கம்பன் – கணக்கு சக்ரவர்த்தி

கட்டுரைகள்

வாலியும் மாயாவியும் கடும் சண்டை போடுகிறார்கள். சண்டை போட்டுக் கொண்டே மாயாவி ஒரு குகைக்குள் ஒளிந்து கொள்கிறான். வாலி தொடர்ந்து குகைக்குள் சென்று அரக்கன் மாயாவியை ஒழித்துக்கட்ட விரும்புகிறான். வாலி தனது தம்பி சுக்ரீவனை அழைத்து “தம்பி! நீ குகை வாயிலில் காவல் இரு. மாயாவி தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள். நான் உள்ளே சென்று அக்கொடியவனைக் கொன்று வருகிறேன்” என்று சொல்லி குகைக்குள் சென்றான். பல நாட்கள் ஆகியும் வாலியோ, அரக்கனோ வெளியே வரவில்லை. எத்தனை நாட்கள்? கம்பனிடம் கேட்போமா? “ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்” மாதம் போரிட்டான் என்கிறார் கம்பன்.
ஏழொடு ஏழ் என்றால் 7+7=14
இருது என்றால் இரு மடங்கு
இருது ஏழொடு ஏழ் என்றால் 2×14=28
இருது என்பது, twice, double என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழகு தமிழ்ச் சொல். இருபத்து எட்டு மாதங்கள் என்று உப்புச் சப்பில்லாமல் கூறுவதற்கு மாறாக என்ன அருமையான கவிதைக் கணக்கு பாருங்கள்!

சுக்ரீவன், ராமனுக்கு வாலியை எதிர்கொள்ளும் அளவிற்கு வலிமை இருக்கிறதா என்று சோதிக்க விரும்புகிறான். மராமரத்தில் ஒன்றைத் துளைத்து உன் வலிமையைக் காட்டு என ராமனை வேண்டுகிறான். மராமரங்கள் எத்தனை?

இதோ கம்பனின் கூற்று:
“ஐந்தினொடு இரண்டின் ஒன்று உருவ உன் அம்பு போகவே!”
ஏழு மராமரங்கள் என்பதை 5+2 என்கிறார் கம்பர்.

அனுமனை எதிர்த்துப் போரிட அக்ஷய குமாரன் பெரும்படையுடன் புறப்படுகிறான். அவனுடன் “நான்கு லட்சம்’ வீரர்கள் செல்கின்றனர். “நான்கு லட்சம் என்று கூறினால் கம்பன் எப்படி கணக்குச் சக்ரவர்த்தி ஆக முடியும்! எனவே “ஈர் இரண்டு இலக்கம்” வீரர்கள் என்கிறார்.

இன்னொரு இடத்தில் ஒரு பெரிய கணக்கையே போடுகிறார் கம்பர்.
ஜம்புமாலி அனுமனை எதிர்க்கச் செல்கிறான். அவனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என பின் தொடர்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் எத்தனை எண்ணிக்கை சென்றன?

கம்பனின் அருமையான கணக்குக் கவிதை இதோ.
“ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடந்தேர் அத்தேர்க்கு
ஏயின இரட்டியானை, யானையின் இரட்டிபாய் மா,
போயின, பதாதி சொன்ன புரவியின் இரட்டிபோலாம்
தீயவள், தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை”

ஐந்தாயிரத்தொடு ஒரு ஐந்தாயிரம் = 10000/ தேர்கள்.
அதில் இரட்டி = 20000 யானை.
அதில் இருது = 40000 பாயும் குதிரைகள்.
அதில் இருமடங்கு = 80000 பதாதிகள் அதாவது காலாட் படைகள்!

எத்தனை அருமையான கணக்கு!

(அமரர் ஆழ்வார்குறிச்சி பேராசிரியர் இல.ஜானகிராமன் சொன்ன தகவல்)
– ஸ்ரீ.ஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *