பிறந்த மாயா ! பாரதம் பொருதமாயா!!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

e0aeaae0aebfe0aeb1e0aea8e0af8de0aea4 e0aeaee0aebee0aeafe0aebe e0aeaae0aebee0aeb0e0aea4e0aeaee0af8d e0aeaae0af8ae0aeb0e0af81e0aea4

thirukkovilur perumal
thirukkovilur perumal
thirukkovilur perumal

ஆச்சரியமாக வையம் என்ற தகளியிலும், குணங்களில் சிறந்த முக்கியமான அன்பு என்ற தகளியிலும் விளக்கேற்றினர் முதல் இரண்டு ஆழ்வார்கள், திருக்கோவிலூர் என்ற திவ்யதேசத்தில். மூன்றாவது ஆழ்வார்  விளக்கொளியில் ஆச்சரியமாக திருக்கண்டேன் என்று மஹாலக்ஷ்மியுடன் கூடிய திருமாலை தரிசனம் செய்தார்.  இதே போல் பொய்கை ஆழ்வாரும் ஆச்சரியமாக அவர் கண்ட தரிசனத்தை பின் வருமாறு பாடியுள்ளார்.

பொய்கையாழ்வார் தனது முதல் திருவந்தாதியில் ,  பஞ்ச க்ஷேத்திரத்தில் ஒன்றான திருக்கோவிலூர் ஆயனுக்காக மங்களாசாசனம் செய்த பாடல்.

நீயும் திருமகளும் நின்றாயால்,*  குன்றுஎடுத்துப்-
பாயும்*  பனிமறுத்த பண்பாளா,* – வாசல்-
கடைகழியா உள்புகா*  காமர்பூங் கோவல்*
இடைகழியே பற்றி இனி

“நீயும் திருமகளும் நின்று”  என்று பொய்கை ஆழ்வாரும் தாயாருடன் சேர்ந்த பெருமாளைத் தரிசனம் செய்கிறார்.
“ குன்று எடுத்துப் பாயும் பனி மறுத்த பண்பாளா  வாசல் கடைகழியா உள்புகா காமர் பூங் கோவல் இடைகழியே பற்றி இனி” என்று திருக்கோவிலூர் இடைகழியன் என்ற கோவலன் , ஆயர்பாடியில் கல்மழையைத் தடுக்க  கோவர்த்தன மலையைக் கையிலெடுத்து ஆயர்களுடன் ஆய்ச்சியர்களுடன், ஆநிரைகளுடன் இடையில் நெருங்கி நின்றது போல், திருக்கோவிலூர் இடைகழியில் நின்று காட்சியளிக்கும் ஆச்சரியமான குணத்தைப் பற்றி  அற்புதமாக விளக்கியுள்ளார்.

கண்ணன் ஒரு பண்பாளன் என்று கூறும் பொழுது, அவன் எண்ணிலடங்கா குணங்கள் பொருந்தியவன் என்று அறியமுடிகிறது. அனைத்து ஆயர்பாடி ஜீவன்களைக் காப்பாற்றச் செய்த செயலின் மூலம் அவனுடைய அன்பு, கருணை, உதவும் தன்மை,எளிமை, பணிவு, வீரம், பெருமை, வலிமை போன்ற எண்ணற்ற குணங்களை வெளிப்படுத்திக் குன்று எடுத்து நின்றான் என்று புலப்படுகிறது.

இவ்வாறு அவதரித்த கண்ணனை, நம்மாழ்வார் “பிறந்த மாயா! பாரதம் பொருத மாயா! என்று அழைக்கிறார்.

மாயா என்பதற்கு நிகண்டு படி “  உண்மை போல் தோன்றும் பொய் தோற்றம்” . சிறந்த எடுத்துக்காட்டு “ கானல் நீர்”. கானல் நீர் தோற்றம் என்பது எண்ணத்தில் ஒரு நிமிடம் நீர் போலத் தோன்றியது என்பது உண்மை. எண்ணங்கள் இன்றைய விஞ்ஞான உலகில் பல படைப்புகளை உருவாக்கி அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் ஏற்படுத்தியுள்ளது என்பதும் உண்மை.

nammalwar
nammalwar

ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படும் மாயா, மாயை , மாயன் என்ற சொல்லுக்கு “ஆச்சரியம்” (அ) “ வியக்கத்தக்க” என்று பொருள்படும் படி அமைந்துள்ளது. ஆழ்வார்களின் வார்த்தைகளைக் கொண்டு ஶ்ரீராமானுஜர் பிரம்ம சூத்திரத்திற்கு உரை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சம் என்பது ஆச்சரியம், காணப்படும் பொருள்கள் அனைத்தும் ஆச்சரியம், ஒவ்வொரு ஜீவனிடம் நிலவும் குணங்கள்  என்பது ஆச்சரியம்.  இவற்றை மாயா ( அ)  பொய் தோற்றம் என்று சொல்லுவது பொய் என்றே தோன்றுகிறது.

அடியேனுடைய ஊர் எம்பெருமானை நம்மாழ்வார் “மகர நெடுங்குழைக்காதன் மாயன்”  என்று மங்களாசாசனம் செய்துள்ளார். ஆச்சரியமாக நீண்ட காதுகளை உடைய, மகர குண்டலங்களை அணிந்த எம்பெருமான் என்று பொருள் . இங்குப் பொய் (அ) இல்லை என்ற பொருள் கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பதை அறிய முடிகிறது.

ஆண்டாள் திருப்பாவையில் “ மாயனை மன்னு வடமதுரை மைந்தனை” என்றும், “மாமாயன் மாதவன் வைகுந்தம்” என்றும், “ மாற்றாரை மாற்றழிக்க வல்லானை மாயனை பாடேலோ” என்றும் “ மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்” என்றும் பாடியுள்ளார்.  இங்கும் மாயன் என்பதற்குப் பொய் (அ) இல்லை என்ற பொருள் கொள்ள முடியாது,  அப்படிப் பொய் என்றால் கண்ணனுடைய அவதாரம் என்பதே பொய் (அ) இல்லை என்ற நாத்திகவாதம் நிலவிவிடும். பரமபதத்தில் இருக்கும் பரவாஸுதேவன்,  கண்ணன் எம்பெருமானாக ஆய்ப்பாடியில் ஆச்சரியமாக அவதரித்து, ஆச்சரியமாகப் பல விளையாட்டுகளைச் செய்து, பாரதம் பொருத மாயா என்ற ஆச்சரியமான வியக்கத்தக்கப் பாரதப் போர் செய்தவனை மாமாயன் என்று அழைக்கிறார்.

makaranedunkulaikathar
makaranedunkulaikathar

பெரியாழ்வார் தனது திருமொழியில்
“ மாயன் என்று மகிழ்ந்தனர்‌ மாதரே”
“ மாயவனை மதுசூதனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்”  என்றும்
“ உன் திறத்து எத்தனையும் புகா வண்ணம் நிற்பதோர் மாயை வில்லை”
“ நானேதும் உன் மாயம் ஒன்று அறியேன்”
“  வானேய் வானவர் தங்கள் ஈசா மதுரை பிறந்த மாமாயனே”
“ மாணிக் குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே “  
“ ஓடி வந்து என் மனக் கடலில் வாழ்வல்ல மாய மணாள நம்பி”-
என்று மங்களாசாசனம் செய்துள்ளார்.‌

பொய்(அ) இல்லை என்று பொருள் கொண்டால், வேதத்தில் சொல்லப்பட்ட பிரம்மம் என்பது பொய்த்து விடும். இல்லாத ஒன்றை, பொய்யான ஒன்றை ஏன் பெருமை ஏற்ற போற்ற வேண்டும்,  அறிய வேண்டும் , மனத்துக்குள் நிறுத்த வேண்டும்.

வேதங்களில் கோடிக்கும் ஆச்சரியமான எம்பெருமான் இங்கு அவதரித்து, பல லீலைகளை வியக்கத்தக்க அளவில் நடத்திய எம்பெருமானைப் போற்றி, அறிந்து, மனதில் நிறுத்த வேண்டும் என்பது ஆழ்வார் திருவுள்ளம்.

“குன்றினால் குடை கவித்ததும் கோலக் குறவை கோத்ததும் குடமாட்டும்
கன்றினால் விளவெறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்தும் முதலா
வென்றி சேர் பிள்ளை நல்விளையாட்டம் அனைத்திலும்
அங்கு என்னுள்ளம் உள் குளிர”

அண்ணல் ராமானுஜர் இவ்வாறாக ஆழ்வார்களின் திருவுள்ள வார்த்தைகளைப் பற்றி கொண்டு “விசிஷ்டாத்வைதம்”  அதாவது “சேதன அசேதனங்களுடன் கூடிய பிரம்மம் ஒன்று” என்ற அருமையான ஆச்சரியமான  தத்துவத்தை உருவாக்கினார். 

  • மகர சடகோபன், தென்திருப்பேரை

பிறந்த மாயா ! பாரதம் பொருதமாயா!! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply