அறப்பளீஸ்வர சதகம்: நல்துணை!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

இதற்கு இது வேண்டும்

தனக்குவெகு புத்தியுண் டாகினும் வேறொருவர்
தம்புத்தி கேட்க வேண்டும்;
தான்அதிக சூரனே ஆகினும் கூடவே
தளசேக ரங்கள் வேண்டும்;
கனக்கின்ற வித்துவான் ஆகினும் தன்னினும்
கற்றோரை நத்த வேண்டும்;
காசினியை ஒருகுடையில் ஆண்டாலும் வாசலிற்
கருத்துள்ள மந்த்ரி வேண்டும்;
தொனிக்கின்ற சங்கீத சாமர்த்தியன் ஆகினும்
சுதிகூட்ட ஒருவன் வேண்டும்;
சுடர்விளக்கு ஆயினும் நன்றாய் விளங்கிடத்
தூண்டுகோல் ஒன்று வேண்டும்;
அனற்கண்ண னே!படிக சங்கம்நிகர் வண்ணனே!
ஐயனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

(நெற்றியில்) நெருப்புக்
கண்ணுடையவனே!, படிகத்தைப்
போலவும் சங்கைப் போலவும் (வெண்மையான) நிறத்தவனே!,
தலைவனே! அருமை தேவனே!, தனக்கு மிகுந்த அறிவு இருந்தாலும் மற்றவரின் அறிவுரையையும் கேட்டுத் தெளிதல் வேண்டும், தான் பெரிய வீரனே ஆனாலும் தன்னுடன் படைகளைச் சேர்த்துக் கொள்வதும் வேண்டும், பெரிய புலவனானாலும் தன்னைவிடப் புலமையுடையோரை அடுத்தல் வேண்டும், உலகைத் தான் ஒருவனே ஆண்டாலும் தன் வாயிலில் ஓர் ஆராய்ச்சியுடைய அமைச்சன் வேண்டும். இசைப்பண்புடைய இசைப் புலவனே ஆனாலும் சுதிகூட்டித்தர ஒருவன் வேண்டும், ஒளிதரும் விளக்கேயானாலும் நன்றாக எரிவதற்குத் தூண்டுகோல் ஒன்றிருக்க வேண்டும்.

யாவருக்கும் எத்துறையினும் துணைவேண்டும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply