அழகென்ற சொல்லுக்கு முருகா!

கட்டுரைகள்

அந்த வகையில், ஆடிக் கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா.

சூரபத்மாதியர் செய்த கொடுமையால் தேவர்கள் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தனர். அவர்களின் இன்னல்களைக் களையத் திருவுளம் கொண்டார் ஈசன். அவருடைய நெற்றிக் கண்ணிலிருந்து வெளியான தீப்பொறியிலிருந்து ஆறு குழந்தைகளாக அவதரித்தார் ஆறுமுகப் பெருமான். அந்தக் குழந்தைகளுக்குக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் முருகனுக்குக் கார்த்திகேயன் என்ற திருப்பெயரும் ஏற்பட்டது. அதன்பின் ஆறுமுகக் கடவுள் சூரனை வதம் செய்து தேவர்களைக் காத்த வரலாற்றை புராணங்கள் எடுத்தியம்புகின்றன.

“கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோருக்குத் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இனிமையான வாழ்வு அமையும்’ என்று சிவபெருமான் கார்த்திகைப் பெண்களுக்கு அருள்பாலித்தார். எனவே ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாளாயிற்று. மேலும் தமிழ் மாதங்களில் “கிருத்திகை’ என்ற பெயரில் ஒரு மாதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப் பெருமான் அக்னியிலிருந்து தோன்றியவன் அல்லவா? அதை உணர்த்தும் வகையில் இம்மாதம் முழுவதும் தீப ஒளியால் இறைவனை வழிபாடு செய்தால் வாழ்வில் ஒளி பிறக்கும்.

வேத காலத்தில் கிருத்திகை நட்சத்திரமே முதலாவதாக இருந்தது. இது அம்பா, துலா, நிதத்னி, அப்ரயந்தீ, மேகயந்தீ, வர்ஷயந்தீ, சுபணிகா ஆகிய ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். வேத நெறியில் ஒழுகும் அந்தணர்கள் கார்ஹபத்யம், ஆஹவனீயம், தட்சிணாக்னி ஆகிய மூன்று அக்னி கொண்டு யாக யக்ஞாதிகளை, வேத வேள்விகளைச் செய்வர். “”மூன்று வகை குறித்த முத்தீச் செல்வத்து இரு பிறப்பாளர்” என்று இதனை நக்கீரர், திருமுருகாற்றுப்படையில் போற்றுவார்.

இந்த யாகங்கள் ஆதானம் என்ற கர்மாவினால் செய்யப்படுகிறது.

கிருத்திகை நட்சத்திரம் அக்னியின் நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரத்தில் அக்னியை ஆதானம் செய்ய வேண்டும் என்றும் வேதம் கூறுகிறது. ஏனெனில் நட்சத்திரங்களின் முகம் கார்த்திகை. மேலும் மற்ற நட்சத்திரங்கள் ஒன்று, இரண்டு, மூன்று அல்லது நான்கு நட்சத்திரங்களின் கூட்டமாகும். ஆனால் கிருத்திகை நட்சத்திரம் மட்டும் ஏழு நட்சத்திரங்களின் கூட்டமாகும். எனவே, அதில் ஆதானம் செய்பவரும் அவரது வம்சத்தாரும் அளவற்ற நன்மைகளை அடைகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. எனவே அவ்வளவு சிறப்புடையது கார்த்திகை நட்சத்திரம்.

“ஸ்ரீசுப்ரமண்ய கடவுள் úக்ஷத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்’ என்னும் பிரபந்தத்தில் காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் “”கார்த்திகை மலை” என்னும் தலத்தை ஒரு பாடலில் போற்றுகிறார். இது முருகன் தவமிருந்து சிவபெருமானை அர்ச்சனை செய்து வழிபட்ட மலையாகும். மஹாராஷ்டிர மாநிலத்தில் புனே அருகில் உள்ள பார்வதி மலையில் கார்த்திகேயன் கோயில் உள்ளது. இதனை கார்த்திகை மலை என்று அழைக்கிறார்கள்.

அனைத்து சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் ஆடிக் கிருத்திகையன்று பக்தர்கள் பால்குடம் எடுத்து வருவதும், பல விதமான காவடிகள் சுமந்து வந்து தண்டபாணியை வழிபடுவதும் அரங்கேறுகிறது.

மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர் கண்ட சிறந்த நெறிகளே விரதங்கள் எனப்படும். இறைவனிடம் பக்தி பூண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப்போல ஒருவருக்கு வேறு எதுவும் துணை புரிவதில்லை. “வரிக்கப்படுவது விரதம்’ “உடலளவு விரதம்’ “காப்பது விரதம்’ என்ற ஆன்றோர் வாக்குகளை நாம் சிந்திக்க வேண்டும். புலன்களை வெல்லுதலும் ஆன்மாவின் வெற்றிக்கு உற்ற துணையாகும். “”புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்” என்பது முதுமொழியல்லவா?

விநாயகப் பெருமான் கூறியபடி கிருத்திகை விரதத்தை பன்னிரண்டு ஆண்டுகள் அனுஷ்டித்த நாரதர், முருகன் அருளால் தேவரிஷியாக உயர்ந்தார். இவ்விரதத்தை மேற்கொண்ட மனு என்பவன் மன்னன் ஆனான். எனவே கிருத்திகை விரதம் மிக மிக உயர்ந்தது. ஆகவே ஆடிக் கிருத்திகையில் நாமும் விரதமிருந்து ஆறுமுகனின் அருள் பெறுவோம்.

தகவல்: வெள்ளிமணி

https://dinamani.com/edition/Story.aspx?SectionName=Vellimani&artid=450061

Leave a Reply