சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (21):  மாண்டவ்ய மகரிஷியை தண்டித்த நியாயம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
samskrita nyaya - Dhinasari Tamil

சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி – 21 
மாண்டவ்ய நிக்ரஹ ந்யாய: –

மாண்டவ்ய மகரிஷியை தண்டித்த நியாயம்

தெலுங்கில் – பி.எஸ். சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

“மனிதன் செய்த புண்ணியத்தையும் பாவத்தையும் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் கர்ம விதிப்படி அனுபவித்து தீர வேண்டும்” என்று கூறுவதே மாண்டவ்ய நிக்ரஹ நியாயம்.

மாண்டவிய முனிவரின் கதை மகாபாரதத்தில் சிறந்த கருத்தைக் கூறுகிறது.  அரச மாளிகையில் திருடிய செல்வத்தை மூட்டை கட்டிக் கொண்டு ஓடும் ஒரு திருடர் கூட்டம், அரச சேவகர்கள் துரத்தி வர, அந்த மூட்டைகளை காண்டவ வனத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த மாண்டவ்ய மகரிஷியின் ஆசிரமத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அரசு சேவகர்கள் மாண்டவ்ய மகரிஷியை திருட்டு கூட்டத்தைச் சேர்ந்தவராக எண்ணி, செல்வ மூட்டைகளோடு முனிவரை அரசரிடம் அழைத்துச் சென்றார்கள். அரசன் அந்த மகரிஷியை ஒரு குற்றவாளியாக எண்ணி சூலாயுத தண்டனை (கழிவில் ஏற்றும்படி) விதித்தார். சூலத்தை கீழிருந்து குத்திய போதும் அந்த முனிவர் இறக்கவில்லை என்று அறிந்த அரசன், தான் செய்தது தவறு என்று உணர்ந்து முனைவரிடம் மன்னிக்கும்படி வேண்டி, அவரை விடுவித்தான்.

மாண்டவ்ய மகரிஷி, தான் செய்யாத குற்றத்திற்கு இத்தனை பெரிய, கடினமான தண்டனை எதற்கு அனுபவிக்க வேண்டி வந்தது என்று எமதர்மராஜனை  அழைத்துக் கேட்டார். எமதர்மராஜன் கூறிய பதில்தான் இந்த நியாயத்திற்கு ஆதாரம்.

மாண்டவ்யர் சிறுவயதில், அறியாத பிராயத்தில் தட்டாரப்  பூச்சியின் வாலில் முள்ளைக் குத்தி விளையாடினார். அந்த சிறுவயது குறும்பு காரணமாக நிரபராதியாக இருந்தாலும் இந்த தண்டனை அனுபவிக்க வேண்டி வந்தது என்று எமன் விவரித்தான்.

அறியாமையால் சிறுவயதில் செய்த தவறுக்குக் கூட இத்தனை பெரிய தண்டனை   அனுபவிக்க வேண்டி வரும் என்பதே இந்த நியாயத்தின் பொருள்.

யதா தேனு சஹஸ்ரேஷு வத்சோ விந்தந்தி மாதரம்
ததா புராக்ருதம் கர்ம கர்தார மனுகச்சதி

ஆயிரக்கணக்கான பசுமாடுகள் இருந்தாலும் அதனதன் கன்று எவ்வாறு தன் தாயைத் தேடிக் கொண்டு சேருமோ அதேபோல் விதிப் பயன், செய்தவர்களைத்  தவறாமல் சென்று சேரும். அவரவர் செய்த கர்மாவை அவரவர் அனுபவிக்க வேண்டியதுதான்.

இந்த நீதியை அளிப்பதே மாண்டவ்ய  நிக்ரஹ நியாயம்.

‘நான் யாருக்கும் அபகாரம் செய்யவில்லை. எதனால் எனக்கு இத்தனை கஷ்டம் நேர்ந்தது?’ என்று எல்லோரும் நினைப்பார்கள். ‘கார்யா காரணத் தொடர்பு’ என்ற சித்தாந்தத்தை பாரதிய வேதாந்த சாஸ்திரம் போதிக்கிறது.

யோக சூத்திரங்கள், வைசேஷிகம், சாங்கிய சாஸ்திரம் போன்றவற்றில் இந்த சித்தாந்தத்தின் மீது விரிவான விவாதமும் விளக்கமும் உள்ளது. யாருக்காவது ஏதாவது கஷ்டம் நேர்ந்தால், ‘ஐயோ பாபம்’ என்று பரிதாபம் வெளிப்படுத்துவது எதனால் என்றால் மாண்டவ்ய நியாயத்தை நினைவு கொள்வதற்காகவே.

சனாதன தர்மம் அளிக்கும் சிறந்த விஞ்ஞானக் கொள்கை இது. சுவாமி விவேகானந்தரின் சீடரான மார்க்ரெட் (சகோதரி நிவேதிதை) தன் சந்தேகத்தை கேட்டார். “எனக்கு எதனால் இத்தனை கஷ்டங்கள்? தினமும் சர்ச்சுக்குச் சென்று மெழுகுவர்த்தி ஏத்துகிறேன். ஆனால் இறைவனை நம்பாதவர்கள் சுகமாக உள்ளார்களே?” என்று. பல கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்களால் தீர்க்க முடியாத சந்தேகத்தை அவருக்கு சுவாமி விவேகானந்தர் தீர்த்தார். முற்பிறவி, மறுபிறவி கொள்கை பற்றி அடிப்படை புரிதல் மார்க்ரெட் பிறந்த மதத்தில் இல்லை. கர்ம சித்தாந்தத்தை போதித்த சனாதன தர்மத்தை சகோதரி நிவேதிதா  பாராட்டிப் புகழ்ந்தார். கர்ம சித்தாந்தத்தை போதித்த மாண்டவய நிக்ரஹ நியாயத்தைப் பற்றிய சுவாமிஜியின் விளக்கம் அவரை மிகவும் ஈர்த்தது.

sringeri swamigal - Dhinasari Tamil

பாவத்தின் பலனைப் பற்றி சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமி தம் அனுகிரக உரையில், “பலருக்கும் பாவம் செய்வதில் அச்சம் எதுவும் இல்லாமல் விரும்பியது போல் நடந்து வருவதை உலகத்தில் பார்கிறோம்.   எதை வேண்டுமானாலும் கூறுவது, இம்சிப்பது, பொய்யுரைப்பது போன்றவை செய்தால் பாவம் வரும். அந்த பாவத்தின் பலனாக துயரத்தை அனுபவிக்க வேண்டி வரும். துன்பத்துக்கு காரணமானது இந்த பாவம். அதன் பலனிலிருந்து யாருமே தப்பிக்க இயலாது” என்றார்.

முற்பிறவியில் நாம் செய்த புண்ணிய பலன்கள், பாப பலன்கள் இரண்டுமே இந்த பிறவியில் சுக துக்கங்களாக நம்மிடம் வந்து சேர்கின்றன. ‘கொடுத்து வைத்தவன்’ என்ற சொல்லை அடிக்கடி கேள்விபடுகிறோம். முற்பிறவியில் பிறருக்கு தானம் செய்தவர்களுக்கு இந்த பிறவியில் உயர்ந்த உணவு கிடைக்கும். இந்த பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் மறுபிறவியல் செல்வந்தர்களாக மாறுவார்கள் என்பது மாண்டவ்ய நிக்ரஹ நியாயம்.

மாண்டவ்யர் ஜீவஹிம்சை செய்த பலனை எவ்வாறு அனுபவிக்க வேண்டி வந்ததோ, செய்த நற்செயல் கூட அதே போல் பின் தொடர்ந்து வரும் என்று கூறும் கதை இந்த நியாயத்தின் மற்றொரு கோணத்தைக் காட்டுகிறது.

ஒரு ஊரில் மகா கஞ்சன் ஒருவன் இருந்தான். பூனைக்கு கூட சோறு போடாதவன் அவன். செல்வந்தனே ஆனாலும் யாருக்கும் கொடுக்கும் புத்தி இல்லாதவன். அவனை சோதிப்பதற்கு சாட்சாத் இறைவனே பிச்சைக்காரன் போல் வந்து பிச்சை கேட்டார். அந்த மாயா பிட்சாபதியின் தொல்லை தாங்க முடியாமல் ஒரு காய்ந்து போன, தின்பதற்கு உபயோகமற்ற ரொட்டி ஒன்றை எடுத்து வந்து பிச்சைக்காரனின் தட்டில் போட்டான். அவன் செய்த முதல் தானம் அதுதான். சற்று காலம் கழித்து அந்த ஊரின் ஜமீன்தார் செய்த அறிவிப்பு இந்தக் கருமியை ஈர்த்தது.

ஒரு அமாவாசை இரவு அந்த ஊர் மயானத்திற்கு தனியாக முகம் மாத்திரம் தெரியும்படியாக உடலை மூடிக் கொண்டு இரவு முழுவதும்  மயானத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவருக்கு நூறு தங்கக் காசுகள் கொடுப்பதாக அரசன் அறிவித்தான். உயிரைப் பணயம் வைத்து தங்கக் காசுகளுக்கு ஆசைப்பட்டு போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தக் கஞ்சன் முன்வந்தான். அமாவாசை இருட்டில் மயானத்தில் அவனை ஒரு சாக்கு முட்டையில் கட்டினார்கள். நரிகளின் ஊளை, எரியும் சவங்களின் இடையில் தனியாக இந்த கருமியை விட்டுச் சென்றார்கள். அவனுக்கு அச்சமாக இருந்தாலும் ஓடிப்போக முடியாது. ஏனென்றால் அவனை சாக்குப்பையில் கட்டி இருந்தார்கள். அதற்குள் பெரிய மழை பெய்தது. இடி இடித்தது. ஒரு பெரிய இடி இடித்து மரத்தின் மீது விழுந்து மரம் எரிந்த காட்சியைக் கண்ணால் பார்த்தாரன். அவன் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது. மேலும் ஒரு இடி இடித்து   அவன் தலையை நோக்கி வந்தது.

அதற்குள் ஒரு உருண்டையான பொருள் வந்து அதனைத் தடுத்தது. அதனை சோதித்து பார்த்தபோது அது அவன் பிச்சைக்காரனுக்கு போட்ட ரொட்டி என்று தெரிந்தது. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உபயோகமற்ற ரொட்டியை தானம் செய்தாலே இறைவன் இத்தனை நல்ல பலன் அளிக்கிறானே என்று நினைத்தான். அப்போதிலிருந்து அவனிடம் இருந்த கஞ்சத்தனம் மாயமானது. ‘செய்த புண்ணியம் வீணாகாத பதார்த்தத்தைப்  போல ஜீவனைத் தொடர்ந்து வரும்’ என்று தெரிந்து கொண்டான்.

பாரதிய இலக்கியம் வேதாந்தத்தின் பெட்டகம். பாவத்தைக் குறித்த அச்சத்தை எடுத்துரைத்து மக்களுக்கு நல்வழியை போதிக்கிறது. நல்லது செய்தால் நன்மை நடக்கும் என்ற சத்தியத்தை முன்வைக்கிறது. இதனால் சமுதாயத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். ஆத்யாத்ம ராமாயணம், கருடபுராணம் போன்றவை. சுக துக்கங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்ற கர்ம சித்தாந்தக் கருத்தை போதிக்கின்றன.

சுகஸ்ய து:கஸ்ய ந கோஅபி தாதா பரோ ததாதீதி குபுத்திரேஷா |
அஹம் கரோமீதி வ்ருதாபிமான சகர்ம சூத்ர க்ரதிதோ ஹி லோக: ||

(ஆத்யாத்ம ராமாயணம் 2 -6 -5)

பொருள்: சுகமும் துக்கமும் யாரோ தருவதில்லை. யாரோ இவற்றை ஏற்படுத்தி இருக்கிறவர்கள் என்று நினைப்பது அறியாமை. நான் ஏதோ நல்லது செய்கிறேன் என்று நினைப்பது அகம்பாவம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த கர்ம வினையால் கட்டப்பட்டிருக்கிறான்.

த்ரிபிர்வர்ஷை: த்ரிபிர்மாசை: த்ரிபிர்பக்ஷை: த்ரிபிர்தினை: |
அத்யுத்மடை: பாபபுண்யை: இஹைவ பலமஸ்னுதே ||

(ஆத்யாத்ம ராமாயணம்)

பொருள்: மிகத் தீவிரமான பாவம் மற்றும் புண்ணியத்தின் பலன் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவோ மூன்று மாதங்களுக்குள்ளாகவோ, மூன்று நாட்களுக்குள்ளாகவோ கட்டாயம் அனுபவிக்க வேண்டி வரும்.

—ஸுபம்—

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply