அண்ணா என் உடைமைப் பொருள்(49): அரசும் மதமும்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 3
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 49
அரசும் மதமும்
– வேதா டி.ஸ்ரீதரன் –

தெய்வத்தின் குரம் ஏழாம் பகுதியில் இரண்டு அத்தியாயங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதில் பெண்மை அத்தியாயம் பற்றிய சில தகவல்களையும் கூறி இருந்தேன்.

இரண்டாவது அத்தியாயம், அரசும் மதமும்.

நம் நாட்டில் மதச்சார்பின்மையைக் கட்டிக் காப்பதற்காகவே பிறந்தவர்கள் ஏராளம். பெண்களின் விடுதலைக்காகப் பாடுபடுபவர்களை விட இவர்களது எண்ணிக்கை அதிகம். இவர்கள் குரலுக்கு டெசிபல் வேல்யூவும் அதிகம்.

அரசும் மதமும் அத்தியாயம் இவர்களது வாய்க்கு அவல் போடுவது போன்று அமைந்துள்ளது

தெய்வத்தின் குரம் ஏழாம் பகுதி வெளியானதும், இந்த அத்தியாயம் பற்றிய விவாதங்கள் மீடியாவை ஆக்கிரமிக்கும், ஓரிரு மாதங்களாவது பெரியவாளுக்கு அர்ச்சனை நடக்கும் என்று நான் நம்பினேன்.

ஆனால், இதில் உள்ள கருத்துகள் பற்றி ஒரே ஒரு எதிர்ப்புக் குரல் கூட எழவில்லை.


mahaperiyava
mahaperiyava

1947-ல் சுதந்திர பாரதத்துக்குப் பெரியவா இரண்டு ஶ்ரீமுகங்கள் அளித்தார். முதலாவது ஶ்ரீமுகம் பொதுமக்களுக்கானது. இரண்டாவது ஶ்ரீமுகம் ஆட்சியாளர்களுக்கானது.

முதலாவது ஶ்ரீமுகம் பத்திரிகைகளில் வெளியானது. கல்கியிலும் வெளிவந்திருந்தது.

இரண்டாவது ஶ்ரீமுகம் ‘‘ஒரு தலைவருக்கு’’ப் பிடிக்காது என்பதால் வெளியிடப்படவில்லை. பெரியவா இதுபோன்ற ஒரு ஶ்ரீமுகம் அளித்திருக்கிறார் என்ற தகவல்கூட யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.

கல்கியில் 1947 ஆம் ஆண்டு வெளியான ஶ்ரீமுகத்தை 1972 ம் ஆண்டு மீண்டும் பிரசுரிக்க விரும்பினார்கள். இதற்காக அண்ணா பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தார்.

அப்போது பெரியவா புதியதாக ஒரு ஶ்ரீமுகம் டிக்டேட் பண்ணினார். இது, 1947-ன் இரண்டு ஶ்ரீமுகக் கருத்துகளையும் உள்ளடக்கியது.

எனினும், இந்தப் புதிய ஶ்ரீமுகத்தைத் தமது ஜீவிய காலம் முடிந்த பின்னர் வெளியிடுமாறு பெரியவா கூறி விட்டார். எனவே, இது கல்கியில் வெளியாகவில்லை.

பெரியவா காலத்துக்குப் பின்னர் தெய்வத்தின் குரல் ஏழாம் பகுதியில் தான் இது முழு வடிவில் வெளியானது.

இதை 1947 ஶ்ரீமுகம் என்று வைத்துக் கொள்வதும் 1972 ஶ்ரீமுகம் என்று வைத்துக் கொள்வதும் அவரவர் விருப்பம். எப்படி இருந்தாலும், இதில் உள்ள விஷயங்கள் சுதந்திர இந்தியாவில் சட்டத்தைத் தீர்மானிக்கும் நிலையில் இருப்பவர்களுக்காகப் பெரியவா விடுத்துள்ள செய்தி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


செக்யூலரிசம் என்றால் என்ன, மத மாற்றம் என்றால் என்ன, மத மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டும், சேவை என்ற போர்வையில் நடைபெறும் மத மாற்றம், மாற்று மதத்துக்குப் போனவர்கள் மீண்டும் ஹிந்து மதம் திரும்புவதை ஊக்குவிக்க வேண்டிய அவசியம், பொது சிவில் சட்டம் முதலான பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பெரியவா இதில் குறிப்பிட்டுள்ளார்.

periyava-namavali
periyava-namavali

குறிப்பாக,

  • சேவை என்ற பெயரில் பயனாளிகள் மனதில் ஒருவித நன்றி உணர்ச்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் மத மாற்றம் செய்வதைக் கற்பழிப்புக்கு இணையான குற்றமாகப் பார்க்க வேண்டும், கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த தண்டனை மிகமிகக் கடுமையானதாக இருக்க வேண்டியது அவசியம். தண்டனையை நினைத்துப் பார்ப்பதால் மனதில் ஏற்படும் அச்ச உணர்வு, ஒருவனை, இக்குற்றத்தில் ஈடுபடாமல் தடுக்கும் என்கிற அளவு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
  • ஹிந்து மதம் தான் இந்த நாட்டின் பூர்விக மதம். எனவே, ஹிந்து மதம் தான் இந்தியாவின் அரசு மதமாக இருக்க வேண்டும்.
  • அரசியல் சுதந்திரத்துக்காகப் போராடியது போலவே, மக்கள், ஆன்மிக சுதந்திரத்துக்காகப் பெரிய அளவில் போராட வேண்டும் என்றும் பெரியவா அறைகூவல் விடுக்கிறார்.

*

இந்தியாவின் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஆதியில் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் பலர் மீண்டும் ஹிந்துக்களாக மதம் மாறுவதும் இயல்பாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் ஹிந்து மதத்துக்குத் திரும்புவதைப் பெரியவா ஆதரிக்கவில்லை. அவரவர் மதத்துக்கு ஏற்ற ஆசரணைகளை முறையாகக் கடைப்பிடித்தால் போதுமானது என்றே அவர் சொல்வதுண்டு.

ஆனால், இந்த ஶ்ரீமுகத்தில் பெரியவா அவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்புவதை ஆதரித்துப் பேசி இருக்கிறார்.

இதைக் குறிப்பிட்ட ஓர் அன்பர், பெரியவாளின் நிலைப்பாட்டில் இதுபோன்ற முரண்பாடு காணப்படுகிறதே, இதை விளக்க முடியுமா என்று கேட்டார்.

இதை யாரும் விளக்க வேண்டியதே இல்லை. இந்த ஶ்ரீமுகத்தின் தொடக்கத்தில், பெரியவாளே, இதை விளக்கி இருக்கிறார். இந்த ஶ்ரீமுகம் சாஸ்திரக் கருத்து அல்ல என்றும் தற்போதைய சூழலில் மத விஷயங்களில் அரசாங்கம் போடும் சட்டங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் மட்டுமே என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிந்து மதத்தின் பாரம்பரியம் மிக்க பீடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயத்தின் சார்பிலும் அவர் இந்தக் கருத்துகளை முன் வைத்துள்ளார்.


இந்த ஶ்ரீமுகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழிநடை ரொம்பவே குறிப்பிடத்தக்கது.

பெரியவாளின் உரைகள் கருத்தாழம் மிக்கவை. எனினும், அவரது வாக்கியங்கள் மிகவும் எளிமையாகவே அமைந்திருக்கும். ஆனால், இந்த ஶ்ரீமுகத்தின் மொழிநடை மிகவும் கடினமாக அமைந்துள்ளது. தான் சொல்ல வரும் கருத்தைக் கொஞ்சம் கூட மாற்றிப் பொருள் கொண்டுவிட முடியாத அளவு மிகக் கடினமான அளவில் வாக்கியங்களை அமைத்துள்ளார், பெரியவா.

ஒருவகையில் பார்த்தால், இது சட்டத் துறையில் இருப்பவர்கள் பயன்படுத்துவதைப் போன்ற மொழிநடை.

பெரியவா இத்தகைய மொழிநடையைக் கையாள்வதே இல்லை.

இத்தகைய வாக்கியங்களை ஒருவர் பயன்படுத்துவது, என்னைப் பொறுத்த வரை, எழுத்து நடையில் மட்டுமே சாத்தியம். எழுதி, அடித்துத் திருத்தி, மீண்டும் படித்துப் பார்த்துச் சரிசெய்து…. என்று உருவாக்கப்பட வேண்டிய வகையைச் சேர்ந்தது இத்தகைய எழுத்து நடை.

ஆனால், பெரியவா எந்தவித முன்தயாரிப்பும் இல்லாமல், மளமளவென்று டிக்டேட் பண்ணி இருக்கிறார். அண்ணாவால் அதே வேகத்தில் அதை எழுதிக் கொள்ள முடியவில்லை.

இந்தச் செய்தி எனக்குப் பெரு வியப்பைத் தந்தது.

அதன்பிறகு தெய்வத்தின் குரலை அவ்வப்போது படிக்கும் போது பெரியவாளின் மொழிநடையைக் கூர்ந்து கவனிக்க முயற்சி செய்திருக்கிறேன்.

mahaperiyava drawing vijayashree
mahaperiyava drawing vijayashree

ஆம், எத்தனை எத்தனை விஷயங்கள் அவர் வாயிலிருந்து அடுக்கடுக்காக வந்து விழுகின்றன!

மளமளவென்று வேகமாகப் பேசும் போது, ஒரு மனிதர், இத்தனை விஷயங்களையும் இவ்வளவு கோவையாகச் சொல்ல வேண்டுமென்றால், அதற்கு அசாத்திய முன் தயாரிப்பு தேவை. அவ்வாறு தயாரிக்கப்பட்ட உரையை மனப்பாடம் பண்ண வேண்டியதும் அவசியம்.

ஊஹூம், பெரியவா இதுபோல ஒருநாளும் தனக்கான உரைகளைத் தயார் செய்வது கிடையாது.

இது எனக்குப் பெரிய அதிசயமாகத் தெரிந்தது.

ஓர் அன்பரிடம் இதைப் பற்றிக் குறிப்பிட்டேன். அவர், பர்த்ருஹரியின் சுலோகம் ஒன்றை விளக்கினார். ‘‘நம்மைப் போன்ற சாமானியர்களுக்குப் பொருளின் பின்னே வார்த்தைகள் செல்லும். மகான்களின் வார்த்தைகளுக்குப் பின்னே பொருள் கை கட்டியவாறு பின்தொடரும்’’ என்பதே அந்த சுலோகத்தின் விளக்கம்.


பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் அத்தியாயத்தைப் போலவே, இந்த அத்தியாயமும் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

இந்த ஶ்ரீமுகக் கருத்துகள் மக்களைப் பெருமளவு சென்றடைய வேண்டும் என்று நான் விரும்பினேன். அதேநேரத்தில், இந்த ஶ்ரீமுகத்தில் பெரிவயாளின் மொழிநடை மிகவும் கடினமாக இருப்பதால், தற்காலத்திய இளைய சமுதாயத்தினரால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணமும் தோன்றியது. அந்த மொழிநடையை நான் எளிமைப் படுத்தினால், அன்பர்கள் யாருக்காவது மன வருத்தம் ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

நீண்ட தயக்கத்துக்குப் பின், ஓர் அன்பரிடம் எனது ஆவலையும், எனக்கு ஏற்படும் அச்சத்தையும் பற்றிக் குறிப்பிட்டு, நான் என்ன செய்வது என்று அவரது ஆலோசனையைக் கேட்டேன்.

நான் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர், அப்போது தான், நயப்பாக்கம் கோவிலில் யோக நிஷ்டையில் இருக்கும் பெரியவாளை தரிசித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். ‘‘எனக்கென்னவோ, பெரியவா கிட்டேர்ந்து உத்தரவாறதுன்னு தோணறதுப்பா. சந்தோஷமா பண்ணு’’ என்று அவர் சொன்னதைத் தொடர்ந்து, எனது தயக்கம் அகன்றது.

ஶ்ரீமுகத்தின் எளிய வடிவத்தை சமூக வலைத்தளங்கள் மூலமாக நிறைய பேரிடம் பகிர்ந்து கொண்டேன். அதைத் தொடர்ந்து, அதை ஒரு சிறிய நூலாகவும் அச்சிட்டுள்ளேன்.

சில அன்பர்கள் உதவியுடன் அதன் ஆங்கில வடிவத்தையும் தயாரித்துள்ளேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வடிவங்களையும் இங்கே படிக்கலாம்…

புத்தக வடிவில் (தமிழ் மட்டுமே) வாசிக்க விரும்புவோர் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம்.

அண்ணா என் உடைமைப் பொருள்(49): அரசும் மதமும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *