ஆடி-18 அரங்கன் சீர் பெறும் காவிரி அன்னை!

கட்டுரைகள்

ஆடி மாதம் காவிரியில் நிறைந்து வரும் புதுவெள்ளம் புத்துணர்ச்சி தரும். சம்பா சாகுபடி முடிந்து அறுவடையான பின் வயல்களெல்லாம் உழப்பட்டு புதுத் தண்ணீரின் வரவுக்காகக் காத்திருக்கும். குறுவை சாகுபடிக்கு நாற்று நடவுப் பணிகள் தொடங்கும் நிலையில் ஆடி 18ஆம் பெருக்கு திருநாள் ஆன்மிக விழாவாக களை கட்டுகிறது. காவிரி அன்னைக்கு பூஜை செய்து, புதுத் தாலி முடிதல் இந்த விழாவின் முக்கிய அம்சம்.

ஆடிப்பெருக்கு நாளன்று சுமங்கலிப் பெண்கள், வீட்டில் தெய்வ வழிபாடு முடித்து காவிரிக் கரைக்கு வருவார்கள். தலை வாழை இலையில் மஞ்சள், குங்குமம், புது மஞ்சள் கயிறு, பூ மற்றும் பூஜைப் பொருட்களை எடுத்து வந்து, காவிரி அன்னைக்கு முதலில் பூஜை செய்வர். அதன்பிறகு, வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களின் கையால் மாங்கல்யத்தை புதுத் தாலிக் கயிறில் கோர்த்து அணிந்து கொள்வார்கள். மேலும் திருமண மலர் மாலைகளை வீடுகளில் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புதுமணத் தம்பதிகள், ஆடிப் பெருக்கு நாளில் அவற்றை காவிரியில் விடுவது வழக்கம்.

காவிரியும் சிவபெருமானின் ஜடாமுடியில் அமரும் சக்தி. இதனாலேயே தன் சகோதரன் ஸ்ரீரங்கநாதருக்கு அணி செய்யும் வகையில் கொள்ளிடம் எனப் பிரிந்து, ஸ்ரீரங்கத்துக்கு ஒரு மாலைபோல் வளைந்து செல்கிறாள் காவிரி. சகோதரிக்கு அளிக்கும் சகோதரனின் சீரைப் போல், ஒவ்வோர் ஆண்டும் ஆடிப் பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்துக்கு அரங்கநாதர் எழுந்தருளி காவிரி அன்னைக்கு சீர் அளிக்கிறார்.

அரங்கநாதரின் கோயிலில் இருந்து புதிய முறத்தில் பட்டுச் சேலை, மாலைகள், வளையல்கள், மஞ்சள், குங்குமம் போன்றவற்றை பெருமாளுடன் எடுத்து வருவர். கோயில் யானை மீது கொண்டு வரப்படும் இவை, அம்மா மண்டபத்தில் சுவாமியின் முன்பு வைக்கப்படும். அடுத்து ஆற்றுக்குள் யானை இறங்கி, முறத்துடன் அந்த மங்கலப் பொருட்களை ஆற்றில் விடும். இதனை காவிரித்தாய் தன் பிறந்த வீட்டு சீதனமாக ஏற்றுக் கொள்வாள். ஆடிப் பெருக்கில் அரங்கன் சீர் அனைவருக்கும் அனைத்து வளங்களையும் அருளட்டும்.

தகவல்: வெள்ளிமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *