அண்ணா என் உடைமைப் பொருள் (58): நந்தவனத்தில் ஓர் ஆண்டி!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்

anna en udaimaiporul 2 - 5
anna en udaimaiporul 2 - 2

அண்ணா என் உடைமைப் பொருள் – 58
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
– வேதா டி. ஸ்ரீதரன் –

அண்ணாவின் உழைப்பை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. கற்பனையே செய்ய முடியாத அளவு கடுமையான உடல்-மன-புத்தி ரீதியான உழைப்பு அது. பக்கம் பக்கமாக – மலை மலையாக – நுணுக்கி நுணுக்கி – பார்த்துப் பார்த்து – அணு அணுவாக ரசித்து – மிகுந்த ஈடுபாட்டுடன்…. இதுபோன்ற ஏராளமான அடைமொழிகள் மூலமாகவும் அவரது உழைப்பை முழுமையாக விவரித்து விட முடியாது.

அவரது எழுத்துப் பணி மட்டுமல்ல, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலும் திட்டமிட்ட ரீதியில் ஒழுங்குப்பாட்டுடன், அழகாக அமைந்திருக்கும். எல்லாச் செயல்களும் குறித்த நேரத்தில் நடைபெறும்.

அவர் அறையில் எந்தப் பொருளும் இடம் மாறாது. கடைசி பத்து வருடங்களில் புத்தக வாசிப்பு அறவே நின்று விட்டது. மிகச்சில புத்தகங்கள் மட்டுமே அப்போது அவரிடம் இருந்தன. அவை டீபாய் மீது வைக்கப்பட்டிருந்தன. அந்தப் புத்தகங்களை நான் எப்போதாவது எடுத்துப் புரட்டுவேன். மூன்றாவதாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை எடுத்தால், அதை மீண்டும் மூன்றாவதாகவே வைக்க வேண்டும்.

‘‘ஐயோ, தாங்கலைடா சாமி’’ என்று தான் சொல்லத் தோன்றும்!

சில சமயம் அண்ணாவைப் பார்க்கும் போது பாவமாக இருக்கும் என்று சொல்லி இருந்தேன்.

‘‘இந்த ஒட்டடைக் குச்சி தேகத்தால் எப்படி இவ்வளவு உழைக்க முடிந்தது?’’ என்று வியப்பு ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது. ஒட்டடைக் குச்சி மட்டுமல்ல, அந்த உடலுக்கான எரிபெருள் பெரும்பாலும் சுடு தண்ணீர் மட்டுமே. அத்தகைய கடுமையான உபவாசப் பழக்கம்.

பரிதாபம், வியப்பு முதலியவை எல்லாம் ஆரம்ப காலத்தில் எழுந்த உணர்ச்சிகள். நாளாக ஆக, அண்ணா எனக்கு வேடிக்கைப் பொருளாகி விட்டார். குறிப்பாக, இறுதி வருடங்களில் அவர் தனது வயிற்று வலியைப் பற்றிச் சிரித்துக் கொண்டே சொல்லும் போது நான் பெரிதாகச் சிரிப்பேன்.

நூல்களுக்காக அவர் உழைத்த உழைப்பு ஒருபுறம் இருக்கட்டும், அவரது குணங்களும் போற்றத் தக்கவையே. அண்ணா, எங்களில் சிலரை எப்போதாவது திட்டியதுண்டு, கண்டித்துப் பேசியதும் உண்டு. பொது வாழ்வில் இருக்கும் சிலரை விமர்சனம் செய்து பேசியதும் குறை கூறியதும் உண்டு, சிலருக்கு இத்தகைய விஷயங்களைக் கடிதம் மூலம் எழுதியதும் உண்டு.

ஆனால், அவர் யாருக்குமே கெடுதி நினைத்ததில்லை.

அவரது வாழ்வில் பிறருக்கு அவர் வழங்கிய அதிகபட்சத் தண்டனை, அவர்களைச் சந்திக்காமல் தவிர்ப்பது மட்டுமே.

பிறருக்கு அண்ணா கெடுதி நினைக்கவில்லை என்பதைப் போலவே, பிறர் அவருக்குக் கெடுதி நினைக்கவில்லை என்பதும் முக்கியமானது. முதல் புத்தகம் வெளியான போதே புகழின் உச்சிக்குப் போனவர், அவரது காலத்தின் அதென்டிக் ஆன்மிக எழுத்தாளர்… இப்படிப்பட்ட பிரபலமான மனிதர் மீது பலருக்கும் பொறாமை ஏற்படுவது இயல்பான விஷயமே. ஆனால், அண்ணா மீது பொறாமை கொண்டவர்கள் மிகவும் குறைவு என்பது ஆச்சரியம் தான்.

anna alias ra ganapathy9 - 3

அவரது எழுத்தையும் – குறிப்பாக, தெய்வத்தின் குரலையும் – சிலர் குறை கூறியதுண்டு. என் காதுபடவே அவ்வாறு பேசிய ஒருவரும் உண்டு. ஆனால், இதெல்லாம் மிகவும் குறைவு தான்.

பெரியவாளே அண்ணாவைக் கண்டித்திருக்கிறார் – தெய்வத்தின் குரல் என்ற தலைப்புக்காக.

தன்னை ‘‘தெய்வம்’’ என்று அண்ணா குறிப்பிட்டதில் பெரியவாளுக்கு உடன்பாடு இல்லையாம். (அனேகமாக, பெரியவாளுக்கு உடன்பாடு இல்லாத செயலை அண்ணா செய்தது இது மட்டுமே என்று நினைக்கிறேன்.)

அண்ணாவுக்குப் பணம் தராமல் ஏமாற்றிய ஒருசிலர் உண்டு.

எனினும், அவரை இழிவாகப் பேசியவர்கள் அல்லது அவரிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டவர்கள் யாருமே இல்லை.

மாறாக, அவரைக் கொண்டாடியவர்கள் தான் அதிகம். எத்தனையோ அன்பர்கள் மனதில் பெரியவாளுக்கு அடுத்த இடத்தில் வீற்றிருப்பவர் அண்ணா. ஆனால், ஒரு வித்தியாசம், அவர்கள் பெரியவாளைப் பலமுறை தரிசித்திருப்பார்கள். எத்தனையோ புகைப்படங்களிலும் பார்த்திருப்பார்கள். அண்ணாவை நேரில் சந்தித்திருக்கவும் மாட்டார்கள், புகைப்படங்களில் பார்ப்பதற்கும் வாய்ப்புக் கிடைக்காது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், அண்ணாவுக்குப் பணிவிடை செய்த அன்பர்கள் பலரின் கண்ணோட்டத்தில், அண்ணா, ‘‘வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர், நிறைவாக வாழ்ந்தவர்’’.

ராமாயண உபன்னியாசகர்கள் ஒரு மங்கள சுலோகம் சொல்வார்கள்:

சுந்தரே சுந்தரீ லங்கா சுந்தரே சுந்தரீ சீதா
சுந்தரே சுந்தரீ கதா சுந்தரே கிம் ந சுந்தரம்?

(சுந்தர காண்டத்தில் லங்கை அழகானது, சுந்தர காண்டத்தில் சீதை அழகானவள், சுந்தர காண்டத்தில் கதை அழகானது. சுந்தர காண்டத்தில் அழகில்லாதது எது?)

நிறைய அன்பர்களின் பார்வையில் அண்ணாவும் அப்படியே.

ஆனால், எனக்கென்னவோ அப்படித் தோன்றவில்லை.

‘‘நான் வாழ்கிறேன்’’ என்று சொல்கிறேன். அது சரியானது. அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் நன்றாக வாழ்கிறேனா, உருப்படியாக வாழ்கிறேனா என்பது வேறு விஷயம். ஆனாலும், ‘‘நான் எனது வாழ்க்கையை வாழ்கிறேன்’’ என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால், அண்ணா அவரது வாழ்க்கையை ‘‘வாழ்ந்தார்’’ என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அவரது உழைப்பைப் பற்றி நான் சொன்ன அனைத்தும் உண்மை. சொல்லாமல் விட்டது தான் அதிகம். ஆனால், அந்த உழைப்பில் அவர் இருந்தாரா என்பதே எனது கேள்வி.

நான் இந்தத் தொடர் எழுத ஆரம்பித்ததும், அன்பர் மோகன் தாஸ், என்னிடம், ‘‘அண்ணா என் உடைமைப் பொருள்’’ என்ற தலைப்புக்கான காரணத்தை வினவினார். ‘‘அவர் எனக்கு உடைமைப் பொருள் தானே?’’ என்று கேட்டேன். உடனே, மோகன், ‘‘நானும் அண்ணாவை அப்படித்தான் பார்க்கிறேன்’’ என்றார். அதற்கு நான், ‘‘நாம் இருவர் மட்டுமல்ல, இன்னும் நிறைய அன்பர்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் அவர் உடைமைப் பொருள் தான்’’ என்று குறிப்பிட்டேன்.

anna alias ra ganapathy5 - 4

இதற்குக் ஒரு காரணம், அண்ணா மீது எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள உரிமை.

ஆனால், அதை விட முக்கியக் காரணம், அண்ணா ‘‘தனக்கு உரியவராக இல்லாதது’’ தான்.

‘‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி’’

என்று ஒரு பிரபலமான சித்தர் பாடல் உண்டு.

‘‘பத்து மாதம் தாயின் கருவில் தவமிருந்து பெறப்பட்ட உடல் இது. அறியாமையால் ஏதேதோ வீண் செயல்கள் செய்து இந்த வாழ்க்கையை வீணடித்து விட்டு, இறந்து போகிறோம்’’ என்று இதற்குப் பொருள் சொல்கிறார்கள்.

இது நம்மைப் போன்ற பலரின் வாழ்க்கையை்ச சித்தரிப்பதாகச் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ, இதை வேறு விதமாகப் பொருள் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்தப் பாடல் நம்மைப் போன்றவர்களுக்குப் பொருந்தாது, அண்ணாவைப் போன்றவர்களுக்குத் தான் பொருந்தும் என்றும் தோன்றுகிறது.

ஏனெனில், ‘‘நான் வாழ்கிறேன்’’ என்று சொல்வது புரிகிறது. ஆனால், ‘‘அண்ணா வாழ்ந்தார்’’ என்று சொல்ல முடியவில்லை. அவர் வாழ்க்கையை ‘‘விளையாடினார்’’ என்று சொன்னால் சரியாக இருக்கும்.

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்து விட்டுப் போய் விட்டார்.

‘‘சொப்பு விளையாட்டு முடிஞ்சுது. கிளம்பறேன். டாடா பைபை’’ என்று சொல்லி வீட்டுக்குப் புறப்படும் குழந்தையைப் போலவே அவர் ‘‘பை பை’’ சொல்லி விட்டுக் கிளம்பியதும் இதையே காட்டுகிறது.

அவர் ‘‘இருந்தார்’’ என்று சொல்லப்பட்ட காலத்திலும் கூட அவர் ‘‘இல்லை’’ என்பதே எனது கருத்து. அண்ணா ‘‘வாழ்ந்த’’ வாழ்க்கை ஒரு கானல்நீர், மாயத்தோற்றம், பொய்க் கனவு.

ஏனெனில், அந்த வாழ்க்கையின் எந்த அம்சத்திலும் அவர் ஒட்டவே இல்லை.

தாமரை இலைத் தண்ணீர் தான்.


அண்ணா பற்றி எழுதும் விருப்பம், எழுதுவதில் தயக்கம் – ஆகிய இரண்டையும் பற்றிச் சொல்லி இருந்தேன்.

நான் என் செயலை எவ்வளவு தூரம் நியாயப்படுத்தினாலும், நான் அவரைப் பற்றிப் பொதுவெளியில் எழுதியது, அண்ணாவின் கண்ணோட்டத்தில், தவறானதாகவே தெரியும்.

அகோபில மடத்து ஜீயர் (பூர்வாசிரமத்தில் ரங்கராஜன்) பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவர் பல இடங்களில் பெரியவாளைப் பற்றி உயர்வாகப் பேசுவதுண்டு. அவர் ஒரு பாரம்பரிய குரு பீடத்தின் அதிபர். பெரியவா, அந்த சம்பிரதாயத்தில் இருந்து வேறுபடும் சம்பிரதாயத்தின் அதிபராக இருந்தவர். எனவே, பெரியவா பற்றி அந்த ஜீயர் அத்யந்த பக்தியுடன் பேசுவது அவர் சம்பிரதாயத்தைச் சேர்ந்த பலருக்கு உவப்பான விஷயமாக இருக்காது என்பது நிச்சயம்.

அவரது சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருபுறம் இருக்கட்டும், பெரியவாளுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாத விஷயம் இது என்பதை என்னாலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

எனக்கே புரிகிற இந்த விஷயம் அந்த ஜீயருக்குத் தெரியாதா?

ஆனாலும், அவர் பெரியவா பற்றிப் பேசி வருகிறார்.

இதற்கான காரணத்தை அவர் சொல்கிறார்: ‘‘பெரியவா பற்றி நான் பேசணும். அவரைக் கொண்டாடணும். இல்லேன்னா நான் க்ருதக்னன் (நன்றி கெட்டவன்) ஆயிடுவேன்.’’ இதைச் சொல்லும் போதெல்லாம் அவர் கண்களில் உணர்ச்சி பொங்கும், தாரை தாரையாகக் கண்ணீர் பெருகும்.

என் நிலையும் அது தான். எத்தனையோ அன்பர்களின் நிலையும் அது தான்.

அண்ணா, அண்ணா, அண்ணா என்று நான் அவரைக் கொண்டாட வேண்டும்.

இல்லாவிட்டால் நான் நன்றி கெட்டவன் ஆகி விடுவேன்.

தெய்வத்தின் குரலுக்காகவும், ‘‘ஸ்வாமி’’க்காகவும், இதர நூல்களுக்காகவும் அன்பர்கள் அனைவரும் அண்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும், அவரைக் கொண்டாட வேண்டும்.

அண்ணாவின் ‘‘வாழ்க்கை’’ மட்டுமல்ல, அவரது ‘‘பை பை’’ மரணமும் கொண்டாடப்பட வேண்டிய விஷயமே. அந்த மரணத்தில் துக்கம் இல்லை. ஆனந்தம் மட்டுமே இருந்தது.

‘‘தெய்வத்தின் குரல்’’ பாணியில் சொல்வதானால், அவரது பிறப்பு மங்களாரம்பம், மறைவு மங்களாரத்தி.

ஆம், அண்ணா மங்கள வஸ்து.

அது பூஜிக்கப்பட வேண்டியது, கொண்டாடப்பட வேண்டியது.


அண்ணாவைப் பற்றி எழுத வேண்டும் என்ற விருப்பம், கூடவே கூடாது என்ற எண்ணம் – ஆகிய இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவித்தேன் என்பது உண்மையே.

ஆனால், முழுக்க முழுக்க மனம் விரும்பியே இதை எழுதி இருக்கிறேன்.

ஒருவகையில், ‘‘நான்’’ எழுதினேன் என்று சொல்வது உண்மை அல்ல.

இந்தத் தொடர் வெளிவந்த இத்தனை நாட்களும் அண்ணா பற்றிய எண்ணங்கள் என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தன. பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன்னே அமர்ந்து உணர்ச்சி மேலீட்டில் தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

என்னை மீறிய ஏதோ ஒன்று தான் என்னை இயக்கி இந்தத் தொடர் உருவாகக் காரணமாக இருந்தது என்பது சத்தியம்.

‘‘நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:’’

என்ற நமஸ்கார அஞ்ஜலியுடன் நிறைவு செய்கிறேன்.

நமஸ்காரம் அவளுக்கு மட்டுமல்ல, அவளது அம்சங்களே ஆன உங்கள் அனைவருக்கும் தான்.

ச்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்.

அண்ணா என் உடைமைப் பொருள் (58): நந்தவனத்தில் ஓர் ஆண்டி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply