பொங்கல் பண்டிகை அன்று சூரிய வழிபாடு ஏன்?

கட்டுரைகள்

மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், “சூரியனின் பெருமைகள்’ கூறப்பட்டுள்ளன.

பாரதத்தில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், “மகர சங்ராந்தி’யாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே “பொங்கல் திருநாள்’ ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது பாரதத்துக்கான கோடையின் தொடக்கமாகும்.  கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த “மகர சங்கரமணம்’ என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக  சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக “உழவர் திருநாள்’ கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.

நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல  பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது.

கிரேக்க நாட்டினர் சூரியனை, “இவ்வுலகைப் படைத்தவர்’ எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல… கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.

வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, “சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்’ என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.

பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை “ஹோரஸ்’ என்றும், நண்பகல் சூரியனை “ஆமென்ரர்’ என்றும், மாலைச் சூரியனை “ஓசிரில்’ என்றும் அழைத்தனர். “டைஃபோ’ என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து, மாலையில் “ஓசிரிலை’ விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் “ஹோரஸ்’ அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

எனவே நாளது பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீச, சூரிய பகவான் திருவருள் பொழிவார்.

செய்தி :: http://www.dinamani.com/edition/story.aspx?artid=360717

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *