லீலாசுகரின் ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
krishnakarnamrutha - Dhinasari Tamil

தெலுங்கில் : பமிடிபல்லி விஜயலக்ஷ்மி
தமிழில் : ராஜி ரகுநாதன்

ஸ்ரீகிருஷ்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடனே தேவகிக்கும் வசுதேவருக்கும் தன்  உண்மை சொரூபத்தோடு தரிசனமளித்து தன் அவதார ரகசியத்தை வெளியிட்டான். சதுர் புஜங்களுடன் தெயவீகமான திவ்ய ஒளியோடு காட்சி தந்தான்.

தேவகியும் வசுதேவரும் முற்பிறவியில் செய்த தவத்தின் பலனாக கண்ணன் அவர்களின் புதல்வனாக பிறந்ததாகத் தெரிவித்தான். பூர்வ ஜென்ம புண்ணியத்தின் பலனாக யசோதைக்கும் நந்தகோபருக்கும் கண்ணனை வளர்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது.  

அப்போது முதல் கோகுலமும், பிருந்தாவனமும், யமுனா நதியும் பாலகிருஷ்ணனின் விளையாட்டு மைதானங்களாயின. யசோதை நந்தன் கோகுலத்தில் கோபாலனாக வளர்ந்து வெண்ணை தின்று பல திவ்ய லீலைகளை ஆற்றினான். பூதனை முதல் பல அரக்கர்களை வதைத்து அனைவராலும் பாராட்டப்பட்டான். மாடு மேய்த்து, புல்லாங்குழல் இசையால் கோபால, கோபியர்களின் பேரன்பைப் பெற்றான். புனித பிருந்தாவன சஞ்சாரியாயாக, யமுனை நதியில் ஜடக்ரீடையாடி கோலோகத்தை பூலோகத்திற்கு இட்டு வந்தான்.

பால கோபாலனின் தெய்வீக லீலைகள், முரளி கான இனிமை, திவ்ய தேஜஸ், அளவு கடந்த வல்லமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட கோகுல வாசிகள் கண்ணனுக்கு ஆத்ம சமர்ப்பணம் செய்து கொண்டு தம்மை மறந்தார்கள். நந்தகோபாலனை வழிபட்டு உயவடைந்தார்கள்.

பாலகிருஷ்ணனின் தெய்வீக காதையை தவக் கண்களால் தரிசித்து கவிஞர்கள் பலர் கானம் இயற்றினார்கள். அவர்களில் லீலாசுகர் ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற நூலில் யோக மார்கத்தால் தரிசித்த பால கிருஷ்ண லீலைகளையும் தெய்வீக பிரகாசத்தையும் வாயாரப் புகழ்ந்து பாடினார்.

சுலோகம் –

சஜல ஜலதி நீலம் பல்லவீ கேளி லோலம்
ஸ்ருதி சுர தருமூலம் வித்யுதுல்லாஸி சேலம் |
சுரரிபு குலகாலம் சன்மனோபிம்பலீலம் 
நத சுர முனிஜாலம் நௌமி கோபால பாலம் ||

என்று பால கிருஷ்ணனை வணங்கினார்.

ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதத்தின் ஒவ்வொரு சுலோகமும் நம் செவிகளில் அமிழ்தைப் பொழிகிறது. உயிருள்ள சிற்பங்களாக நம் கண்ணெதிரே நின்று மனப்பலகை மேல் முத்திரை பதிக்கிறது. 

சுலோகம் –

அங்குல்ய க்ரைரருன கிரணைர்முக்த சம்ருத்தரந்த்ரம்
வாரம் வாரம் வதனமருதா வேணு மாபூரமந்தம் \
வ்த்யஸ்தாங்க்ரிம் விகசகமல ச்சாய விஸ்தாரி நேத்ரம்
வந்தே பிருந்தாவன சுசரிதம் நந்த கோபால சூனும் ||

சிவந்த கை விரல்களால் புல்லாங்குழலின் துளைகளை மூடித் திறந்து சிவந்த உதடுகளால் வேணுவிலிருந்து நவரசங்களை எழுப்பி வ்ரஜ வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியபடி ஆனந்த கோபால பாலன் பிருந்தாவனத்தில் சஞ்சரிக்கையில் பூமாதேவி ஆனந்தத்ததால் உளம் குளிர்ந்தாள்.

சுலோகம் –

பீடே பீடநிஷண்ண பாலககளே திஷ்டன்ஸ கோபாலகோ
யந்தாந்திஸ்தித துக்த பாண்ட மவக்ரிஷ்யா ச்சாத்ய கண்டாரவம் |
வக்ரோபாந்த க்ருதாஞ்சலி: க்ருத சிர: கம்பம் பிபன்யபய:
பாயாதாகத கோபிகா நயன யோர்கண்டூஷ பூத்காரக்ருத் ||

பால கிருஷ்ணணனின் சிறு வயதுக் குறும்புகளை கண்ணெதிரில் கொண்டு வருவதில் தேர்ந்தவர் பக்தலீலாசுகர். மேற்சொன்ன சுலோகத்தில் குறும்புக் கண்ணன் இடையர்களின் வீட்டில் செய்த சேட்டைகளை எத்தனை அழகாக வர்ணிக்கிறார் பாருங்கள்!

சின்னக் கண்ணனையும் அவனுடைய குறும்புப் படையையும் கண்டாலே மாடுகள் உள்ள அனைவரின் உள்ளமும் நடுங்கும். அந்த திருட்டுக் குழந்தைகளுக்கு எட்டாமல் உறி கட்டி, அதை யாரேனும் தொட்டால் மணி அடிக்கும்படி ஏற்பாடு செய்து வைத்தார்கள். லீலா மானுட வேடதாரிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டா என்ன?

தான் நினைத்த வேலையைச் செய்யாமல் விட மாட்டான் கண்ணன். சத்தம் போடாமல் பலகை மேல் பலகை வைத்து அதன் மேல் ஒரு கோபாலனை நிற்க வைத்து, அவன் மீது கண்ணன் ஏறி நின்று மணி அடிக்காமல் கவனமாக உறி மீதிருந்த பாலைத் தானும் வயிறாரக் குடித்து தன் தோழர் குழாத்திற்கும் தரையாக ஊற்றினான். சத்தத்தைக் கேட்டு எழுந்து வந்த கோகுலப் பெண் பாலெல்லாம் கீழே சிந்தியிருப்பதைப் பார்த்தாள். அவள் சுதாரிப்பதற்குள் தன் குழுவோடு சேர்ந்து சிட்டாய் பறந்தான் சின்னக் கண்ணன். அந்த குறும்புக் கள்ளன் நம்மை ரட்சிப்பானாக என்பது மேற்சொன்ன சுலோகத்தின் பொருள்.

சுலோகம்:-

கைலாசோநவநீதிதி க்ஷிதிரியம் ப்ராக்ஜக்தம்ருல்லோஷ்டதி
க்ஷீரோதோ பினிபீத துக்ததி லஸத்ஸ்மேரே ப்ரபுல்லே முகே|
மாத்ரா ஜீர்ணதி யாத்ருடம் சகிதயா நஷ்டா ஸ்மித்ருஷ்ட: கயா
தூ தூ வத்ஸக ஜீவ ஜீவ சிர மத்யுக்தோ வதான்னோ ஹரி: ||

“கலயோ வைஷ்ணவ மாயமோ…. யசோதா தேவிகானோ”

என்று வியந்து போன யசோதம்மாவை கவி போத்தனா அழகாக வர்ணித்த கட்டத்தை லீலாசுகர் தன் தவச் சக்தியால் மிக உயர்ந்த பக்தியோடு அலங்கரித்துள்ளார் என்று எண்ணச் செய்கிறது மேற்கண்ட சுலோகம்.

பலராமன் யசோதையிடம், தம்பி மண் தின்றான் என்று கூறுவதையும், யசோதை விஷமம் செய்யும் புதல்வனிடம், “கண்ணா! வீட்டில் வெண்ணைக்கும் பாலேட்டுக்கும் குறைவா என்ன? ஏன் மண்ணைத் தின்றாய்?” என்று அதட்டி வாயைத் திறக்கச் செய்வதையும், பால கிருஷ்ணனின் வாயில் சகல விஸ்வங்களையும் பார்த்து வியந்து போவதையும் பல கவிஞர்கள் வர்ணித்துள்ளனர். 

லீலாசுகர் யசோதை ஏன் ஆச்சர்யப்பட்டாள், எதனால் அச்சப்பட்டாள் என்பதை அழகாக வர்ணிக்கிறார்.

நந்தநந்தனின் வாயில் வெண்மையான கைலாச பர்வதத்தைப் பார்த்து வெண்ணை உருண்டை என்றும், பாற்கடலைப் பார்த்து தினமும் அருந்தும் பால் என்றும் நினைத்தாளாம். “யார் கண் பட்டதோ? என் பிள்ளைக்கு அஜீரணமாகி விட்டது” என்று “தூ தூ” என்று திருஷ்டி எடுத்தாளாம். “சிரஞ்சீவ! சிரஞ்சீவ!” என்று ரக்ஷை கட்டினாளாம்.

ஆகா! எத்தனை அழகிய கற்பனை! எத்தனை இயல்பான வர்ணனை!

தாய் பிள்ளைகளை உறங்கச் செய்வதற்கு கதை சொல்வதும் பிள்ளைகள் ‘ஊம்’ கொட்டியபடியே உறங்குவதும் தாய்மார்கள் அனைவரும் அறிந்ததே! யசோதையும் கிருஷ்ணனை தூங்கச் செய்வதற்கு இராமாயண கதையைச் சொல்கிறாளாம்.

சுலோகம்:-

ராமோநாம பபூவ! ஹும்! தத பலா சீதேதி ஹும் தாம்பிது
ர்வாசா பஞ்சவடீதடே விஹாரதஸ்த ஸ்யாஹர த்ராவண |
நித்ரார்தஞ்ஞனனீ கதா மிதி ஹரே ர்ஹூங்காரத: ஸ்ருண்வத:
சௌமித்ரே க்வதனுர்தனுர் தனுரிதி வ்ய க்ராகிர: பாந்து ந: ||

“ராமன் என்ற ராஜா இருந்தான். அவனுக்கு சீதா என்ற மனைவி இருந்தாள். அவன் தந்தை அவனை மனைவியோடு காட்டிற்கு அனுப்பி விட்டாராம்” என்று அம்மா கூறும் கதையைக் கேட்டு கிருஷ்ணன் ‘ஊம்” கொட்டுகிறான். கதையை மேலும் சொல்லி, “ராமனும் சீதையும் பஞ்சவடி அருகில் வசித்து வருகையில் ராவணன் என்ற அரக்கன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான்” என்று கூறிய உடனே, “லட்சுமணா! எங்கே என் வில்? வில்லை எடுத்து வா!” என்றானாம். எத்தனை அழகிய கற்பனை!

லீலாசுகர் இது போன்ற பாலகிருஷ்ணனின் லீலைகளைக் தன் திவ்யமான பக்திக் கண்களால் பார்த்து தன்மயமானார். படிப்பவர்களையும் தன்மயத்தில் ஆழ்த்தினார்.

இவ்விதமாக 300 சுலோகங்களில் பலவிதமான முத்திரைகளோடு நந்தநந்தனனின் சித்திரத்தை வரைந்து நமக்களித்துள்ளார் லீலாசுகர். ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருத்தத்தை  அருந்திய பக்த ஜெய தேவர், நாராயண தீர்த்தர் போன்ற கவிஞர்கள் பலர் அதனை அனுசரித்து பால கிருஷ்ணனின் லீலைகளைப் பாடியுள்ளனர்.

மதுராவை வந்தடைந்தபின், அரசியல் நிபுணனாக மாறிய கம்ச சம்ஹாரனோ, துவாரகாதீசனோ, போர்க்களத்தில் நின்ற அர்ஜுனனை ஒரு சாக்காகக் கொண்டு உலகிற்கு கீதையை போதித்த ஜகத் குருவோ இவர் மனதில் இடம் பிடிக்கவில்லை. எட்டு மனைவியரோடு வாழ்ந்த அந்தப்புர நாயகனை விட பாமரர்களான கோபாலகர்களோடும் ஆத்மார்ப்பணம் செய்து கொண்டு தன்னையே அனைத்துமாக எண்ணிய கோபிகளுடனும் சேர்ந்து ஆடிப் பாடி மாடுகளை மேய்த்து தெய்வீக லீலைகளை விளையட்டாகச் செய்து காட்டிய வெண்ணை திருடும் கண்ணனை மட்டுமே அவர் தியானம் செய்தார். அந்த சின்னக் கண்ணனே, நந்தகோபனின் செல்லப் பிள்ளையே இவருடைய ஆராதனைக்கு உரியவனானான்.

சுலோகம்:-

முரளி நினதலோலம் முக்த மாயூர சூடம்
தளித தனுஜ ஜாலம் தன்ய சௌஜன்ய லீலம் |
ஹரஹித நவ ஹேலம் பத்மசத்மானு கூலம்
நவஜலதரநீலம் நௌமி கோபால பாலம் ||

“நௌமி கோபால பாலம்” என்ற மகுடத்தோடு ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதத்தில் உள்ள பால கோபாலனின் ரூப வர்ணனை ஓவியர்களுக்கும், நடிகர்களுக்கும் நாட்டியமணிகளுக்கும் உற்சாகத்தை அளித்தது என்றால் அது மிகையில்லை. முரளி கான லோலன், மயில் தோகை அணிந்தவன், துஷ்டர்களை அழித்தவன், லக்ஷ்மிக்குப் பிரியமானவன், மேக ஸ்யாமளன் என்று பலவித சிறப்பு அடை மொழிகளோடு பால கிருஷ்ணனை வர்ணிக்கும் பாக்களால் அர்ச்சித்தனர் புலவர்கள். பால கிருஷ்ணனின் லீலைகளை நினைத்து மகிழ்வது நம் வாழ்வை மேம்படுத்தும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply