்ணா என் உடைமைப் பொருள் (43): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (5)

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 5
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 43
பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை, தீண்டத் தகாதவர்கள்(5)
– வேதா டி. ஸ்ரீதரன் –

பெரியவா-காந்தி சந்திப்பின் போது பெரியவா தெரிவித்த சில கருத்துகளைப் பார்க்கலாம்.

– பாரதப் பண்பாடு மிகத் தொன்மையானது. இதன் கல்வியும் மனித ஒழுக்கமும் மேம்பட்டவை. இதற்கு முக்கியக் காரணம் இந்த தேசத்தின் வர்ணப் பாகுபாடே.

– அனைவருக்கும் பொதுவான கடமைகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவினகுக்குமான விசேஷ கடமைகளும் உள்ளன. இவற்றை அவர்கள் முறையே கடைப்பிடிப்பது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கு நன்மை தரும்.

– சாதாரணத் தண்ணீருக்கு இருக்கும் குணம் வேறு. வெந்நீரின் குணம் வேறு. இரண்டையும் கலந்தால் அவற்றின் குணங்கள் போய் விடும், அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. வர்ணக் கலப்பும் அத்தகையதே.

– ஒரு மா மரம் உள்ளது. அதில் பல்வேறு கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளையிலும் ஒவ்வொரு சமயத்தில் பூக்கள் உற்பத்தியாகின்றன. காய்களும் அப்படியே. ஆனால், மரம் என்னவோ ஒன்று தான். அதேபோலத் தான் ஜன சமுதாயமும். பல்வேறு பிரிவுகளும் ஒரே சமுதாயத்தின் அங்கங்களே.

– இயற்கையாக உருவாகி வளர்ந்த வழிபாட்டு முறைகளைத் தலைகீழாக மாற்றுவது சமுதாய வாழ்க்கைக்குக் கேடு விளைவிக்கும்.

– அரசியல்வாதிகள் மத விஷயங்களிலும், சமுதாய விஷயங்களிலும் தலையிடுவதாலேயே நமது மதம் பலவீனமாயிற்று.

– ஆதிகாலம் தொட்டு நம் தேசத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கங்கள், தூய்மை குறித்த கட்டுப்பாடுகள் முதலியவை நமது சமுதாயத்துக்கு உதவியாக இருந்தன. இந்தக் கட்டுப்பாடுகளைத் தற்போது சிலர் தோஷம் என்று நினைக்கிறார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் எந்த ஒரு ஜாதியையும் உயர்ந்தது என்றோ, இன்னொன்றைத் தாழ்ந்தது என்றோ சொல்வதில்லை. கட்டுப்பாடுகளை விட்டுவிட்டால் சமுதாயம் ஒரு பிரயோஜனமும் அடையாது வீணாகி விடும்.

– சாஸ்திரப் பிரமாணங்கள் மீதும் சனாதன தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ஜனங்களுக்குக் கஷ்டம் கொடுப்பதும் அகிம்சைக்கு விரோதமான போக்கே.

– ஆலயங்கள் புனிதமானவை என்றும் கர்ப்பகிருகத்தில் கடவுள் இருக்கிறார் என்றும் நம்புகிறவர்களுக்காக ஆலயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆலயத்தின் தூய்மை பற்றி ஆகம சாஸ்திரங்கள் மிகவும் உயர்வாகப் பேசியுள்ளன. இத்தகைய சாஸ்திரங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும், தூய்மைக் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும் ஆலயப் பிரவேசத்துக்கு அருகதை இல்லாதவர்களே.

இவையே காந்திஜியிடம் பெரியவா தெரிவித்த முக்கிய கருத்துகள்.


நான் சிறு வயதில் பார்த்த மடி-ஆசாரங்கள் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் உள்ளன. எங்கள் பாட்டி மடியாக் சமையல் பண்ணுவாள். சமையல் முடிவதற்கு முன் அவளை நாங்கள் தொட்டு விட்டால் தீட்டு.

இது தீண்டாமையா?

எங்கள் தாத்தா மடித்துணி உடுத்திக் கொண்டு பூஜை பண்ணுவார். பூஜை முடிவதற்குள் அவர் மீது நாங்கள் பட்டு விட்டால் தீட்டு.

இது தீண்டாமையா?

சாப்பிட்ட இடத்தைப் பசுஞ்சாணி கொண்டு துடைப்பது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளும் செயலா?

இதுபோல ஏராளமான சின்னச் சின்ன விஷயங்கள் உண்டு.

பெரியவா சொல்லும் ஆசாரங்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே.


நான் பார்த்தவை 1970களில் இருந்த அக்கிரகாரப் பழக்கங்கள்.

இத்தகைய ஆசாரங்கள் குறித்து அண்ணா ஒரு விஷயம் கூறினார். அது 1940-50களின் நிலை பற்றியது.

mahaperiyava2 - 3

‘‘குடும்பத்தில் இருபது, முப்பது பேர் இருப்பார்கள். வருமானம் என்னவோ மாசம் பதினைந்து, இருபது ரூபாய் கூட இருக்காது. இந்த வருமானத்துக்குள் அவர்கள் எளிமையான விதத்தில் குடித்தனம் நடத்தினார்கள். எந்தவித ஆசார அனுஷ்டானங்களையும், விரதங்களையும், பண்டிகைகளையும், இதர கர்மாக்களையும் விட்டு விடாமல் அனைத்தையும் முறையாகக் கடைப்பிடித்து வாழ்ந்தார்கள். நான் பார்த்தது முழுமையான பிராமண வாழ்க்கை அல்ல – fag end of it. உன் காலத்தில் நீ இதைக் கூடப் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.’’

இந்த எளிமையும் மன நிறைவும் தற்காலத்தில் எங்கே போயின?

இதற்கு யார் காரணம்?


இவற்றை எல்லாம் புரிந்து கொண்ட போது, உண்மையில், பெரியவா சொன்னது எதுவும் தீண்டாமை அல்ல, அந்த ஆசார விஷயங்கள் அனைத்தும் ஓர் ஒழுங்குக்கு உட்பட்ட வாழ்க்கை முறையை மட்டுமே என்பது புரிகிறது.

‘‘ஆத்மவத் ஸர்வபூதாநி ய:பச்யதி ஸ பச்யதி என்று சொல்லி இருப்பதை எல்லோரும் கடைப்பிடிப்போம். நம்மை எவ்வாறு பார்க்கிறோமோ, அதேபோலப் பிறரையும் பாவிப்போம். இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து அனைவரையும் உண்மையாக நேசிப்போம். பிறரது ஜாதியையோ சமுதாய அந்தஸ்தையோ பொருட்படுத்தாமல், கஷ்டத்தில் இருக்கும் ஜனங்களை நாமாகவே தேடிப் போய் அவர்களுக்கு சேவை பண்ணுவோம். அதேநேரத்தில் நமக்கான ஆசாரங்களையும் முழுமையாகக் கடைப்பிடிப்போம். இத்தகைய வாழ்க்கை முறை நமக்குள் எந்த மன மாசுகளும் ஏற்படாமல் பாதுகாக்கும், போட்டி பொறாமைகளை அகற்றும், தற்போதைய சமுதாயத்தில் காணப்படும் தீங்குகளுக்கான ஒரே நிவாரணம் இது தான்.’’

– இது தான் பெரியவா சொன்னது.

நியமங்கள் அனைத்துக்கும் அடி நாதமாக இருப்பது அன்பு அல்லவா?


‘‘வேற்றுமையில் ஒற்றுமை, வேற்றுமையில் ஒற்றுமை’’ என்று நம் பண்பாட்டைப் பற்றிப் பேசுகிறோம்.

ஆனால், உண்மையில் இது, ஒன்றே பலப்பலவாகக் கிளைத்த மரம் போன்றது.

உருவமோ, குணமோ இல்லாத பரம்பொருள் எவ்வாறு நானாவித ஜட சேதனப் பொருட்களால் உருவான பிரபஞ்சமாகப் பரிணமிக்கிறதோ, அதுபோலவே தான் ஹிந்து மதமும் இருக்கிறது.

ஹிந்து மதத்தின் பல்வேறு பிரிவுகள், அவற்றின் உட்பிரிவுகள், ஒன்றுக்கொன்று வேறுபட்டுத் திகழும் விதவிதமான ஜனக் கூட்டங்கள்

– இவை அனைத்துக்கும் ஆணி வேராகத் திகழ்வது தர்மம் என்கிற தத்துவமே.

anna alias ra ganapathy9 - 4

அது சனாதனமானது – அதாவது, என்றும் இருப்பது. எனவே தான், ஹிந்து மதத்தை சனாதன தர்மம் என்கிறார்கள்.

தர்மம் என்கிற அந்த அடிப்படைத் தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

தர்மத்தை நமக்குப் புரிய வைக்கும் விதத்தில் அன்றாட நியமங்கள், கடமைகள் முதலான வடிவங்களில் விளக்குபவையே சாஸ்திரங்கள்.

இவற்றை நமக்குத் தந்தவர்கள் மகரிஷிகள். நம்முடைய புலன்களுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்ட ஆற்றல் அவர்களுக்கு இருந்தது. மேலும், அவர்கள் சுயநலத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்த இரு காரணங்களால், அவர்கள் தான் நமக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருக்க முடியும்.

ரிஷிகள் நமக்குத் தந்த விஷயங்களையே நாம் சாஸ்திரம் என்று அழைக்கிறோம்.

இந்த சாஸ்திரங்களின் பல்வேறு அம்சங்களையே நியமங்கள், ஆசாரங்கள் முதலியவற்றின் மூலமும், பல்வேறு உதாரணங்களின் மூலமும் வெவ்வேறு கோணங்களில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் பெரியவா விளக்கி இருக்கிறார்.

அவற்றின் தொகுப்பு தான் தெய்வத்தின் குரல்.

தெய்வத்தின் குரல் என்பது தர்மத்தின் குரல்.

‘‘சாஸ்திரம், தர்மம் முதலியவற்றை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதேநேரத்தில், பெரியவா எவ்வாறு நடந்து கொண்டார், என்ன சொல்லி இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. அது தான் தர்மத்துக்கான விளக்கம். ஏனெனில், பெரியவா தர்மத்துக்குப் புறம்பாக எந்தச் செயலும் செய்ததும் இல்லை, எந்தக் கருத்தையும் மொழிந்ததும் இல்லை.’’

– பெரியவா பற்றி அண்ணா அடிக்கடி சொல்லும் கருத்து இது.

அண்ணா என் உடைமைப் பொருள் (43): பெரியவா பார்வையில் ஆசாரம், ஜாதி, தீண்டாமை (5) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply