அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஆகாதவை

உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசி
உறவாடும் உறவும் உறவோ?
உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோ
றுண்டவர்க் கன்னம் ஆமோ?
தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவரு
தக்கபயிர் பயிரா குமோ?
தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்
தானையும் தானை யாமோ?
விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வரு
விருப்பமும் விருப்ப மாமோ?
வெகுகடன் பட்டபேர் செய்கின்ற சீவனமும்
மிக்கசீ வனமா குமோ?
அள்ளா திருங்கருணை யாளனே! தேவர்தொழும்
ஆதியே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

குறையாத பேரருளாளனே!, அமரர் வணங்கும் முதல்வனே!, அருமை தேவனே!, மனத்திலே அன்பு இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும் உறவாகுமோ?, அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை
உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, ஊக்கமின்றி வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர் நல்ல பயன் தருமோ?, படைத்தலைவன் ஒருவன் இல்லாமல்
முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ?
பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும்
ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? மிகு கடன் கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?

உள்ளன்பில்லாதார் இடும் உணவு முதலாக இங்குக் கூறப்பட்டவை நலந்தராதவை ஆகும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply