ஆ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை எழுதிய ‘நாடும் நவீனரும்’ – அரசியல் தெளிவுக்கு… ஆன்மிக அறிவுக்கு..!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
naadumnaveenarum - Dhinasari Tamil

“அட… அவரு ஒரு குரூக்ட் மைண்ட் (Crooked Mind) ஆளுப்பா” என்று நம்மை விரோதியாய்ப் பார்க்கும் நண்பர், நாலைந்து வருடத்துக்கு முன் ஒருமுறை நம்மைக் குறித்து இன்னொருவரிடம் பாராட்டினார். இந்த க்ரூக்ட் மைண்ட் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்று நானும் டிக்‌ஷனரியைத் தேடினேன். அதில் கோணல் புத்தி என்று பொருள் போட்டிருந்தது. அப்ப சரிதான்… அது பாராட்டுதான் என்று எண்ணிக் கொண்டேன். 

இதற்கு இன்னோர் அர்த்தமும் உண்டு… அது குதர்க்க புத்தியாம். இன்னும் க்ரூயல் மைண்ட் என குரூர புத்தியும் இதில் சேர்த்தியாம்! அப்படியான குரூக்ட் மைண்ட் கொண்ட சிலருக்கு  தமிழில் குடமுழுக்கு – என்ற குதர்க்கமான, கோணலான, குரூரமான புத்தி தோன்றியிருப்பதால், நமது கோணல் புத்தியை இந்த விவகாரத்தில் செலுத்த வேண்டியுள்ளதோ என்றுகூட சில நேரம் சிந்திப்பேன்! 

இருந்தாலும் தர்ம நெறி நின்று, நேர் வழியில் யோசித்து, திருநெல்வேலிக்கு ‘நேர் வழி’பஸ்ஸில் ஏறினேன். இதற்காக சில வேலைகளைப் பார்த்த போது, புதிதாக சிலரது நட்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர் சீதாராம சர்மா. துடிப்பான இளைஞர். என் பேச்சைக் கேட்ட பின் அவர் சொன்னார்… “அண்ணா, நீங்க அவசியம் ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும். ‘நாடும் நவீனரும்’ என்ற ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை எழுதிய நூலின் பிடிஎஃப் அனுப்பித் தரேன்… உங்களைப் போன்ற கூட்டாளிக்கு அது அவசியம் தேவை” என்றார். 

இந்தத் தலைப்பு ஏற்கெனவே நான் கேள்விப் பட்டதுதான் என்றாலும் அந்தப் புத்தகத்தைப் படித்ததில்லை. எனவே அனுப்புங்க என்றேன். இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்நூலின் பதிப்புரையை இங்கே தருகிறேன். சமய வளர்ச்சிக்கு திருநெல்வேலி- தாமிரபரணி மண் ஆற்றியுள்ள தொண்டு அநேகம். ஒரு சில கோடலிக் காம்புகளைப் பார்த்துவிட்டு, வம்ச விருட்சங்களை எள்ளி நகையாடக் கூடாது.

இந்தப் பதிப்புரையை (1960ல் வெளியானது. அறுபதாண்டுகளுக்கு முன்பே கொடுக்கப்பட்ட பதில்களை) மாண்பமை நீதிமன்றம் நேரம் கொடுத்துப் படிக்க வேண்டும். அதற்கு, ஆன்மிக அன்பர்கள் முதலில் படித்து, இயன்ற அளவு பலருக்கும் சென்றடைய வழி கோல வேண்டும். இது அடியேன் தங்களிடம் முன்வைக்கும் பிரார்த்தனை. 

அன்பன்,
செங்கோட்டை ஸ்ரீராம்.


நாடும் நவீனரும்

  • சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை
  • திருநெல்வேலி பேட்டை

 பதிப்புரை

 இப்பொழுது நம் நாடு, அதிலும் குறிப்பாக நம் தமிழ்நாடு இருக்கும் நிலைமை உலகம் அறிந்ததே. தனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்றால் தானும் தன் மனைவியும் கூட்டுறவால் பிறந்திருக்கிறான் என்பது அவன் தெரியாமலில்லை. ஆனால்  ‘நான் பிறந்த காரணத்தை நானே தெரியுமுன்னே  ஏன் பிறந்தாய் மகனே!’ என்று சினிமாவில் பாடவே, அப்பாடலைத் தெருத்தெருவாய் வீடுவீடாய் ரேடியோ மூலமாகவும் ஒலிபரப்பி மூலமாகவும் கேட்டுக் குழந்தைகள் முதல் யாவரும் பாடி மகிழ்கின்றார்கள்.

இதுபோல நாட்டில் அநேக விஷயங்கள் பேசப்படுகின்றன. பத்திரிகைகளிலும் வெளியிடப்படுகின்றன. ‘பொருளாதாரம் என்றால் என்ன?’ என்று தெரியாதவர் பொருளாதாரத்தைப்பற்றிப் பேசுகிறார். அவரும் தம்மை ஓர் அரசியல் தலைவர் என்று சொல்லிக்கொள்கிறார். அப்படியே ஆலய வழிபாடு, சமயம், மொழி முதலிய விஷயங்கள் என்ன என்று தெரியாதவரும் அரசியலில் ஈடுபட்டுத் தமக்குச் செல்வாக்கு இருக்கிறது என்ற எண்ணத்தால் அவற்றைப்பற்றி மனம் போனபடி பேசுகிறார், எழுதுகிறார். அதனைப் பாமர மக்களும் நம்புகிறார்கள்

 ஒரு வியாதிக்கு மருந்து கொடுக்கவேண்டுமென்றால் வைத்திய சாஸ்திரம் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர் தவிர மற்றவர்கள் துணிந்து மருந்து கொடுத்து அந்த நோயாளியும் அந்த மருந்தைச் சாப்பிடுவாரானால் அவர் கதி என்னவாகும் என்று வாசகர்களே சிந்தித்து முடிவு செய்துகொள்ளலாம்.

 தமிழ்மொழி என்ன என்று தெரியாதவர்களும் அம்மொழியைப் பற்றிச் சண்டப்பிரசண்டம் செய்கிறார்கள். உதாரணமாக ‘நிலையம்’, ‘நிலயம்’ என்ற இந்த இரண்டு சொற்களில் எது சரி என்று தெரியாமல் இன்று ‘நிலையம்’ என்றே தமிழ்ப் பண்டிதர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும் எழுதி வருகிறார்கள். அதை மற்றவர்களும் ‘காப்பி’யடிக்கிறார்கள். தம்முடைய பெயரில்கூட சம்ஸ்கிருதம் கலக்கக்கூடாதென்று நினைத்த தீவிரத் தமிழன்பர் மறைமலையடிகள் கூட ‘நிலயம்’ என்றுதான் எழுதியிருக்கிறார்கள். அதுதான் சரியான முறையும் கூட.

 ‘ஹிந்து’ என்ற பதத்திற்கு பாரசீக பாஷையில் கரியன், பொய்யன், அடிமை என்று பொருளாம். இன்னும் சிலர் அதற்கு, ஒதுக்கப்பட்டவர்கள், பிரஷ்டர் என்றும் பொருள் சொல்கிறார்கள். முழு விபரம் இப்புத்தகம் 115ஆம் பக்கம் பார்க்க. 

ஆனால், நம் தமிழ் நாட்டில் சைவ வைணவ ஆலயங்களை மட்டும் நிர்வகிக்க ஏற்பட்ட இலாக்காவுக்கு ‘ஹிந்து அறநிலையப் பாதுகாப்பு இலாகா’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இதில் வரும் ‘ஹிந்து’ என்ற பதம் என்ன பொருளில் வந்திருக்கிறது என்று அவர்களையே தான் கேட்கவேண்டும்.

 இப்படியே இன்னும் அநேக விஷயங்கள் இருக்கின்றன. சுயநலப்பிரியர்கள் மக்களிடம் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு நயம்படப் பேசி, அவர்கள் மனத்தில் விஷவித்துக்களை விதைத்துவிடுகிறார்கள். அதில் ஆலய வழிபாட்டு விஷயமும் ஒன்று.

 வானம் வறக்குமேல் சிறப்பொடு பூசனை செல்லாது என்பது வள்ளுவர் வாக்கு. இதிலிலிருந்து மக்கள் நலனுக்காகக் கோவில்களில் பூசனை முறையாக நடக்கவேண்டுமென்பது திருவள்ளுவர் திருவுள்ளம் என்று தெரியக் கிடக்கிறது. 

 ஆகவே தொன்றுதொட்டு ஆன்றோர் ஆலய வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள். அம் முறைப்படி நடந்து வந்த காலங்களில் மழையும் ஒழுங்காகப் பெய்தது. நாடும் செழித்திருந்தது. இப்பொழுது சில காலமாகக் கோவில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், ஏதோ வழிபாடு இருந்தாலும் பழைய முறைப்படி வேண்டாம் என்ற பலவற்றைக் கொள்கையாக வுடைய நாத்திகர்கள் ஆஸ்திகர்போல் ஆஷாடபூதி வேஷம் போட்டுக் கொண்டு ஆலய வழிபாட்டு முறையை நிந்திக்கவும், சில ஊர்களில் மாற்றியமைக்கவும், வேறு சில இடங்களில் வழிபாட்டு முறைகளைக் குறைத்து, அதற்குரிய பணத்தைப் பள்ளிக்கூடம் முதலானவகளுக்குச் செலவிடவும் முறைதவறி நடந்த காலத்திலிருந்து மழையும் பெய்கிறது,  ஆனால் முறை தவறிப்பெய்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதாவது அது வேண்டிய காலத்தில் பெய்யாமல் கெடுக்கிறது, வேண்டாத காலத்தில் பெய்தும் கெடுக்கிறது.

 எனவே, மக்கள் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பேசும் பேச்சும், எழுதும் எழுத்தும் அனுசரிக்கவேண்டியவைதானா என்று சிந்தித்துக் கையாள வேண்டிய நிலையில் இருக்கிறோம் நாம் இன்று. அச் சிந்தனைக்கு உதவி செய்வது இப்புத்தகம்.

 ஸ்ரீலஸ்ரீ ஈசான சிவாசாரிய சுவாமிகள் பேசும்பொழுது அடிக்கடி சொல்வார்கள்! ‘பயிர் தழைக்கவேண்டுமானால் தோன்றிய களைகளைப் பிடுங்கி எறியவேண்டும். எறிந்தாலல்லது பயிர் செழிக்காது. மேனி காணாது. அதுபோல ஆன்மலாபம் பெற விரும்புகிறவர்கள் தங்கள் மனமாகிய வயலில் நவீன கொள்கைகளாகிய களைகள் தோன்ற இடங் கொடுக்கக்கூடாது. எப்படியே தோன்றிவிட்டால் அந்த நிமிடமே அதைப் பிடுங்கி எறிய வேண்டும். இல்லையேல் ஆன்ம லாபமாகிய பயிர்களைத் தழைக்க விடாதபடி நவீன கொள்கைகளாகிய களைகள் கெடுத்துக் கொண்டே இருக்கும்.’ 

இக்காலத்தில் பத்திரிகைகளில் காணப்படும் சமயம் மொழி சம்பந்தமான செய்திகள் மக்கள் மனத்தில் களைகளை உண்டு பண்ணுவனவாகவே இருக்கின்றன; நன்மை செய்வன அல்ல. அச்செய்திகள் எப்படி என்னவிதமான தீமைகளைச் செய்கின்றன என்று சிந்தித்து அத்தீமைகள் நம் மனத்தில் இடம் கொள்ளாமல் காப்பதற்கும் இடங்கொண்ட தீமைகளைக் களைந்து நன்மை அடைவதற்கும் உறுதுணையாக இருப்பது இப்புத்தகம். 

 சைவ சமய அனுஷ்டானத்திற்கு இடையூறாகச் சமண மதமோ பெளத்த மதமோ மாயாவாத மதமோ தலையெடுத்து வந்த காலத்தில் அம்மதங்களைச் சைவ சமயாசாரியர்கள் நால்வர் தோன்றி, வாதில் வென்று, சிவபரத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறார்கள். சந்தானாசாரியர்களும் மற்றைச் சமயங்களின் குற்றங்குறைகள் என்ன; சைவத்தின் மேன்மை என்ன என்று எடுத்துக்காட்டிச் சிவஞானபோதம் முதலிய ஞானநூல்களை அருளிச் செய்தார்கள்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னே தோன்றி ஸ்ரீமத் சிவஞானசுவாமிகள் அந்நூல்களில் உள்ள விஷயங்களையும் தர்க்கங்களையும் இலக்கணம் இலக்கியம் முதலியவைகளையும் விளக்கி, திராவிடமாபாடியம் முதலிய பல நூல்கள் இயற்றி, சைவ சமயிகளுக்குத் தம் சமயத்தைப் பற்றியும் அச்சமயக் கடவுளாகிய சிவபெருமானு டையபரத்துவத்தைப் பற்றியும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக்காட்டித் திருக்கைலாய பரம்பரை துறைசையாதீனத்திற்கு ஞானபானுவாய் விளங்கினார்கள். அப்பெருமானாருடைய குருபூஜைதினம் சித்திரை ஆயில்யம் (4-5-1960).

இக்காலத்தில் மக்களால் மேற்கூறிய சமணம், பெளத்தம், மாயாவாதம், உலோகாயதம் முதலிய மதங்களில் எந்த மதத்தை இவர் சார்ந்தவர் என்று பலரைத் தெளிவாய்த் தெரிய முடியவில்லை. ஆயினும் அவர் ஒரு வரம்புமின்றி ஒவ்வொரு மதத்தின் சிலசில கொள்கைகளை ‘அவையே நல்ல கொள்கைகள்’ என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொள்வர். அவர் சைவ சமய வேஷத்தில் நின்று சைவ சமயக் கோயில்களிலேயே, சைவர்களுடைய செலவிலேயே பிரசாரம் செய்து பிழைத்து வருகிறார்கள். ஆகவே முற்காலத்தில் சமயாசாரியர்களும் ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளும் பரமத நிராகரணம் செய்து சுவமத ஸ்தாபனம் செய்ததுபோல அதே தொண்டை இக்காலத்திற்கேற்ற விதத்தில் இக்கால மக்கள் கேட்கும் கேள்விகளுக்குத் தகுந்தபடி தர்க்கரீதியாகப் பதிலெழுதி சைவஸ்தாபனம் செய்வதற்கு இந் நூலாசிரியர் சித்தாந்த பண்டித பூஷணம் பேட்டை ஆ.ஈஸ்வரமூர்த்திப் பிள்ளை அவர்கள் ஒருவரே வல்லார் என்பது இப்புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு நன்கு விளங்கும். 

நாட்டில் எங்காவது வேறு யாரும் இருக்கலாம். ஆனால் பத்திரிகைகளின் மூலமாகவோ, புத்தக ரூபமாகவோ பிரசங்கத்தின் மூலமாகவோ சைவத்தை எதிர்த்துப் பிரசாரம் செய்பவர்களுக்குப் பத்திரிகை வாயிலாக சுடச்சுடப் பதில் கொடுத்து சிவபரத்துவ நிச்சயம் செய்தவர் பிறரை நமக்குத் தெரியவில்லை. வேலையிலிருந்து ஓய்வெடுத்துகொண்ட பிறகும் வரம்பு கடவாமல் சைவசமய போதனை செய்துவரும் ஆசிரியர் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் சலியாத மன வலிமையையும் கொடுத்தருளும்படி எல்லாம் வல்ல சிவபெருமானைப் பிரார்த்திப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு என்ன கைம்மாறும் செய்ய முடியாத நிலையிலிருக்கிறோம். 

 1947வது வருஷ முதல் 1958 வது வருஷம்வரை பத்திரிகைகளில் வந்த அபத்தப் பிரசங்கங்களைக் கண்டித்து எழுதியவைகளின் தொகுப்பே ‘நாடும் நவீனரும்’ என்ற இப்புத்தகமாகும். சைவ சமயிகளில் பெரும்பாலார் தம் சமய உண்மைகளைத் தெரியாது விபூதி ருத்திராட்சம் அணிந்திருந்தாலும்கூடப் பிற சமயக் கொள்கைகளை அறியாமலே அனுஷ்டித்து வருபவர்களுக்கு அறிவுறுத்துவதற்கு இப் புத்தகம் தக்க உதவியாயிருக்குமாதலால் இப்புத்தகத்தை அச்சிட்டு இலவசமாகத் தகுதியுடைவர்களுக்கு வழங்கிச் சைவ சமயப் பிணக்கறுத்து, அவர்களைச் சிவபெருமானுடைய அடியவர்களாக்கித் “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற முதுமொழிக்கு இலக்காகத் திகழ்பவர்கள் நெல்லை நூல் வியாபாரம் சிவஸ்ரீ சி.ச. ஆழ்வாரப்ப பிள்ளை அவர்கள். தம்மைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதையோ எழுதுவதையோ விரும்பாதவர்கள். ஆனால், அவர்கள் செய்த நன்றியை நாங்கள் எடுத்துச் சொல்லாமல் இருந்தால் நன்றி மறந்த செயலுக்கு உட்படுவேமோ என்ற பயத்தில் இந்த இரண்டொரு சொற்கள் எழுதினோம். அவர்கள் வாழ்க பல்லாண்டு. வளர்க அவர்களது சிவத்தொண்டு. 

 இப்புத்தகத்தைப் பெறும் அன்பர்கள் தங்கள் அபிப்பிராயத்தை, சாதகமா யிருந்தாலும் சரி, பாதகமாயிருந்தாலும் சரி எங்களுக்கு எழுதியனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

4-5-1960 

சித்தாந்த சைவச் செந்நெறிக் கழகத்தார்,
78, கீழ்ப்புதுத் தெரு, திருநெல்வேலி டவுண். 

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply