அண்ணா என் உடைமைப் பொருள் (51): ஞானிக்கு வலி உண்டா?

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 5
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 51
ஞானிக்கு வலி உண்டா?
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணா ஒல்லியானவர், இள வயதில் பல வருடங்கள் நுரையீரல் பாதிப்பால் அவஸ்தைப்பட்டவர்.

வாழ்க்கையில் அவர் உணவருந்திய நாட்களை விட உபவாசம் இருந்த நாட்கள் அதிகம். மௌனமும் அப்படியே. வாரத்தில் நான்கு நாட்கள் மௌன விரதம் இருப்பார். இதைத்தவிர, ஒவ்வொரு வருடமும் ஒரு மாதம் தனிமையில் மௌன விரதம் இருப்பார்.

அண்ணாவின் அப்பா காலம் முடிந்த பின்னர், ஒருமுறை, அவரது அம்மா வெளியூர் போக வேண்டி இருந்தது. பையன் சிரமப்படாமல் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு பொடி வகைகள் முதலியவற்றைத் தயார் செய்து வைத்து விட்டு அவர் ஊருக்குக் கிளம்பினார். 48 நாட்களுக்குப் பின்னர் ஊரில் இருந்து திரும்பி வந்து பார்த்தால், அனைத்துப் பொருட்களும் அப்படியே இருந்தன. அண்ணா சமையலே பண்ணவில்லை.

‘‘சாப்பிடவே இல்லையா?’’ என்று அம்மா கேட்டாரம். அதற்கு அண்ணா, ‘‘தண்ணீர் சாப்பிட்டேன். போதுமாக இருந்தது’’ என்று சொன்னாராம். அண்ணா இதை என்னிடம் தெரிவித்தபோது, நான், ‘‘நீங்க சாப்பிடலேன்னு அம்மா வருத்தப்படலியா?’’ என்று கேட்டேன். ‘‘இல்லை. அம்மாவும் இதுபோல நிறைய நாட்கள் உபவாசம் இருப்பதுண்டு. அதனால் அவளுக்கு இது வித்தியாசமாகத் தெரியவில்லை’’ என்று குறிப்பிட்டார்.

அவரது கடைசி பத்தாண்டுகள் மட்டுமே உபவாசமும் இல்லை, மௌனமும் இல்லை. அந்த நாட்களிலும் அவர் குறைந்த அளவு உணவு மட்டுமே உட்கொண்டார். மௌனத்துக்குப் பதிலாக மந்திர ஜபத்தில் இருப்பார். ஏதாவது வேலை, உறக்கம் முதலான சந்தர்ப்பங்கள் தவிர, மீதி நேரம் முழுவதும் மந்திர ஜபம் தான். அவரது கடைசி வருடங்கள் பெரும்பாலும் படுக்கையில் தான் கழிந்தன. எனவே, படுத்த நிலையிலேயே மந்திர ஜபம் பண்ணுவார். உள்ளே மந்திரம் ஓடும் வேகத்துக்கு ஏற்ப அவரது தலை இருபுறமும் அசையும்.

‘‘ஆரம்ப நாட்களில் பெரியவாளே மந்திர தீக்ஷை கொடுப்பதுண்டு. சில வருடங்களுக்குப் பின்னர், பெரியவா முன்னிலையில் மடத்து மானேஜர் தான் மந்திர உபதேசம் பண்ணி வைப்பார்’’ என்று ஒருமுறை அண்ணா என்னிடம் தெரிவித்தார். அப்போது நான் அவரிடம், ‘‘உங்களுக்கு எப்படி, அண்ணா? பெரியவாளே மந்திரம் கொடுத்தாரா, மானேஜரா?’’ என்று கேட்டேன். ‘‘பெரியவா தான்’’ என்று சொன்ன அண்ணா, சற்று நிதானித்து, ‘‘கனவில் கொடுத்தார்’’ என்று கூறினார்.

anna alias ra ganapathy8 1 - 3

அண்ணாவுக்குப் பெரியவா மந்திர உபதேசம் பண்ணவில்லை என்றே அன்பர்கள் பலரும் நம்புகிறார்கள். ஆனால், அண்ணாவே என்னிடம் தெரிவித்த தகவல் இது. மேலும், எனக்குத் தெரிந்த வகையில், அனேகமாக, பெரியவா, அண்ணாவுக்கு மட்டுமே கனவில் மந்திர உபதேசம் செய்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

*

கடைசி வருடங்களில் அண்ணா வயிற்று உபாதையால் அவதிப்பட்டார். தாள முடியாத வயிற்று வலி. டாக்டர்கள் ஏதேதோ வியாதிக்கு மருந்து கொடுத்தார்கள். அலோபதி மருத்துவர்கள் தவிர, ஆயுர்வேத, ஹோமியோ மருத்துவர்களிடமும் மருந்து வாங்கிச் சாப்பிட்டார். சும்மா சொல்லக் கூடாது, எந்த டாக்டர் பேச்சையும் அண்ணா மீறவில்லை. அனைத்து மருத்துவர்கள் கொடுத்த அனைத்து மருந்து மாத்திரைகளையும் சளைக்காமல் சாப்பிட்டார்.

ஒருமுறை டாக்டர் குமரேஷ் (யோகியார் அன்பர்) சக்திவேலிடம், ‘‘அவருக்கு உடம்புக்கு ஒண்ணுமே இல்லை. வயிறு ஒட்டி விட்டது. அவரைச் சாப்பிடச் சொல்லுப்பா’’ என்று கூறினார். ‘‘அதை நீங்களே சொல்லுங்க டாக்டர்’’ என்று சக்திவேல் சொன்னார். அதன்பிறகு, அந்த மருத்துவர் மருந்து மாத்திரை கொடுப்பதுடன் நிறுத்திக் கொண்டார்.

கடைசி வருடங்களில் நான் ஓரிரு மாதங்களுக்கு ஒரு தடவை தான் அண்ணாவைப் பார்க்கப் போவதுண்டு. ஒவ்வொரு தடவையும் என்னிடம் அண்ணா தனது வயிற்று வலியைப் பற்றிக் கூறுவார். ‘‘வயித்து வலி தாங்க முடியல. வயித்து மேல லாரி நிக்கறா மாதிரி பாரமா அழுத்தறது’’ என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார். எனக்கும் சிரிப்பு தான் வரும்.

வயிற்று வலி ஒருபுறம் இருக்கட்டும், நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருக்கும் மனிதருக்கு உடல் வலி எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை யாருமே எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

anna alias ra ganapathy3 - 4

ஆனால், அண்ணாவின் முகம் அன்றலர்ந்த தாமரை போல இருக்கும்.

கடைசி நாட்களில் பாத்ரூம் போவதற்குக் கூட அவரைத் தூக்கிக் கொண்டு போக வேண்டி இருந்தது. உட்காருவதற்கும் சிரமப்பட்டார். ஆனால், அப்போதும் அவரது முகம் மலர்ச்சியாகவே இருந்தது.

ஒருமுறை ஒரு பிரபல மருத்துவமனையில் அண்ணாவை அட்மிட் பண்ண வேண்டி வந்தது. நான் முதலில் போய் அவருக்காக அட்மிஷன் போட்டேன். சிறிது நேரத்தில் இளங்கோவன் அவரை மருத்துவமனை அழைத்து வருவதாக ஏற்பாடு.

அண்ணாவால் மாடியில் இருந்து கீழே இறங்க முடியவில்லையாம். எனவே, இளங்கோவன் அவரைத் தூக்கிக் கொண்டு வந்து, காரில் அமர்த்தி விட்டு, டூவீலரில் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தார்.

சற்று நேரத்தில் அண்ணா காரில் மருத்துவமனை வந்தடைந்தார். காருக்குள் அவர் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்ததும், இளங்கோவன், என்னிடம், ‘‘ஶ்ரீதர், இவர் முகத்தைப் பாருங்க. எப்படி உட்கார்ந்திருக்கார் பாருங்க. உபன்னியாசம் பண்ண வர்றவங்க மாதிரி ஜம்முனு வர்றார். இவரைப் பார்த்தா யாராவது உடம்பு சரியில்லாதவர்னு சொல்லுவாங்களா?’’ என்று கேட்டார்.

இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

ஒருமுறை ஓர் அன்பர், பெரியவாளிடம், ‘‘ஞானிக்கு வலி உண்டா?’’ என்று கேட்டாராம்.

அதற்குப் பெரியவா, ‘‘வலி உண்டு, வேதனை இல்லை’’ என்று பதில் சொன்னாராம். இது அண்ணாவுக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

அண்ணா என் உடைமைப் பொருள் (51): ஞானிக்கு வலி உண்டா? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *