அறப்பளீஸ்வர சதகம்: செய்யக் கூடாதவை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஒண்ணாது

வஞ்சகர் தமைக்கூடி மருவொணா தன்பிலார்
வாசலிற் செல்லொ ணாது;
வாதெவ ரிடத்திலும் புரியொணா தறிவிலா
மடையர்முன் நிற் கொணாது;
கொஞ்சமே னும்தீது செய்யொணா தொருவர்மேல்
குற்றஞ்சொ லொண்ணா தயல்
கோதையர்க ளோடுபரி காசஞ்செ யொண்ணாது;
கோளுரைகள் பேசொணாது;
நஞ்சுதரும் அரவொடும் பழகொணா திருள்வழி
நடந்துதனி யேகொணாது
நதிபெருக் காகின் அதில் நீஞ்சல்செய் யொண்ணாது;
நல்வழி மறக்கொணாது;
அஞ்சாமல் அரசர்முன் பேசொணா திவையெலாம்
அறியும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

இங்குக் கூறப் பட்டவற்றையெல்லாம் அறிந்த, எமது தேவனே! வஞ்சகரைக் கூடிப் பழகல் தகாது, அன்பு இல்லாதவரின் வீட்டுவாயிலை அடைதல் கூடாது, எவரிடமும் வாதாடல்‌ கூடாது அறிவு இல்லாத பேதைகளின் எதிரிலும் செல்லக் கூடாது, சிறிதாகினும் தீய செயலைச் செய்தல் ஒவ்வாது, ஒருவர் மேல் குறைகூறல் கூடாது, பிற மங்கையருடன் நகைத்துப் பேசுதல் கூடாது, கோள் மொழிகள் கூறல் கூடாது, நஞ்சு தரும் அரவொடும் பழக ஒணாது – நஞ்சைத்தரும் பாம்பொடு பழகுதல் கூடாது, இருண்ட நெறியிலே தனியே நடந்து செல்லல் கூடாது, ஆறு பெருகிச்சென்றால் அதை நீந்திச் செல்லுதல் கூடாது, நன்னெறியை மறத்தல் கூடாது. அரசரிடம் அச்சமின்றிப் பேசுதல் கூடாது.

இங்குக் கூறப்பட்டவை செய்யக் கூடாதவை.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply