பட்டர்பிரான் பாதம் பணிவோம்!

கட்டுரைகள்

சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த மூலவரான நரஸிம்மம் பெரிய பெரிய பெருமாள் என்றும், அதே சுவாதியில் அவதரித்த கருடன் பெரிய திருவடி என்றும் போற்றப்படுகிறார்கள். அதே ஆனி மாதம், சுவாதியில் அவதரித்த பட்டர்பிரான் கருடனின் அம்சமாக வணங்கப்படுவதோடு, “பெரியாழ்வார்’ என்றும் வைணவத்தால் புகழ்ந்துரைக்கப்படுகிறார்.

பெரியாழ்வாருக்கு மகளாய் அவதரித்த ஆண்டாள், அரங்கனை மணந்து, ஆழ்வாருக்கு “”திருமாலின் மாமனார்” என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தாள்.

ஆண்டாளை திருமாலின் திருக்கதைகளை சொல்லியே வளர்த்தார் பெரியாழ்வார். அதனால் ஆண்டாளுக்கு, ஆயவனான அரங்கன் மீது ஆசை ஏற்பட்டு, அது காதலாக மாறி, அவனைக் கரம்பிடிக்கும் பாக்கியமும் பெற்றாள்.

ஆண்டாள், விஷ்ணு சித்தரை ஒரு தகப்பனாக மட்டும் பார்க்காமல் தன் குருவாகவும் ஏற்றுக் கொண்டதால் ஆண்டாளுக்கு குருவருளோடு திருவருளும் கிட்டியது.

நாராயணனின் பெருமையை கூடல் மாநகர மன்னன் அமைத்திருந்த வித்வத் சபையில் நிரூபித்தார் பெரியாழ்வார். பாண்டியன் அமைத்த பொற்கிழி ஆழ்வாரின் திருவடியில் விழுந்தது. மன்னனுக்கோ மிக்க மகிழ்ச்சி. தன் சந்தேகம் தீர்த்த அந்தப் பெரியவரை “பட்டர்பிரான்’ என்று கௌரவப்படுத்தி ராஜாங்க மரியாதைகளுடன் அவரை யானை மீது அமரச் செய்து நகர் முழுக்க ஊர்வலம் வரச் செய்தான். அப்போது மேலும் ஓர் பேரதிசயம் நடந்தது. வானவெளியில் திருமால் கருடன் மீது ஏறி வந்து ஆழ்வாருக்குக் காட்சி தந்தான்.

“”பறவை ஏறு பரமபுருடா நீ என்னைக் கைக் கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும்பதமாகிவிடுமே” என்று தன் பொருட்டு கருடாரூடனாக காட்சியளித்த திருமாலின் அற்புதத்தைக் கண்டு மகிழ்ந்த ஆழ்வாரின் மனத்தில் ஒரு பயம் ஏற்பட்டது. பார் புகழ் பரந்தாமனின் இந்தக் காட்சியைக் காணும் உலகத்தோரால் கண்திருஷ்டி படுமே என்று கவலைப்பட்டார். உடனே வாழ்த்து சொல்லி பல்லாண்டு பாட ஆரம்பித்துவிட்டார். அவனுக்கு மட்டுமா பல்லாண்டு? அவன் திருமார்பினில் திகழும் திருமகளுக்கும், திருவாழியாழ்வானுக்கும், சங்காழ்வானுக்கும் பல்லாண்டு பாடினார்.

பெருமானுக்குப் பல்லாண்டு பாட தனக்கு எத்தகைய தகுதி உள்ளது என்பதை அவர் யோசிக்கவில்லை. பகவான் மீதிருந்த பரிவு ஆழ்வாரை பாட வைத்தது. இதனால்தான் பெரிய ஜீயர் மணவாள மாமுனிகள் அவரை “”பொங்கும் பரிவாலே பட்டர் பிரான் பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர்” என்று குறிப்பிடுகிறார்.

விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைவிட பெரியாழ்வாருக்கு கிருஷ்ணாவதாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். கிருஷ்ணனின் பால்ய லீலைகளைப் பாடியவர், தன்னை யசோதையாக பாவனை செய்து கொண்டு, அவனுக்கு நீராட்டல், பூச்சூட்டல், காப்பிடல் என்று திருவாய்மொழிகளை அருளிச் செய்துள்ளார்.

கிருஷ்ணாவதாரத்தைப் பாடும்போதுகூட அவன் மீதுள்ள பரிவை வெளிப்படுத்துகிறார் பெரியாழ்வார். ஆயவனின் அவதார நட்சத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் மாற்றிச் சொல்கிறார். அதாவது கிருஷ்ணனின் அவதார நட்சத்திரம் ரோஹிணி. அதை நேரடியாகச் சொல்லாமல் “”ஹஸ்தத்தின் 10ஆம் நாள்” என்று குறிப்பிடுகிறார். அவனுடைய அவதார நன்னாளை அறிந்துவிட்டால் கம்சனால் கண்ணனுக்கு ஆபத்து நேரிட்டுவிடுமே என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறார். “கம்சன் குழம்பிப் போகட்டும்’ என்பது ஆழ்வாரின் திருஉள்ளம். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து 10வது நட்சத்திரம் திருவோணம். ஓணத்திலிருந்து 10வது நட்சத்திரம் ரோஹிணி.

பெரியாழ்வாரின் இத்தகைய பரிவைக் கண்டுதானோ அவர் வளர்த்த பாவையை மணந்து அவரையே தனது மாமனாராக்கிக் கொண்டான் அந்த மாலவன்?

அப்படிப்பட்ட பெரியாழ்வாரின் அவதார நன்னாள் வருகிற 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமும் பட்டர்பிரான் பாதம் பணிவோம். பரமனின் அருள் பெறுவோம்.

கட்டுரை: வெள்ளிமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *