அறப்பளீஸ்வர சதகம்: புண்ணியம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

நற்சார்பு

காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய்புண் ணியம்;
கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய்புண் ணியம்;
பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
மேனிசெய் திடுபுண் ணியம்;
விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை
தேவனே!, பார்த்தற்கரிய பெரியோர்களின் சேவை கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும், அவர்கள் அருளுடன் கூறும்மொழியைக் கேட்கக் கிடைப்பது இரு காதுகளும் செய்த நல்வினையாகும்,
அவர்களுடைய புகழையே விரும்பிப் போற்றிடக் கிடைப்பது கூறினால்
வாய்செய்த நல்வினை ஆகும், அவர்களைத் தவறாமல் வணங்கக்
கிடைப்பது கைகள் பெரிதும் செய்து நல்வினையாகும், பயனற்ற
வழிகளிற் செல்லாமல் அவர்களுக்குத் தொண்டு செயக் கிடைப்பது தன்மெய்
செய்திட்ட நல்வினை ஆகும். விருப்பத்துடன் அவர் கூறியவாறு
நடந்திடும் பேறு கிடைப்பது முற்பிறப்பிற் செய்த பெரிய வினையாகும்.

பெரியோர்களைக் கண்டு பழகி அவர் சொற்படி நடந்து வருவது நல்லது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply